வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேற தடை: உத்தரவு பிறப்பித்த டிரம்ப்

உலகிலேயே மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, கொரோனா தாக்கம் காரணமாக ஏராளமான வேலையிழப்புகளையும் பொருளாதார சிக்கலையும் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் வெளிநாட்டினர் அதிகம் அமெரிக்காவில் குடியேறுவதால் தங்கள் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மக்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சமீபத்தில் அமெரிக்கா அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த சில நாட்களாக ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது அவர் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

இதன்படி அமெரிக்க குடிமக்களின் பணிகளை காக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதால் பிறநாட்டினர் அமெரிக்காவில் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும், தற்போதைக்கு 60 நாட்களுக்கு பிறநாட்டினர் அமெரிக்காவில் புதியதாக குடியேற முடியாது என்றும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,18,744ஆகவும் பலியானவர்களின் எண்ணிக்கை 45,318ஆகவும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.