close
Choose your channels

பிட்காயின் மோசடி என்றால் என்ன??? டிவிட்டர் ஹேக்கு பின்னால் ஒளிந்து இருக்கும் சர்ச்சை!!!

Saturday, July 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிட்காயின் மோசடி என்றால் என்ன??? டிவிட்டர் ஹேக்கு பின்னால் ஒளிந்து இருக்கும் சர்ச்சை!!!

 

பிட்காயின் எனப்படும் கிரிப்டோ கரன்சி நாணய வர்த்தகத்தில் அவ்வபோது பல மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது. ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த புதன்கிழந்தை நடைபெற்ற மோசடி சம்பவம் உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு மிகவும் அதிரடியாக இருந்ததாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ஜுலை 15 ஆம் தேதி பிற்பகல் அமெரிக்காவின் முக்கியப் புள்ளிகள் சிலரது டிவிட்டர் கணக்குகளில் இருந்து ஒரே நேரத்தில் ஒரு செய்தி வெவ்வேறு வடிவங்களில் பகிரப்பட்டது. இதனால் டிவிட்டர் நிறுவனம் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி டிவிட்டர் கணக்குகளை கட்டுப்படுத்தும் செயல்பாடுகளில் இறங்குகிறது.

ஹாலிவுட் படங்களில் இணையத் தளங்களை ஹேக் செய்து பணம் கொள்ளை அடிப்பதை பல நேரங்களில் பார்த்து இருக்கிறோம். அதுபோன்ற புது டிரெண்டிங்கான கொள்ளைச் சம்பவம்தான் சமூக வலைத்தள கணக்குகளைக் ஹேக்  செய்து அதன்மூலம் பல கவர்ச்சிகரமான விளம்பரங்கள், அறிவிப்புகளை வெளியிடுவது. அந்த அறிவிப்பை மக்கள் உண்மையென நம்பி நாணயப் பரிமாற்றத்தில் ஈடுபடுவது தொடர்ந்து நடக்கிறது. சாதாரணக் கணக்குகளில் இருந்து கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிட்டால் மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என ஹேக்கர்கள் சில நேரங்களில் அதிகாரப் பூர்வமான கணக்குகளை ஹேக் செய்து அதன் மூலம் அறிவிப்புகளை அனுப்புவதும் உண்டு. அதைப்போல தற்போது முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, உலகப் பணக்காரர் பில்கேட்ஸ், ஜுனியர் ட்ரம்ப், தனியார் விண்வெளி மையத்தின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க், உலகின் மிகப்பெரிய தொழிலதிபர் வாரன் பஃப்பர்ட் போன்றோரின் கணக்குகளில் இருந்து அறிவிப்பை வெளியிட்டு அதன் மூலம் இந்திய மதிப்பில் ரூ.90 லட்சம் வரையிலான பணத்தைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படுகிறது.

பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகளை ஹேக் செய்த அரை மணி நேரத்தில் டிவிட்டர் நிறுவனம் அதைக் கட்டுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இப்படி கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தை மிக எளிதாகப் பயன்படுத்தவும் முடியாது. ஏனெனில் தற்போது கொள்ளை அடிக்கப்பட்ட பிட்காயின் குறியீடுகளை உலகிலுள்ள பெரும்பலான நிறுவனங்கள் கண்காணிக்கத் தொடங்கிவிடும். அதனால் கொள்ளையடிக்கப் பட்ட பணத்தை பயன்படுத்தவே பல ஆண்டுகள் ஆகும் எனவும் கூறப்படுகிறது. ஒருவேளை கொள்ளைக் கும்பல் இதே முறையினை மிகச் சாதாரண அறிவிப்புகளாக வெளியிட்டு இருந்தால் கூட கோடிக்கணக்கான பணத்தை திருடி இருக்கலாம். எதற்கு இப்படி பிரபலங்களின் கணக்குகளை ஹேக் செய்ய வேண்டும் என்பதைக் குறித்தும் தற்போது சந்தேகம் எழுப்பப் படுகிறது. இச்சம்பவம் குறித்து சில சமூக ஆர்வலர்கள் பிட்காயின் நாணயக் குறியீட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காகக் கூட அதாவது விளம்பரப் படுத்துவதற்காகக் கூட இப்படியான செயல்பாட்டில் சமூக விரோதிகள் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் கருத்துக் கூறியிருக்கின்றனர்.

உண்மையில் உலகின் பெரும்பாலான நாடுகளில் பிட்காயின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப் பட்டு இருக்கிறது. நம்முடைய இந்தியாவில் பிட்காயின் வர்த்தகத்திற்கும், பணப் பரிமாற்றத்திற்கும் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2017 இல் தடை விதித்து இருந்தது. பின்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தடை நீக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய ரிசர்வ் வங்கி பிட்காயின் நாணயங்களுக்கு தடை விதிக்கும்போது, பிட்காயின் எனப்படுவது ஊகத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும் ஒரு நாணயம். அதோடு இந்த நாணயங்களின் உருவாக்கத் திட்டத்திற்கு உலகம் முழுவதும் எந்தவொரு வரையறையும் கிடையாது. இதனால் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது எனப் பல்வேறு காரணங்களைக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற்ற பிட்காயின் கொள்ளைச் சம்பவத்துக்கும் பிட்காயின் நிர்வாகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதையடுத்து கொள்ளை சம்பவத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும் என ஸ்டஸ்டின்சன் என்பவர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.  உலகப் பிரபலங்களின் கணக்குகளில் உள்ள மெயில் ஐடியை முதலில் ஹேக் செய்து விட்டே இந்தக் கொள்ளைக் கும்பல் டிவிட்டர் கணக்குகளை ஹேக் செய்ய ஆரம்பித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது சமூக வலைத்தளக் கணக்குகள் பெரும்பாலும் மெயில் ஐடியுடன் இணைக்கப் பட்டு இருக்கும். இதனால் ஹேக் செய்தவர்களின் விவரங்களை கண்டுபிடிக்க முடியும் என்பதாலும் முதலில் மெயில் ஐடிக்கள் ஹேக் செய்யப் பட்டு இருக்கின்றன.

இந்தியாவில் பிட்காயின் நாணயத்தை தடைச் செய்யும்போது வங்கிக் கணக்குகளின் ஈக்குவிட்டி குறைந்து போகும் எனவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டது. அதாவது வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை பரிமாற்றம் செய்யும்போது பராமரிப்பு செலவினங்கள் முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்படும். ஆனால் பிட்காயின் பண வர்த்தகத்தில் அப்படி வங்கிகள் வருமானத்தை பெற முடியாது. பிட்காயினை பயன்படுத்துவோர் தனக்கு தேவையான வணிகத்தில் நேரடியாக முதலீட்டை செலுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிட்காயின் நாணயம்/ கிரிப்டோ கரன்சி

முதன் முதலில் 2009 இல் ஜப்பான் நாட்டைச் சார்ந்த சதோஷி நக்கமேட்டோ என்பவர் மென் பொருள் குறியீட்டின் அடிப்படையில் பயன்படுத்தும் இந்த  கிரிப்டோ கரன்சியை உருவாக்கினார். இந்த வகை நாயணத்தை நாம் பயன்படுத்தும் நாணயத்தைப் போல கண்ணால் பார்க்க முடியாது, கையால் தொட்டு பயன்படுத்தவும் முடியாது. ஆனால் கணினி மூலம் சிக்கலான குறியீடுகைளை வைத்து உருவாக்கப் பட்டு இருக்கும். அதனால் தற்போது இணைய வர்த்தகத்தில் பிட்காயின் நாணயங்கள் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. நிஜ உலகத்தின் நாணயத்திற்கும் டிஜிட்டல் நாணயத்திற்கும் இடையில் இது மிகவும் எளிதாகத் தொடர்பு படுத்தப்படும் வகையிலும் உருவாக்கப் பட்டு இருக்கிறது. மேலும் இதன் மதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு பிட்காயின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ. 6 லட்சத்து 45 ஆயிரமாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை பிட்காயின் வர்த்த முதலீட்டில் 16 லட்சம் கோடி டாலர் பயன்படுத்தப் பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சீனா, வங்கதேசம், தென் கொரியா, இந்தோனசியா போன்ற நாடுகளில் இந்த நாணயத்திற்கு கடுயைமான தடை விதிக்கப் பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் சில கட்டுப்பாடுகளுடன் இந்த நாணயங்கள் அனுமதிக்கப் பட்டு இருக்கின்றன.

இந்த வகை பணத்தை பயன்படுத்தும்போது யாருக்கு பணத்தை அனுப்பியிருக்கிறோம் என்பதை யாராலும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. மேலும் பொருட்களை வாங்கும்போது வங்கி கணக்குகளில் இருக்கும் டெபிட், கிரேடிட் போன்ற இடைத்தரகர்களுக்கு வேலையே இல்லாமல் போகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. காரணம் இந்த நாணயங்கள் குறிப்பிட்ட சங்கேத மொழிகளில் மைனி எனப்படும் ஒருவகை குறியீட்டு அடிப்படையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. எளிதாக எந்த ஒரு நாட்டின் பணத்தையும் செலுத்தி பிட்காயின் நாணயங்களாகவும் மாற்றிக்கொள்ள முடியும். இதில் உள்ள ஒரு மிகப்பெரிய குறைபாடு விலை நிர்ணயம் வெறுமனே ஊகத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பதுதான். ஆனால் இணைய வர்த்தகத்திற்கு மிகவும் பாதுகாப்பாக இருப்பதால் பல்வேறு முதலீடுகளுக்கு தற்போது இந்த வகை நாணயத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.

மேலும் அந்நிய முதலீட்டில் இந்தப் பணத்தை பயன்படுத்தும்போது அந்நிய செலவாணி போன்ற வரிகளில் இருந்தும் தப்பித்துக் கொள்ள முடியும். ஆனால் இதன் சிக்கலான கணித மதிப்புகளைப் பார்த்து பெரும்பலான வணிகர்கள் பிட்காயின் மீது பயம் கொள்ளவும் செய்கின்றனர். பிட்காயின் வர்த்தகம் உலக அளவில் தற்போது வளர்ச்சி அடைந்து விட்டதால் பயன்படுத்தும் நபர்களின் கணக்குகள், தரவுகளை மேம்படுத்தினால் இது சிறந்த கரன்சியாக இருக்கும் எனவும் சிலர் கருத்துக் கூறி வருகின்றனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.