close
Choose your channels

Kolamavu Kokila Review

Review by IndiaGlitz [ Friday, August 17, 2018 • தமிழ் ]
Kolamavu Kokila Review
Banner:
Lyca Productions
Cast:
Nayanthara, Saranya Ponvannan, Yogi Babu, Jacqueline, Nisha
Direction:
Nelson
Production:
Lyca Productions
Music:
Anirudh Ravichander

கோலமாவு கோகிலா: நகைச்சுவை கொண்டாட்டம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த படம், ஏற்கனவே 'கல்யாண வயசு முதல்' அனைத்து பாடல்களும் ஹிட், பிரம்மாதமான புரமோஷன், என நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த கோகிலா பூர்த்தி செய்தாரா? என்பதை தற்போது பார்ப்போம்

அம்மா, அப்பா, தங்கை என சிறிய நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் கோகிலா கேரக்டரில் நயன்தாரா. ஓரளவுக்கு சுமாரான வருமானத்துடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென அம்மாவுக்கு கேன்சர் என்ற வகையில் பிரச்சனை வருகிறது. அம்மாவை குணப்படுத்த வேண்டும் என்றால் ரூ.20 லட்சம் செலவாகும் என டாக்டர் கூற, அம்மாவை காப்பாற்ற உறவினர், வேலை செய்யும் இடம் என பணம் கேட்டு அலைகிறார் நயன்தாரா. இந்த நிலையில் கோகைன் பவுடர் கடத்தும் கும்பலிடம் தற்செயலாக சிக்கும் நயன்தாரா, அந்த கும்பலை வைத்தே தனது அம்மா ஆபரேஷனுக்கு பணம் சேர்க்க முடிவு செய்கிறார். ஆனால் அந்த முடிவால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள், அந்த பிரச்சனையில் இருந்து அவர் வெளியே வர முயற்சிக்கும் போராட்டம்தான் இந்த படத்தின் கதை

இன்க்ரிமெண்ட் வேண்டும் என்றால் டேட்டிங் வரவேண்டும் என்று கூறும் மேலதிகாரியிடம் நயன்தாரா பேசும் ஒரே ஒரு வசனம் அவரது கேரக்டரை முதல் ஷாட்டிலேயே கோடிட்டு காட்டிவிடுகிறது. அதாவது அவரது அப்பாவித்தனமான முகத்தின் உள்ளே இருக்கும் இன்னொரு ஆக்ரோஷமான முகம். இந்த முகத்தை நயன்தாரா கிளைமாக்ஸ் வரை மெய்ட்டெய்ன் செய்து கொண்டு போவதுதான் நயன்தாரா நடிப்பில்  உள்ள சிறப்பு. காமெடி, செண்டிமெண்ட், ஆக்சன், வில்லனை மடக்கும் விதம் என அவரது கேரக்டர் செய்யும் ஒவ்வொரு செயலின்போதும் அந்த அப்பாவி முகம் மட்டுமே வெளியே தெரியும், ஆனால் அவருடைய கண்கள் இவை அனைத்தையும் மாறி மாறி செய்வது என்பது ஒரு மிகச்சிறந்த நடிகையால் மட்டுமே முடியும். குறிப்பாக 'அந்த இன்னொருவரையும் கொலை செய்தால்தான் நான் வெளியே போவேன்' என்று வில்லனிடம் நயன்தாரா கூறும் காட்சியில் தியேட்டரே சிரிப்பலையில் அதிர்கிறது.

யோகிபாபு மிக விரைவில் காமெடி ஹீரோ அந்தஸ்தை பெற்றுவிடுவார் என்பதற்கு இந்த படம் ஒரு சான்று. நயன்தாராவை ரூட் விடுவதும், அவரது உண்மையான சுயரூபம் தெரிந்து அதிர்வதும், கடைசியில் தயவுசெய்து என்னை ஆளை விட்ருமா? என்று கெஞ்சுவதும் என யோகிபாபுவின் காட்சிகள் அனைத்தும் காமெடி கலக்கல். 

விஜய்டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா பொன்வண்ணன் இருவருக்கும் கிட்டத்தட்ட பாதி படத்திற்கு மேல் நயன்தாரா டிராவல் செய்யும் கேரக்டர்கள். இருவருக்குமே காமெடி புதியது இல்லை என்பதால் கேரக்டரில் ஒன்றிவிட்டார்கள். ஆர்.எஸ்.சிவாஜிக்கு சின்ன கேரக்டர் என்றாலும் மனதில் பதியும் கேரக்டர். நான் கோகிலான்னு ஒரு பொண்ணை வளர்த்தேனே, அவ எங்கம்மா? என்று நயன்தாரா கேட்குமிடம் நெகிழ்ச்சி

அதேபோல் ஜாக்குலினை காதலிக்கும் அன்புதாசனும், டோனி கேரக்டரில் நடித்திருப்பவரும் வரும் காட்சிகளில் சிரித்து சிரித்து வயிறே வலிக்கின்றது. மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்பட அனைத்து கேரக்டர்களும் இயக்குனரால் சரியாக கையாளப்பட்டுள்ளது. போதைகும்பலை பிடிக்கும் போலீஸ் அதிகாரியான சரவணனுக்கு சிறப்பாக நடிக்க கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு நல்ல வாய்ப்பு

அனிருத்தின் இசையில் ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். கல்யாண வயசு பாடல் தவிர மற்ற பாடல்கள் ஆங்காங்கே சின்ன சின்ன பிட்டாக வருகிறது. அருண்காமராஜ் பாடிய கபிஸ்கபா பாடல் இடம் பெற்ற இடம் சூப்பர். அதேபோல் ஒரு காமெடி த்ரில் படத்திற்குரிய சரியான பின்னணி இசை.

இயக்குனர் நெல்சன் இந்த படத்தை முழுக்க முழுக்க நகைச்சுவை நோக்கத்துடன் கொண்டு செல்ல முயற்சித்தாலும் இடையிடையே சில காட்சிகள் காமெடியா? சீரியஸா என்பதில் பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஒரு பெண் தினமும் ஒரே பஸ்ஸில் ஒரே இடத்திற்கு சென்று டிபன்பாக்ஸில் கோகைன் கடத்துவது, பலவீனமான மூன்று பெண்கள் சேர்ந்து ஆறடி உயர ஆஜானுபாகு தோற்றத்தில் இருப்பவரை எளிதில் கொலை செய்வது, மும்பையில் இருந்து இந்தியா முழுவதும் கோகைன் கடத்தும் ஒரு கும்பலின் தலைவன் ஒரு அப்பாவி பெண்ணிடம் ஏமாறுவது போன்ற நம்பமுடியாத சிறுபிள்ளைத்தனமான காட்சிகளும் இந்த படத்தில் உண்டு. இந்த படத்தின் திரைக்கதையை முழுக்க முழுக்க காமெடி அல்லது முழுக்க முழுக்க சீரியஸ் என்ற பாதையில் கொண்டு சென்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதே நேரத்தில் வேனில் செல்லும் அந்த பத்து நிமிட காட்சிக்கு சிரிக்காமல் யாராலும் இருக்க முடியாது. லாஜிக்கை எல்லாம் மறந்துவிட்டு ஒரு காமெடி படம் என்ற ரீதியில் மனதை தயார் செய்து கொண்டு பார்த்தால் இதைவிட ஒரு சிறந்த காமெடி படம் இல்லை எனலாம். மொத்தத்தில் நயன்தாராவின் நடிப்பு, யோகிபாபுவின் காமெடி, ஜாலியான திரைக்கதைக்காக நிச்சயம் பார்க்கலாம். நல்ல டைம்பாஸ் எண்டர்டெயின்மெண்ட்

Rating: 3 / 5.0

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE

Get Breaking News Alerts From IndiaGlitz