திரை விமர்சனம் : உனக்கென்ன வேணும் சொல்லு - தரமான திகில் படம்

  • IndiaGlitz, [Thursday,September 24 2015]

தமிழ் சினிமாவைப் பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு திகில் (பேய்ப்) படங்கள் மற்றும் திகில் நகைச்சுவைப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறன்றன. ஆனால் ரசிகர்களை திருப்திபடுத்தி வணிகரீதியாக வெற்றிபெறும் படங்களாக இருக்கும் வரை இந்த வகைப் படங்கள் வருவதைப் பற்றி யாரும் அலட்டிக்கொள்ளப் போவதில்லை.

இந்த ஆண்டு தமிழில் வெளியாகும் மற்றுமொரு திகில்ப் படம் 'உனக்கென்ன வேணும் சொல்லு'.அறிமுக இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் முற்றிலும் புதியவர்களைக் கொண்ட அணியோடு களமிறங்கியிருக்கும் இந்தப் படம் எப்படி இருக்கிறது?

பூஜா (ஜாக்லின் பிரகாஷ்) மற்றும் சிவா (குணாளன் மார்கன்) சிங்கப்பூரில் வாழும் இளம் தம்பதியர். மகனின் அரிய வியாதிக்கான சிகிச்சைக்காக சென்னை வருகின்றனர். பூஜா தன் தோழி ஸ்வேதாவின் தற்கொலையில் மர்மங்கள் சூழ்ந்திருப்பதை அறிகிறாள். பூஜாவும் சிவாவும் தங்கியிருக்கும் பூர்வீக வீட்டில் சில அமானுஷ்ய நிகழ்வுகள் அவளை அச்சுறுத்துகின்றன.

இருவரும் பேய் ஓட்டும் சக்தி படைத்த மேத்யூவின் (மைம் கோபி) உதவியை நாடுகின்றனர். பூஜாவின் வீட்டில் பேய் இருப்பதை உறுதி செய்யும் மேத்யு அவர்களுக்கு உதவ முன்வருகிறான்.

மறுபுறம் ஐடி ஊழியனான கார்த்திக்கும் (தீபக் பரமேஷ்) சில பயம்கொள்ளவைக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளை எதிர்கொள்கிறான். ஜூடி என்ற பெண்ணின் நட்பு கிடைக்கிறது. ஆனால் அவளையும் மர்மங்கள் சூழ்ந்திருக்கின்றன..

பூஜா மற்றும் கார்த்திக்கின் பிரச்சனைகளுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அவை தீர்க்கபப்ட்டனவா? ஜூடி யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் திரையில் காண்க.

இந்தப் படத்துக்கு எம்கே என்பவர் எழுதியிருக்கும் கதையும் ஸ்ரீநாத் ராமலிங்கம் எழுதியிருக்கும் திரைக்கதையும் முழுக்க முழுக்க திகில் படம் என்ற நோக்கத்துக்காக எழுதப்பட்டுள்ளன. அதை மர்மங்களும் திகிலும் நிறைந்த படமாக்கும் முயற்சி பெருமளவில் வெற்றிபெற்றிருக்கிறது.

ஒரு தற்கொலையுடன் படம் தொடங்குக்கையில் அது ஒரு அமானுஷ்ய சக்தியால் நிகழ்கிறது என்பதைப் பதிவு செய்து ஒரு திகில் படத்துக்கான மனநிலையை உருவாக்கிவிடுகிறார் இயக்குனர். அதைத் தொடர்ந்து வரும் தொடர்பற்ற பாத்திரங்களும் அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகளும் மர்மத்தைக் கூட்டுகின்றன ஆங்காங்கே பதறவைக்கும் திகில் காட்சிகளும் வந்துபோகின்றன.

இரண்டாம் பாதியில்தான் கதாபாத்திரங்களின் முன்கதையும் அவர்களுக்கிடையிலான தொடர்பும் விவரிக்கப்படுகிறது அதன் வாயிலாக காதல், குடும்பம் ஆகிய விஷயங்களில் இளைஞர்களின் அவசர முடிவுகளின் விளைவுகள் குறித்த சில உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும் கிடைக்கின்றன. பேயின் பின்னணியை விளக்கிவிட்டபின் டாப் கியரில் பயணிக்கிறது படம். இறுதிக் காட்சியின் வடிவமைப்பும், பேய்களுக்கான ஒரு அழகான உலகம் என்ற கற்பனையும் இயக்குனரிடம் புதுமையான அணுகுமுறை இருப்பதைக் காட்டுகின்றன.

பார்வையாளர்களுக்குத் திகிலூட்டுவதில் காட்டப்படும் அதீத கவனமும் அக்கறையுமே படத்தின் முக்கிய சிக்கலாகவும் அமைந்துவிடுகிறது. முதல் பாதி பொறுமையை சோதிக்கும் அளவுக்கு மெதுவாக நகர்வது திகிலின் தாக்கத்தை அதிகரிக்க மெதுவான கதை நகர்த்தலைப் பயன்படுத்தும் பழங்கால உத்தியை ஒட்டி அமைந்திருக்கிறது. பேயைக் காட்சிப்படுத்த கோரமான முகத்தைக் காட்டுவதும் மற்றுமொரு பழைய யோசனை. இதைத் தவிர்த்திருக்கலாம் அல்லது மட்டுப்படுத்தியிருக்கலாம். இரண்டாம் பாதியில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பேய்ப் படம் என்று பார்க்கும்போது அவை பொறுத்துக்கொள்ளும் அளவில்தான் இருக்கின்றன. பேய்/ஆவியின் பின்னணி நீண்ட மர்மத்துக்குப் பின் அவிழ்க்கப்பட்டாலும் முன்கூட்டியே ஊகித்தபடிதான் இருக்கிறது.

மைம் கோபியைத் தவிர கிட்டத்தட்ட அனைவருமே புதுமுக நடிகர்கள். குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் கோபி நடிப்பதற்கான வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். நாயகியாக வரும் ஜாக்லின் சோகம், பயம், குற்ற உணர்ச்சி ஆகிய அவஸ்தைகளை சரியாக வெளிப்படுத்துகிறார்.

சிவ சரவணனின் பின்னணி இசை திகிலுணர்வையும் பரபரப்பையும் கூட்ட சிறப்பாக துணைபுரிந்திருக்கிறது. பாடல்களுக்குப் படத்தில் பெரிய வேலையில்லை. மணிஷ் மூர்த்தியின் ஒளிப்பதிவில் குறையில்லை. நான்கு வெவ்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வுகளால் பின்னப்பட்ட இறுதிக் காட்சியில் தன் திறமையை நிரூபிக்கிறார் படத்தொகுப்பாளர் ஹாரி ஹரன்.

சி.ஹெச்..மோகன்ராஜின் கலை இயக்கம் சிறப்பு. குறிப்பாக ஆவிகளுக்கு உருவாக்கப்பட்டிருக்கும் அழகான உலகம் கண்ணைக் கவர்கிறது.

மொத்தத்தில் 'உனக்கென்ன வேணும் சொல்லு' திகில் பட ஆர்வலர்களை நிச்சயம் ஈர்க்கும். மற்றவர்களையும் ஏமாற்றாது.

மதிப்பெண்- 2.75/5

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேடத்தில் 'வேதாளம்' அஜீத்?

அஜீத் நடித்து வரும் வேதாளம் படத்தில் இதுவரை அவர் ஒரு டாக்சி டிரைவர் கேரக்டரில்தான் நடிக்கின்றார் என்ற செய்தி வெளிவந்து...

வேதாளம் தலைப்பு ஏன்? புதிய தகவல்கள்

அஜீத் படத்தின் தலைப்புக்காக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு நேற்று ஒருவழியாக 'வேதாளம்' என்ற தலைப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்...

ரஜினியின் திருமண மண்டபத்தில் பாண்டவர் அணி ஆலோசனை

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதியான...

அஜீத்தின் 'வேதாளத்திற்கு உதவிய ராகவா லாரன்ஸ்?

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்திற்கு 'வேதாளம்' என்ற டைட்டிலை படக்குழுவினர் நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்....

மதுரை மக்களை ஆச்சரியப்படுத்திய அஜீத் ரசிகர்கள்

அஜீத்துக்கு சமூகவலைத்தளங்களில் பெரும்புகழ் இருக்கின்றது என்பதை அனைவரும் அறிவோம். அஜீத் பட செய்திகளோ...