close
Choose your channels

கோழிக்கோடு விமான விபத்துக்கு காரணமான டேபிள் டாப் ரன்வே!!! பதற வைக்கும் விபத்து பின்னணி!!!

Saturday, August 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோழிக்கோடு விமான விபத்துக்கு காரணமான டேபிள் டாப் ரன்வே!!! பதற வைக்கும் விபத்து பின்னணி!!!

 

நேற்று துபாயில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 விமானம் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது 35 அடி தாழ்வான பள்ளத்தில் விழுந்ததால் விமானம் இரண்டாக உடைந்தது. இந்த விபத்துக்கு மோசமான வானிலை மற்றும் கனமழையும் காரணமாகக் கூறப்படுகிறது. கனமழையால் விமான ஓடுதளம் ஈரமாக இருந்ததாகவும் இதனால் விமானம் வழுக்கி 35 அடி பள்ளத்தில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தவிர மற்றொரு முக்கியக் குற்றசாட்டையும் சில வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கரிப்பூர் விமான நிலையத்தின் விமான ஓடுதளம் மலைக் குன்றின் மீது அமைந்திருக்கிறது. இப்படி உயரமான மலைக்குன்றின் மீது அமைக்கப்பட்டு இருக்கும் விமான ஓடுதளங்கள் டேபிள் டாப் ரன்வே (Tabletop Runway) என அழைக்கப்படுவதும் உண்டு. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தின் மங்களூர் விமான ஓடுதளம் இப்படித்தான் ஆரம்பத்தில் இருந்தது. இதனால் கடந்த 2010 ஆம் ஆண்டு படு பயங்கரமான விமான விபத்து நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த விபத்தை நினைவுப்படுத்தும் விதமாக தற்போது கோழிக்கோட்டில் விமான விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

டேபிள் டாப் ரன்வே விமான ஓடுதளங்கள் பொதுவாக பள்ளத்தாக்குகள் மற்றும் உயரம் குறைந்த பகுதிகளை ஒட்டி அமைந்திருப்பதால் ஆபத்து நிறைந்ததாகக் கருதப்படுகிறது. இந்த விமான ஓடுதளங்களில் மிகவும் அனுபவம் வாய்ந்த விமானிகள் மட்டுமே பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சற்று பிசகினாலும் விமானம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்தினை ஏற்படுத்திவிடும் என்பதால் எப்போதும் ஆபத்தான விமான ஓடுதளங்களாவே பார்க்கப்படுகிறது. மிசோரத்திலும் இதுபோன்ற விமான ஓடுதளம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக விமான ஓடுதங்கள் 3,150 மீட்டர் நீளத்தைக் கொண்டிருக்க வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் கரிப்பூர் விமான ஓடுதளத்தில் 2,850 மீட்டர் நீளம் மட்டுமே இருப்பதாகவும் தற்போது செய்திகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாது விமான ஓடுதளத்தின் இருபுறங்களிலும் குறைந்தது 100 மீட்டர் இடம் விடப்பட்டிருக்க வேண்டும். டேபிள் டாப் ரன்வே முறையில் அமைந்திருக்கும் கரிப்பூர் விமான ஓடுதளத்தில் வெறுமனே 75 மீட்டர் இடம் மட்டுமே இருப்பதும் மற்றொரு குறையாக அமைந்திருக்கிறது. மேலும் ஓடுதளத்தின் முடிவில் குறைந்தது 240 மீட்டர் இடைவெளி விடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் கரிப்பூர் விமான ஓடுதளத்தில் 90 மீட்டர் இடைவெளி மட்டுமே காணப்படுகிறது. இத்தனை குறைவான இடத்தில் விமானத்தை டேக் ஆஃப் செய்வதும் பின்பு இறக்குவதும் மிகவும் கடினமான காரியம்.

இதேபோல பல பயங்கரமான ஆபத்துக்களைக் கொண்டிருந்த மங்களூர் விமான ஓடுதளம் கடந்த 2010 மே மாதம் ஏற்பட்ட விபத்துக்குப் பின்பு கூடுதல் இடத்துடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போதே கரிப்பூர் விமான ஓடுதளத்தைக் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கேரள அரசாங்கம் கரிப்பூர் விமான ஓடுதளத்தை சுற்றியுள்ள 385 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பு செய்து விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் விமான நிலையத்தை ஓட்டி 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருப்பதால் அவர்கள் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் அதனால் இத்திட்டம் நின்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கரிப்பூர் விமான நிலையத்தில் உள்ள லைட்டினிங் வசதிகள் குறித்தும் தற்போது வல்லுநர்கள் கடுமையான குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றனர். விமானங்கள் 200 அடியில் இருந்து தரையிறங்கும் போதே விமான ஓடுதளத்தை எளிதாக விமானிகள் அடையாளம் கண்டுகொள்வதற்கு வசதியாக மின்விளக்குகள் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இதிலும் கரிப்பூர் விமான நிலையம் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இப்படியான பல குறைபாட்டால் துபாயிலிருந்து புறப்பட்ட விமானம் நேற்று மாலை 7.30 மணிக்கு கரிப்பூர் விமான நிலையத்தில் 184 பயணிகளுடன் தரையிறங்க முற்பட்டு இதுவரை 18 பேர் உயிரிழந்ததாகவும் 120 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.