திரையரங்குகள் வேலைநிறுத்தம் மறுபரிசீலனையா? அபிராமி ராம்நாதன் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிமுறை நேற்று முதல் நாடெங்கிலும் அமலுக்கு வந்துள்ள நிலையில் ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி ஆகிய இரண்டையும் கட்ட வேண்டிய நிலையை எதிர்த்து வரும் திங்கள் முதல் திரையரங்குகள் மூடப்படும் என்று தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று முன் தினம் அறிவித்தார். இதனால் கடந்த வாரம் வெளியான 'இவன் தந்திரன்', 'அதாகப்பட்டது மகாஜனங்களே' ஆகிய படங்கள் உள்பட பல படங்களின் வசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அபிராமி ராமநாதன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சரக்கு, சேவை வரியால் பொழுதுபோக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏறக்குறைய டிக்கெட் கட்டணத்தில் 53 சதவீதம் அரசுக்கு செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் சார்ந்துள்ள இந்த சினிமா தொழிலில் இந்த நடைமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் எந்த விதமான உள்வரி விதிப்பு இல்லை. மற்ற மொழிப்படங்களுக்கு வரி விதித்து தமிழ் படங்களுக்கு மட்டும் இந்த வரி விதிப்பை தளர்த்தி இருக்கலாம். அதே வேளையில் அதிகபட்ச வரிவிதிப்பை ஹாலிவுட் உள்பட வெளிநாட்டு படங்களுக்கு சாத்தியப்படுத்தி இருக்கலாம்.
முதல்-அமைச்சரை சந்திப்பதற்கு முன்பு அமைச்சர்கள் ஜெயக்குமார், வீரமணி, வேலுமணி ஆகியோரை சந்தித்து பேசினோம். "முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் எங்கள் கோரிக்கைகளை பரிவுடன் கேட்டு அறிந்தார்கள். எனவே இந்த பிரச்சினையில் இன்று சுமுகமான முடிவு ஏற்படும் என்று நம்புகிறோம். ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையை தற்போது நிறுத்தி வைத்து இருக்கிறோம்.
தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அடங்கிய கூட்டு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. அதில், எங்களின் முடிவை அறிவிப்போம்" என்று கூறினார்.
இந்த கூட்டுக்கூட்டத்தில் சுமூக முடிவு ஏற்பட்டால் திரையரங்கு வேலைநிறுத்தம் மறுபரிசீலனை செய்யப்படும் என தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments