close
Choose your channels

தமிழக எல்லையில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள்? நிபா வைரஸ் எதிரொலியால் அச்சம்!

Monday, September 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நிபா வைரஸ் பரவலுக்குக் காரணமான பழந்தின்னி வவ்வால்கள் தமிழக-கேரள எல்லைப் பகுதியான நீலகிரியில் குவிந்து காணப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் எருமாடு பகுதியில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் அங்குள்ள யூகலிப்ட்ஸ் மரங்களில் தங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கத்தால் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 5 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்தச் சம்பவத்தை அடுத்து சிறுவனோடு தொடர்புடைய நூற்றுக்கணக்கான மக்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் சிறுவன் வவ்வால் கடித்திருந்த ரம்பூட்டான் பழங்களை தின்றதாலேயே நிபா வைரஸ் பரவியதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து விலங்குகள் கடித்த பழங்களை பொதுமக்கள் யாரும் உண்ண வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் திடீரென குவிந்து இருப்பது அதிகாரிகளை அச்சமடைய வைத்துள்ளது. மேலும் யூகலிப்டஸ் மரங்களில் தங்கியிருக்கும் இந்த வவ்வால்கள் இரவு நேரங்களில் உணவு தேடி ஊருக்குள் வருவதாகவும் மீண்டும் பகல் நேரங்களில் மரங்களிலேயே தங்கிவிடுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் நீலகிரி பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. மேலும் விலங்குகள் கடித்தப் பழங்களை யாரும் சாப்பிட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நிபா வைரஸ் கொரோனா வைரஸ் போன்று தீவிரத்தன்மை கொண்டிருக்கவில்லை என்றாலும் 10%க்கும் குறைவாக ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு இந்த வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் எனக் கூறப்படுகிறது.

மேலும் நோய்த்தடுப்பு மருந்து எதுவும் இல்லாத இந்த நிபா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை சிகிச்சை மருந்துகள் எதுவும் பரிந்துரைக்கப் படவில்லை. இந்தியாவில் கடந்த 2001, 2007 ஆகிய ஆண்டுகளில் மேற்கு வங்காளத்தில் இந்த வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் கேரளாவில் கடந்த 2018, 2019 ஆம் ஆண்டுகளில் நோய்த்தாக்கத்தை ஏற்படுத்தியது.

பன்றிகள் மற்றும் பழந்தின்னி வவ்வால்களால் பரவும் இந்த நிபா வைரஸ் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டால் குறைந்தது 4-14 நாட்களுக்குள் தீவிர நோய்த்தொற்றை ஏற்படுத்திவிடும். மேலும் நிமோனியா, மூச்சுத்திணறல், காய்ச்சல், உடல்சோர்வு, தலைவலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது 50%-75% பேர் உயிரிழக்க வேண்டிவரும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் பழங்களை கழுவிவிட்டு சாப்பிட வேண்டும் என்றும் விலங்குகள் கடித்த பழங்களை யாரும் சாப்பிட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.