close
Choose your channels

Gangs of Madras Review

Review by IndiaGlitz [ Friday, April 12, 2019 • தமிழ் ]
Gangs of Madras Review
Banner:
Thirukumaran Entertainment
Cast:
Kalaiyarasan, Ashok, Priyanka Ruth, Daniel Balaji, Velu Prabhakaran, Naren, Bagavathy Perumal
Direction:
C V Kumar
Production:
C V Kumar
Music:
Hari Dafusia, Santhosh Narayanan

வன்முறையின் உச்சக்கட்டம்

இயக்குனர் சி.வி.குமார் இயக்கிய 'மாயவன்' திரைப்படம் நவீன டெக்னாலஜியுடன் கூடிய கதையம்சம் கொண்டதால் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் அவர் இயக்கியுள்ள அடுத்த படம் தான் 'கேங்ஸ் ஆப் மெட்ராஸ்'. இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.

கல்லூரி மாணவி ஜெயா (பிரியங்கா ருத்) உடன்படிக்கும் இப்ராஹிமை (அசோக்) காதலிக்கின்றார். வீட்டில் பயங்கர எதிர்ப்பு இருந்தாலும் குடும்பத்தினரை விட்டு பிரிந்து முஸ்லீமாக மாறி ரஸியா என்று பெயரையும் மாற்றி இப்ராஹிமை திருமணம் செய்து கொள்கிறார். இப்ராஹிமுக்கு ராவுத்தரிடம் (வேலு பிரபாகரன்) வேலை கிடைக்கின்றது. இந்த நிலையில் திடீரென போலீசார்களால் இப்ராஹிம் என்கவுண்டர் செய்யப்பட, இந்த என்கவுண்டருக்கு காரணமே ராவுத்தார் என்பதையும், இப்ராஹிம் கொல்லப்பட்டதற்கான காரணத்தையும் அறியும் ரஸியா அதிர்ச்சி அடைகிறார். எனவே ராவுத்தரையும் அவரது இரண்டு மகன்களையும் கொலை செய்ய முடிவு செய்கிறார். அவர் ராவுத்தர் குடும்பத்தை பழிதீர்த்தாரா? அவருக்கு உதவியர்கள் யார் யார்? இப்ராஹிம் கொலையின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பதே மீதிக்கதை.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு ஆக்சன் கதைக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார் பிரியங்கா. முதல் அரை மணி நேரம் கணவரிடம் ரொமான்ஸ், அதன்பின் பழிவாங்கும் ஜான்சிராணியாக மாறியவுடன் முழுக்க முழுக்க சீரியஸாகவும் ஆக்ரோஷமாகவும், கண்ணில் ஒரு வெறித்தனத்தையும் காண்பித்துள்ளார். ஆக்சன் காட்சிகளிலும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். 

டேனியல் பாலாஜி வந்தவுடன் கதை விறுவிறுப்பாகிறது. ரஸியாவுக்கு பயிற்சி கொடுப்பது, அவரை வைத்து தனது சொந்த பழியை தீர்த்து கொள்வது என கச்சிதமான நடிப்பு அவருக்கு இருந்தாலும் அவருடைய கேரக்டரின் முடிவு ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

போலீஸ் கேரக்டரில் ஆடுகளம் நரேன், அமைச்சர் கேரக்டரில் பி.எல்.தேனப்பன் ஆகியோர் கச்சிதமாக நடித்துள்ளனர். பகவதி பெருமாளுக்கு இரண்டே இரண்டு காட்சிகள். அதிலும் வீரியமில்லை. 

ஷியாமலங்கன் இசையில் பாடல்கள் தேறவில்லை என்றாலும் ஒரு கேங்க்ஸ்டர் படத்திற்கான பின்னணி இசை ஓகே. குறிப்பாக முதல் பாடல் வேஸ்ட். படத்தில் இருந்து தாராளமாக அந்த பாடலை தூக்கிவிடலாம்.

பெரும்பாலான காட்சிகள் இருட்டில் இருந்தாலும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் குமாரின் நேர்த்தியான பணியை படம் முழுவதும் பார்க்க முடிகிறது. குறிப்பாக ராவுத்தரின் மூத்த மகனை கொல்லும் காட்சி,  படமாக்கப்பட்ட விதம் சூப்பர். ஒரு கேங்க்ஸ்டர் படம் 2 மணி நேரத்திற்கு மேல் என்பது கொஞ்சம் சலிப்படைகிறது. இன்னும் இருபது நிமிடங்களை எடிட்டர் ராதாகிருஷ்ணன் தனபால் கட் செய்திருக்கலாம். ராவுத்தரின் இரண்டாவது மகனுக்கும் பிரியங்காவுக்கும் நடக்கும் சண்டைக்காட்சியில் ஸ்டண்ட் இயக்குனர் நிமிர்ந்து நிற்கின்றார்.

இயக்குனர் சி.வி.குமார், இரண்டு கேங்க்ஸ்டர்களுக்கு இடையே நடக்கும் போட்டி, போர் ஆகியவற்றை திரையில் கொண்டு வர முயற்சித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'வடசென்னை' படத்தை ஒருசில காட்சிகளும் கதையின் முக்கிய புள்ளியையும் ஞாபகப்படுத்துகிறது. நாயகி பிரியங்காவின் தேர்வு, அவரிடம் இருந்து கொண்டு வந்த நடிப்புக்கு இயக்குனரை பாராட்டலாம். அதேபோல் இந்த கேங்க்ஸ்டர் தொழிலுக்கு ஏன் வந்தோம் என்று அந்த ஆறுபேர் கூறும் காரணங்கள் சூப்பர். ஒரு வசனகர்த்தாவாக இயக்குனர் இந்த காட்சியில் மிளிர்கிறார். 

மேலும் கதை ஒரே நேர்கோட்டில் நகர்கிறது. டுவிஸ்ட், திருப்புமுனை, மாஸ் காட்சிகள் இல்லாமல் ஒரு கேங்க்ஸ்டர் படமா? என்று யோசிக்க வைக்கின்றது. அடுத்து வரும் காட்சிகள் எளிதில் ஊகிக்கும்படி இருப்பதும் ஒரு மைனஸ். கிளைமாக்ஸில் போலீஸ் எடுக்கும் முடிவை சிறு குழந்தை கூட ஊகித்துவிடும். அதேபோல் உலக அளவில் ஹெராயின் கடத்தும் ஒரு கும்பல், ஒரு கேங்ஸ்டர் கும்பல், அமைச்சரின் அதிகாரம், போலீஸ் படை இத்தனையும் மீறி ஒரு பெண் பழிவாங்குறார் என்றால் காட்சிகளில் அந்த அளவுக்கு புத்திசாலித்தனம் இருந்திருக்க வேண்டும். பல காட்சிகள் நம்பும்படி இல்லாதது படத்தின் குறை.

இந்த படத்திற்கு சென்சார் 'ஏ' சர்டிபிகேட்டை விட அதிகமான ஒரு சர்டிபிகேட் இருந்தால் கூட கொடுத்திருக்கலாம். அந்த அளவுக்கு படத்தில் வன்முறை காட்சிகள். குடும்ப ஆடியன்ஸ்கள் தியேட்டர் பக்கம் தயவுசெய்து எட்டி கூட பார்த்துவிட வேண்டாம். 

மொத்த்ததில் வடசென்னை உள்பட இதுவரை கேங்ஸ்டர் படம் பார்க்காதவர்கள் இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

Rating: 2.5 / 5.0

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE

Get Breaking News Alerts From IndiaGlitz