போலியோ தடுப்பு மருந்து: கொரோனாவைத் தடுக்க பயன்படுமா??? விஞ்ஞானிகளின் புது நம்பிக்கை!!!

  • IndiaGlitz, [Friday,June 12 2020]

 

“காசநோய் தடுப்பூசி (பிசிஜி) அதிகம் பயன்படுத்தப்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கிறது” - எனவே கொரோனா தடுப்புக்காக பிசிஜி தடுப்பூசியைப் பயன்படுத்தலாமா என்பது போன்ற ஆய்வுகள் உலக அளவில் பல நாடுகளில் நடத்தப்பட்டன. கொரோனா பரவல் தடுப்புக்காக ஆஸ்திரேலியாவில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு இம்மருந்தைப் பயன்படுத்தவும் செய்தனர். ஆனால் இது முழுவதும் உறுதிப்படுத்தப் படாத ஆய்வு என்பதையும் விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தற்போது போலியோ தடுப்பு மருந்து கொரோனா பரவலுக்கு தற்காலிக பாதுகாப்பை தருமா என்கிற நப்பாசையில் விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹெச்ஐவி வைரஸ் நோயை முதலில் கண்டுபிடித்த விஞ்ஞானி காலா மற்றும் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் (FDA) கான்ஸ்டான்டின் சுமகோவ் போன்றோர் தற்போது இந்த புதிய நம்பிக்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர். உலக அளவில் கொரோனாவிற்காக 30 க்கும் மேற்பட்ட முக்கிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக உலகச் சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டி இருந்தது. ஆனால் தடுப்பூசி மருந்துகள் எப்போது சந்தைக்கு வரும் என்பது சந்தேகமாக இருக்கும் நிலையில் இதுபோன்ற புது ஆய்வுகளில் ஈடுபடுவது ஒருவேளை பயன்தரலாம் எனவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

போலியோ தடுப்பு மருந்து உலகம் முழுவதும் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரு ஆண்டிற்கு குறைந்தது 1 பில்லியன் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் தயாரிப்பில் எப்போதும் உலக நாடுகள் விழிப்பாகவே இருந்து வருகிறது. வாய்வழியாக திரவ நிலையில் கொடுக்கப்படும் இந்த மருந்தின் விலை மிகவும் மலிவு. கொரோனா போன்ற வைரஸ் நகலை எடுத்து அதன் ஆற்றலைக் குறைத்து தடுப்பூசி மருந்து தயாரிப்பதை விட போலியோ மருந்தை மிகவும் எளிதாக தயாரிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், முன்னதாக போலியோ தடுப்பு மருந்து (OPV) பரவலான நோய்த்தொற்றுக்கு நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது என்றும் அதற்கான சான்றுகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

மேலும், கொரோனா SARS-Covid-2 வைரஸ் மற்றும் போலியோ இரண்டும் RNA தன்மைக் கொண்டவை. அதோடு போலியோ தடுப்பு மருந்து மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். அதனால் கொரோனாவிற்கு தற்காலிக பாதுகாப்பு மருந்தாக போலியோ தடுப்பு மருந்தைப் பயன்படுத்தலாம் என்ற முடிவிற்கு காலா மற்றும் சுமகோவ் வந்து உள்ளனர். இதுபோன்ற தடுப்பு மருந்துகளை சமூகத்தில் உள்ள 70% இல் இருந்து 90% மக்கள் எடுத்துக் கொள்வதால் மந்தை நோய்க்கு எதிரான தடுப்பாற்றல் இயல்பாக ஏற்பட்டுவிடும் எனவும் நம்பப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவரை கவனமாகப் பாதுகாப்பது, மேலும் தொற்றுக்கள் ஏற்படாமல் சமூக விலகலைக் கடைபிடிப்பது போன்ற வழிமுறைகளினால் கொரோனா நோயை கட்டுப்படுத்த முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

காலா மற்றும் சுமகோவ் கூறும்போது போலியோ தடுப்பு மருந்து மனித உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தாத ஒன்று. பெரியம்மை, தட்டம்மை போன்ற நோய்களுக்கு எதிராக பல நேரங்களில் இதுபோன்ற தடுப்பு மருந்துகள் பயன்கொடுத்து இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் வெறுமனே 50 விழுக்காட்டு மக்களுக்கு தட்டம்மை தடுப்பு மருந்து கொடுக்கும்போது அந்நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தவும் முடிந்தது. எனவே கொரோனா பரவலின் தடுப்புக்கு போலியோ தடுப்பு மருந்தை பயன்படுத்தலாம் என்ற கருத்தை காலா மற்றும் சுமகோவ் வெளியிட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது