close
Choose your channels

சுனைனா நடிக்கும் த்ரில்லர் படம் ரெஜினா: தயாரிப்பாளர்- இசையமைப்பாளர் சதீஷ் நாயர் தகவல்!

Wednesday, April 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சுனைனா நடிக்கும் த்ரில்லர் திரைப்படமான 'ரெஜினா’ படம் குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் சதீஷ் நாயர் கூறியிருப்பதாவது

நான் ஒரு தொழிலதிபர். திரைப்படம் என்பது என்னுடைய புது முயற்சி. ஒன்றரை வருடத்திற்கு முன்பு எஸ்என் ( SN youtube ) என்ற யூடியூப் சேனல் ஆரம்பித்து சுயாதீனப் பாடல்களைப் பதிவேற்றி வந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

எனது நண்பரும், இப்படத்தின் இயக்குனருமான டோமின் டி சில்வா இப்படத்தின் கதையை எனக்கு கூறினார். அப்போது தான் இந்த புதிய முயற்சியில் இறங்கலாம் என்று தோன்றியது. எனக்கு என்னுடைய இசைத்திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு வேண்டும், அதைவிட ஒரு நல்ல கதையும் வேண்டும். இதற்கான சந்தர்ப்பம் வந்ததால் இப்படம் உருவாகியது. ஆனால், இசையை நான் முறைப்படி கற்றுக் கொள்ளவில்லை.

ரெஜினா படத்தில் ‘சூறாவளி’ எனத் தொடங்கும் பாடலின் டியூனை நான் சுயாதீனப் பாடலுக்காக சேமித்து வைத்திருந்தேன். அப்பாடல் ஒரு அம்மாவும், மனநிலை குன்றிய பெண்ணிற்குமான பாடலாக வைத்திருந்தேன். இந்த இசையைக் கேட்டதும் இயக்குநர் இந்த படத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

முதலில் இந்த கதை வந்தவுடன் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் யார் என்று பார்த்தபோது, அப்பாவியான முகமும் இருக்க வேண்டும், அதிலிருந்து தன்னை முழுமையாக மாற்றி போராடக் கூடிய விதமாகவும் இருக்க வேண்டும். அதற்கு சுனைனா பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அவருடைய படங்களை நான் பார்த்திருக்கிறேன். அப்பாவித்தனம் அவர் முகத்தில் நிலைத்து இருக்கும்.

சுனைனாவுடன் இப்படத்தில் நிவாஸ் ஆதித்யன் வில்லனாக நடிக்கிறார். அனந்த் நாக் சுனைனாவின் கணவராக நடிக்கிறார். சண்டைப் பயிற்சி இயக்குனர் தீனாவும் நடிக்கிறார்.

இப்படம் பழிவாங்கும் திரில்லர் படமாக இருக்கும். சராசரியான குடும்பப் பெண் காணாமல் போன கணவனைத் தேடும் கதை தான் இப்படம். பணம் பலம், ஆள் பலம் இப்படி எந்த ஒரு உறுதுணையும் இல்லாமல் எப்படி சாதிக்கிறார் என்பது இப்படத்தின் கதை.

இப்படத்தில் பல திருப்பங்கள் இருக்கும். மற்றும் மியூசிக் திரில்லராகவும் இருக்கும். இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் விறுவிறுப்பாக இருக்கும்

பொள்ளாச்சியில் ஆரம்பித்து கேரளாவின் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இன்னும் 4 அல்லது 5 தினங்களில் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும்.

இயக்குநர் முதலில் என்னிடம் கூறும்போது பாடல்கள் தேவைப்பட்டால் வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன். கதையோடு பயணிக்கும் வகையில் தான் பாடல்கள் இருக்கும். 5 பாடல்களும் 5 விதங்களில் இருக்கும். ஆனால், கதைக்கும் பொருந்தும் வகையில் இருக்கும்.

தமிழில் வந்தனா சீனிவாசன், கல்பனா, சின்மயி போன்றோர் பாடியிருக்கிறார்கள். மலையாளத்தில் ரம்யா நம்பீசன், பாடல்கள் யுகபாரதி எழுதியிருக்கிறார். மலையாளத்தில் ஹரிநாகேஷ் எழுதியிருக்கிறார்.

இந்த தயாரிப்பு நிறுவனம் இப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து நிறைய படங்கள் தயாரிக்கும். இயக்குநர் தொழில்நுட்பத்தில் திறமையானவர். அவர் கூறியதால் சுனைனாவை தேர்ந்தெடுத்தோம். அவரும் நன்றாகவே நடித்திருக்கிறார். இவருடன் தீனா நடித்திருக்கிறார்.

கணவன், மனைவிக்குள் இருக்கும் ஆபாசமில்லாத அழகான காதலை பதிவு செய்யும் விதமாக இப்படம் இருக்கும். மேலும், இப்படம் யதார்த்தமான படம். ஒரு சராசரியான பெண்ணால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே வைத்து எடுத்திருக்கிறோம்.

இப்படத்தை திரையரங்கில் வெளியிடுவதா அல்லது ஓடிடி-யில் வெளியிடுவதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும்.

இவ்வாறு ரெஜினா படத்தின் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான சதீஷ் நாயர் கூறினார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.