close
Choose your channels

Thupparivaalan Review

Review by IndiaGlitz [ Thursday, September 14, 2017 • தமிழ் ]
Thupparivaalan Review
Banner:
Vishal Film Factory
Cast:
Vishal, Prasanna, Vinay, Anu Emmanuel, Andrea Jeremiah, Simran, John Vijay, K. Bhagyaraj, Shaji Chen, Jayaprakash, Thalaivasal Vijay, Abhishek Shankar, Ajay Rathnam
Direction:
Mysskin
Production:
Vishal
Music:
Arrol Corelli

துப்பறிவாளன் - அறிவும் ஆற்றலும்

'அஞ்சாதே', 'யுத்தம் செய்' உள்ளிட்ட சிறந்த கிரைம் த்ரில்லர் படங்களைக் கொடுத்த இயக்குனர் மிஸ்கின் முன்னணி நட்சத்திர நடிகரான விஷால் உடன்   இணைந்து தந்திருக்கும் படம் 'துப்பறிவாளன்'. பலத்த எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் விஷால் கனியன் பூங்குன்றன் என்ற துப்பறிவாளராக நடித்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். படம் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தில் காண்போம்.

ஒரு விசித்திரமான மரணத்துடன் கதை தொடங்குகிறது. தன் அறிவுக்கு வேலை கொடுக்கும் வகையிலான வழக்குகளுக்காகக் காத்திருக்கிறான் டிடெக்டிவ் கனிய பூங்குன்றன் (விஷால்). அவனது நண்பன் /உதவியாளன் மனோ (பிரசன்னா). அப்போது அவனிடம் ஒரு பள்ளிச் சிறுவன் தான் வளர்க்கும் நாயை யாரோ சுட்டுக் கொன்றுவிட்டதாகச் சொல்லி, கொலையாளியைக் கண்டுபிடித்துத் தர வேண்டுகிறான். இந்த வழக்கைக் கையிலெடுக்கிறான் கனியன்.

நாய் கொல்லப்பட்ட இடத்தில் சோதனை நடத்தும்போது அங்கு அவனுக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. அதை நூல்பிடித்துப் பின் தொடர்ந்து செல்கையில் சமீபத்தில் நடந்த மற்ற சில கொலைகளுக்கும் அந்த நாயின் கொலைக்கும் தொடர்பிருப்பதைக் கண்டுபிடித்து  கொலைகாரர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறான். இவற்றுக்கிடையில் பிக்பாக்கெட் அடிக்கும் மல்லிகா (அனு இமானுவேல்) என்ற பெண்ணை சந்திக்கிறான். அவளது சூழ்நிலையை அறிந்து அவளைத் தன் வீட்டில் வேலைக்கு வைத்துக்கொள்கிறான். இருவருக்கும் பரஸ்பரம் அன்பும் மரியாதையும் வளர்கிறது.

கனியன் தங்களை நெருங்குவதைக் கண்டுபிடித்துவிட்ட கொலைகாரர்கள் குழு, அவன் அடுத்ததாக யாரையெல்லாம் விசாரிக்கத் திட்டமிடுகிறானோ அவர்களை ஒவ்வொருவராகக் கொல்கிறார்கள்.

இந்தக் கொலைகாரர்கள் யார்? கொலைகளின் பின்னால் உள்ள நோக்கம் என்ன? கனியன் அவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறானா? இதற்கெல்லாம் பதில் சொல்கிறது மீதிக் கதை.

ஹாலிவிட்டின் 'ஷெர்லாக் ஹோம்ஸ்' பாணியில் ஒரு துப்பறியும் கதைப் படத்தைக் கையிலெடுத்திருக்கும் மிஸ்கின், அதில் தமிழுக்கு ஏற்ற விஷயங்களையும் தன் வழக்கமான முத்திரைகளையும் கலந்து படைத்திருக்கும் படம் 'துப்பறிவாளன்'. மிஸ்கினின் மற்ற படங்களைப் போல் படத்தில் முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடுகிறது. விஷால் போன்ற ஒரு நட்சத்திர நடிகர் இருந்தும், தேவையில்லாத ஹீரோயிஸ பில்டப் காட்சிகள், பாடல் காட்சிகள், நகைச்சுவை என்று கதைக்குத் தேவையில்லாத எதையும் சேர்க்கவில்லை. படம் தொடக்கம் முதல் இறுதிவரை கொலைகள் மற்றும் அதன் விசாரணை என்ற புள்ளியிலேயே பயணிக்கிறது. விஷால்- அனு இமானுவேல் இடையிலான காட்சிகள் கதையின் மையச் சரடுக்குத் தொடர்பில்லாமல் ஒரு துணைச் சரடாகப் பயணித்தாலும் அதையும் அளவாகவே வைத்திருப்பதோடு இறுதியில் அதை மையக் கதையுடன் அழகாக இணைத்திருக்கிறார்.

இது போன்ற படங்களுக்குத் தேவையான நிதானத்துடன் திரைக்கதை நகர்கிறது. ஆனால் அந்த நிதானமே அளவு கடந்து சில இடங்களில் பொறுமையை சோதிக்கிறது.  மிஸ்கினின் மற்ற படங்களில் உள்ள யதார்த்தத்துக்கு நெருக்கமான தன்மை இந்தப் படத்தில் பல இடங்களில் தொலைந்துபோகிறது. நாயகன் தன் விசாரணையில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கிச் செல்லும் விதத்தில் லாஜிக் குறைகள் தென்படுகின்றன. உதாரணமாக பல் மருத்துவரிடம் போலீஸ் கமிஷனர் மற்றும் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தி நாயகன் தனக்குத் தேவையான தகவலைப் பெறும் இடத்தைச் சொல்லலாம்.  ஒரு முக்கியமான கொலையாளி காவல்துறையிடமிருந்து தப்பித்துச் செல்லும் இடம் மற்றொரு உதாரணம்.

 இதுபோன்ற குறைகள் இருந்தாலும் இடைவேளை வரை.கொலைகள் ஏன் நடக்கின்றன, கொலையாளிகளை நாயகன் கண்டுபிடிப்பாரா மாட்டாரா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளும் ஆர்வம், படத்தை கவனித்துப் பார்க்க வைக்கின்றன  இடைவேளையில் ஒரு முக்கியமான கொலை நடத்தப்பட்ட விதத்தை நாயகன் கண்டுபிடிக்கும் விதம் சிறப்பாக உள்ளது.  இரண்டாம் பாதியை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது.  

இரண்டாம் பாதியில் சஸ்பென்ஸ் எதுவும் இல்லை. கொலையாளிகளை நாயகன் எப்படி நெருங்கி வீழ்த்தப் போகிறார் என்பது மட்டும்தான். அதையும் பெருமளவில் சண்டைக் காட்சிகளை வைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள். சண்டைக் காட்சிகள் சிறப்பாக வடிவமைக்கப்படிருக்கின்றன. ஆனால் சுவாரஸ்யமான காட்சி, திடுக்கிடும் திருப்பம் என்று சொல்லும் அளவுக்கு எந்தக் காட்சியும் இல்லை.

எல்லாவற்றையும் விட பெரிய ஏமாற்றம் கொலைகளுக்கான நோக்கம்தான். ‘யுத்தம் செய் படத்தில் சொல்லப்படும் 'குற்றத்துக்கான' நோக்கம் புதுமையாகவும் அதிர்ச்சகரமாகவும் இருந்தது. இந்தப் படத்தில் சொல்லப்படும் நோக்கம் மிகவும் பலவீனமாக உள்ளது. கொலைகாரர்கள் ஏன் அவ்வளவு விசித்திரமாக நடந்துகொள்கிறார்கள், அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தொடர்பு என்ன என்பதெல்லாம் விளக்கப்படவே இல்லை. மேலும் அவர்கள் இவ்வளவு விஞ்ஞானப் பூர்வமான வகையில் போலீஸாரை ஏமாற்றி கொலைகளைச் செய்து தப்பிக்கும் அளவுக்கு அவர்களின் பின்னணி என்ன என்பதைக் கூட சொல்லவில்லை.

படத்தின் இரண்டே முக்கால மணிநேர நீளமும் காட்சிகள் தேவைகதிமாக மெதுவாக நகரும் திரைக்கதையும்  பொறுமையை சோதிக்கின்றன. முதல் பாதி மெதுவாக இருப்பதைக் கூட, இரண்டாம் பாதியில் ஏதோ பெரிதாக நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் பொறுத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் நடப்பவை எதுவும் அந்த எதிர்பார்ப்புக்கு ஈடுசெய்யவில்லை.

இதையெல்லாம் மீறி சாதி ஆணவக் கொலை எதிர்ப்பு, நாயகியின் குடும்பப் பின்னணி, நாயகன் அதிலிருந்து அவளைக் காப்பாற்றுவது,  ஃப்ரிட்ஜுக்குள் வைக்கப்பட்டிருக்கும் பிணம் என மிஸ்கினின் டச்கள் ஆங்காங்கே கவனிக்க வைக்கின்றன.

விஷால், அறிவும் ஆற்றலும் மிக்க துப்பறிவாளர் பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். சண்டைக் காட்சிகளில் வழக்கம்போல் அசத்தியிருக்கிறார். அனு இமானுவேல் அழகாக இருப்பதோடு நன்கு நடிக்கவும் செய்த்ருக்கிறார். கொலைகார வில்லனாக வினய் நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். பிரசன்னா விஷாலுக்கு தக்க துணையாக வந்து தன் பணியை சரியாகச் செய்திருக்கிறார். ஆண்ட்ரியா வித்தியாசமான பாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக பங்களித்திருக்கிறார். கே.பாக்யராஜுக்கு வித்தியாசமான வேடம்தான் என்றாலும் கடைசி காட்சியில் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்பு, அந்தக் காட்சியும்ச் சிறப்பாக உள்ளது அவரும் அதில் தன் அனுபவ முத்திரையைப் பதித்திருக்கிறார்.
 
ஆரோல் கரோலியின் பின்னணி இசை கதையின் தன்மைக்கு கச்சிதமாக பொருந்துகிறது. சில இடங்களில் மர்மத்தைக்கூட்டி இதயத் துடிப்பை அதிகரிக்க வைக்கிறது. எமோஷனல் காட்சிகளில் மனதைத் தொடுகிறது.

கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவு படத்தின் மிகச் சிறந்த அம்சம் என்று சொல்லலாம். கதையின் மர்மத் தன்மைக்கு ஏற்ப இருன்மை சூழ்ந்த ஒளிக்கலவைகளைப் பயன்படுத்தியுள்ளார். படத்தொகுப்பு, கலை இயக்கம்,சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு ஆகியவையும் சிறப்பாக உள்ளன.

மொத்தத்தில் ஓரளவு வரை மட்டுமே கவனத்தைத் தக்க வைக்கு த்ரில்லர் படமாக வந்திருக்கிறது 'துப்பறிவாளன்'. ஆங்காங்கே வெளிப்படும் மிஸ்கின் டச்கள் மற்றும் விஷாலின் சண்டைக் காட்சிகள் ஆகியவற்றுக்காகப்  பார்க்கலாம்.

Rating: 2.8 / 5.0

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE