Download App

Oh My Kadavule Review

ஓ மை கடவுளே  -  மாயை கலந்த வரம் 

காதல் படங்கள் குறிப்பாக காதலர் தினத்தன்று வெளிவருபவை இளைஞர்களால் என்றுமே வரவேற்கப்படுபவை. இந்த வருடம் காதலர் தின பரிசாக வரவிருக்கும் ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் காதல் திருமணம் புரிந்தவர்கள் விவாகரத்தை கடவுளே வந்து நிறுத்தினால் எப்படி இருக்கும் என்பதை சொல்ல முயன்றிருக்கிறார். படம் பார்க்கும் ரசிகர்கள பரவசமடைவார்களா அல்லது அட கடவுளே என்று அலறுவார்களா என்பதை பொறுத்து இருந்தே பார்க்கவேண்டும். 

அசோக் செல்வன் ரித்திகா சிங் மற்றும் ஷா ரா ஆகிய மூவரும் சிறு வயது முதலே ஒன்றாக படித்து ஒன்றாகவே சுற்றும் நண்பர்கள். ரித்திகாவின் தந்தை எம் எஸ் பாஸ்கர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க ரித்திகா அசோக்கையே திருமணம் செய்ய விரும்புவதாக சொல்ல கொஞ்சம் யோசித்த பிறகு அவரும் தலை அசைக்கிறார். வெவேறு மதங்களை சேர்ந்த இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் மணமுடிகிறார்கள். அசோக்கிற்கு மாமனார் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு வீடும் அவர் கம்பெனியிலேயே வேலையும் கொடுக்கிறார். தோழியை மனைவியாக பார்க்க முடியாமல் தவிக்கும் அசோக் தாம்பத்திய உறவை தவிர்ப்பதோடு போக போக வேலையும் பிடிக்காமல் மனைவியிடம் வெறுப்பாக நடந்து கொள்கிறார். சிறு வயதில் தான் காதலித்த இன்னொரு பள்ளி தோழி வாணி போஜனும் அசோக்கை சந்திக்க அவர் ரித்திகாவை விவாகரத்து செய்ய முடிவு செய்து கோர்ட்டுக்கு போகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் கடவுள் விஜய் சேதுபதி தோன்றி அசோக்கிற்கு தன் வாழ்க்கையில் தான் செய்த தவறுகளை திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பு தருகிறார் அதன் மூலம் அசோக் திருமணத்திற்கு சம்மதிக்கும் முன் இருந்த காலத்திற்கு செல்கிறார் சநதோஷத்துடன் ரித்திகாவுக்கு நோ சொல்லிவிட்டு வாணியை பின் தொடர்கிறார். அசோக் வாணியை கைப்பிடித்தாரா ரித்திகாவின் நிலை என்ன என்பதே ஓ மை கடவுளே படத்தின் மீதி கதை. 

சூது கவ்வும் தெகிடி போன்ற படங்களில் தன் நடிப்பு திறனை நிரூபித்த அசோக் செல்வனுக்கு இந்த படம் ஒரு பெரிய மைல் கல். சோம்பேறித்தனம் மிகுந்த பொறுப்பில்லாத இளைஞன் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்கிறார். ரித்திகா ஷாராவுடன் எதார்த்த நட்பு, வாணி போஜனை பார்த்து விடும் ஜொள்ளு, ரித்திகா சிங்கை திருமணம் செய்த பிறகு அவரை மனைவியாக பார்க்க முடியாமல் தவிப்பது, கடவுளிடம் மாட்டி கொண்டு விழிப்பது,  நிஜ காதலை கடைசியில் உணர்வது என்று எங்கேயுமே சறுக்காமல்மனதை கவர்கிறார்.  கவுதம் மேனன் முன்பு ஒரு நீண்ட லவ் பிரேக்கப் காட்சியை நடித்து காட்டும் இடத்தில கைதட்டும் பெறுகிறார் அசோக்.

ரித்திகா சிங் ஆண் தோழர்களுடன் சரக்கு கூட அடிக்கும் ஒரு நவீன பெண்ணாக திருமணத்திற்கு பிறகு ஏமாற்றத்தை அனுபவித்தும் பாலிய சிநேகிதன் மேல் தீராத காதல் கொண்ட அந்த அணுவை உணர்வு பூர்வமான நடிப்பாலும் முக பாவனையையும் கொண்டே கண் முன் நிறுத்துகிறார். உதட்டசைவு சில இடங்களில் இடிப்பதை தவிர்த்திருக்கலாம். வாணி போஜன் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு மிக இயல்பாகவும் அழகாகவும் நடித்திருக்கிறார். மணலில் தனியாக அமர்ந்து தன்னை பற்றி தன் தோழர்கள் சொல்வதை பெரிய திரையில் பார்த்து நெகிழ்ந்து அப்போது அங்கு வரும் காதலனை பார்த்து கலங்கும் இடத்தில நன்றாக ஸ்கோர் செய்கிறார். ஷா ரா வின் தேவையற்ற ஓவர் சேஷ்டைகளை கூட இந்த படத்தில் பொறுத்து கொள்ளக்கூடிய வைகையில் அவர் கதாபாத்திரம் அமைக்க பட்டிருக்கிறது. அவருக்கும் அஷோக்குக்கும் இருக்கும் நட்பை விட ரித்திகாவுடனான அவர் நட்பு அதிகம் ஈர்க்கிறது. எம் எஸ் பாஸ்கர் ரமேஷ் திலக் மற்றும் கஜராஜ் நடிப்பு கச்சிதம். சந்தோஷ் பிரதாப் ஒரு திருப்புமுனை கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். விஜய் சேதுபதி கடவுளாக வந்து அதிகம் ஆர்ப்பாட்டமில்லாமல் படத்துக்கும் பலம் சேர்த்து தன் ரசிகர்களையும் திருப்திபடுத்தி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். 

ஓ மை கடவுளே படத்தின் பெரிய பலம் திரைக்கதையில் இருக்கும் அந்த இளமை துள்ளல் தான். குறிப்பாக மாமனாரின் கக்கூஸ் தொட்டி தொழில்சாலையில் கதாநாயகன் படும் அவஸ்தை அரங்கை சிரிப்பொலியில் அதிர வைக்கிறது. ஒருவருக்கு இரண்டாம் முறை வாழ்க்கையை வாழ வாய்ப்பு கிடைத்தால் எப்படி உறவுகளின் இன்னொரு முகத்தை பார்க்க முடியும் என்கிற கதை கரு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.  ரித்திகா சிங் ஹை ஹீல்ஸ் செருப்பு,  டிவியில் வரும் வடிவேலு நகைசுவை,  வாணியின் திரைக்கதையிலிருந்து அவர் மனதை புரிந்து கொள்ளும் அசோக்,  எம் எஸ் பாஸ்கரை பற்றி அசோக் புரிந்து கொள்ளும் இடம், மற்றும் ரித்திகா அசோக்கின் அந்த கேரள பயணம் என்று படத்தில் நிறைய கவித்துவமான காட்சிகள ஆங்காகே தூவ பட்டிருக்கிறது. 

ஓ மை கடவுளே படத்தில் மைனஸ் என்று பார்த்தல் இடைவேளைக்கு பிறகு திரைக்கதையில் ஏற்படும் தொய்வு மற்றும் மெதுவாக நகரும் காட்சிகள் என்று சொல்லலாம். என்னதான் பாண்டஸி படத்தில் லாஜிக் பார்க்க கூடாது என்று சொன்னாலும் ரித்திகாவின் பாத்திரமே முற்பாதியில் பிற்பாதியில் முரணாக இருப்பது இடிக்கிறது. 

லியோன் ஜோசஃபின் பாடல்களும் இசையும் கச்சிதம் குறிப்பாக கதைக்கட்டுமா பாடல் காட்சி நகர்வுக்கு உதவுகிறது  மற்ற தொழில்நுட்ப அம்சங்கள் கதையின் தேவையை பூர்த்தி செய்திருக்கின்றன. புதுமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஒரு ஆழமான கருத்தை பாண்டஸி முலாம் பூசி முடிந்தளவுக்கு பொழுதுபோக்காக தந்து பாராட்டுக்குரியவராக தடம் பதித்திருக்கிறார். 

மொத்தத்தில் ஓ மை கடவுளே இளைஞர்களுக்கான காதலர் தின பொழுது போக்குக்கு ஒரு வரம் என்றே சொல்லலாம். 

Rating : 3.0 / 5.0