சூப்பர் ஹிட் படத்தின் ஸ்கிரிப்டை 7 நாட்களில் எழுதி முடித்த கமல்ஹாசன்: ஆச்சரிய தகவல் 

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நேற்று இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுடன் சமூக வலைத்தளம் மூலம் உரையாடினார் என்ற செய்தி அனைவரும் தெரிந்ததே. இந்த உரையாடலின்போது கமலஹாசன் பல அபூர்வ தகவல்களை கூறினார். அவற்றில் ஒன்று கமலஹாசன் நடித்த சூப்பர் ஹிட் வெற்றி படம் ஒன்றின் ஸ்கிரிப்டை வெறும் ஏழு நாட்களில் எழுதி முடித்தார் என்பதுதான்

பொதுவாக ஒரு படத்தின் திரைக்கதையை எழுதி முடிக்க ஒரு வருடம் ஆகலாம் என்றும், சில ஸ்கிரிப்டுகள் முடிக்க 30 மாதங்கள் வரை எடுத்துக் கொண்டதாகவும் கூறிய கமல்ஹாசன், ‘தேவர் மகன்’ படத்தின் ஸ்க்ரிப்டை ஏழு நாட்களில் எழுதி முடித்ததாக கூறினார்.

சிவாஜி கணேசன் கமல்ஹாசன் நடிப்பில் பரதன் இயக்கிய தேவர் மகன் திரைப்படம் கடந்த 1992-ம் ஆண்டு வெளிவந்த நிலையில் இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை வெறும் ஏழே நாட்களில் எழுதி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கமல் தெரிவித்தார். இந்த படத்தில் இயக்குனராக பணிபுரிந்த நண்பர் பரதன், ஒரே வாரத்தில் இந்த படத்தின் ஸ்கிரிப்டை தரவில்லை என்றால் தான் இந்த படத்திலிருந்து விலகிவிடுவதாக கூறியதாகவும் அவர் கூறியதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு ஏழு நாட்களில் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை எழுதி முடித்ததாகவும் கூறியுள்ளார்

இப்போது தன்னிடம் யாராவது பெட்டி பெட்டியாக பணத்தை வைத்து ஒரு வாரத்தில் ஸ்கிரிப்ட் எழுத சொன்னால் தன்னால் முடியாது என்றும், ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு ஒரு உத்வேகத்துடன் எழுதியதுதான் ‘தேவர் மகன்’ ஸ்கிரிப்ட் என்றும் அவர் தெரிவித்தார்.