close
Choose your channels

தோல்வியிலிருந்து வெற்றி பெற்ற உலகப் பிரபலங்கள்

Tuesday, January 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தோல்வியிலிருந்து வெற்றி பெற்ற உலகப் பிரபலங்கள்

 

வெற்றியாளர்கள் அனைவரும் எடுத்த எடுப்பிலேயே வெற்றி கனியைக் சுவைத்து விடுவதில்லை. கடும் போராட்டம், உழைப்புக்கு மத்தியில் தான் வெற்றியைச் சுவைக்க முடிகிறது.  வெற்றி பெற்ற பிரபலங்கள் தங்கள் வாழ்வில் பல போராட்டங்களையும் தோல்விகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து அந்த அனுபவங்களில் இருந்து மீண்டவர்கள் தான் என்பதை ஒரு போதும் மனித மனம் ஏற்றுக் கொள்வதில்லை.

நம்மில் பலர் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என விரும்புகிறோம். அதற்கான குறிப்புகளைச் சமூக வலைத்தளங்கள், மருத்துவர்கள் எனப் பல இடங்களில் இருந்து எடுத்துக் கொள்கிறோம். ஆனால் சாதாரணமான ஒரு அறிவு. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் உழைக்க வேண்டும். இதை ஒருவரும் நமக்கு சொல்லிக் கொடுப்பதுமில்லை. அப்படி யாரேனும் நமக்குச் சொல்லிக் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதும் இல்லை. ஏனென்றால் நமக்கு எப்பொழுதும் உடனடியான தீர்வே தேவைப்படுகிறது. அதோடு நோகாமல் நமக்குப் பலன் கிடைக்க வேண்டும் என்பதில் எப்போதும் ஆர்வம் கொண்டிருக்கிறோம் .

இந்தச் சாதாரண உதாரணமே போதுமானது. உண்மையிலேயே உடல் எடையைக் குறைக்க வேண்டும் என விரும்புகிறவன் உடல் உழைப்பில் ஈடுபடுவான். அல்லது உடல் உழைப்பிற்கு ஈடான வேறு ஒரு வேலையைச் செய்வான். எப்படியானாலும் உடல் இழைக்க வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு வகையில் உடல் இயங்கத்தான் வேண்டும். அதே போலத்தான் வெற்றி பெற வேண்டுமானால் ஏதேனும் ஒரு வகையில் உழைக்க வேண்டும். தொடர்ந்து உழைக்க வேண்டும்.

வாழ்வின் இருபக்கங்கள் தான் இந்த வெற்றியும் தோல்வியும். எல்லா செயல்களிலும் வெற்றி தோல்விகள் இணைந்தே இருக்கும். வாழ்வில் தோற்றவர்களுக்கும் சாதனையாளருக்கும் பெரிய அளவிலான வித்தியாசம் இருப்பதில்லை. விடாமுயற்சியும் உழைப்பும் தான் அதிகபடியான வேறுபாடாக இருக்கிறது. சில நேரங்களில் விடாமுயற்சியும் உழைப்பும் இருந்தாலும் வெற்றி அடைய முடிவதில்லை என நினைக்கலாம்.

தொடர்ந்து உழைத்து உழைத்து வெற்றி கிடைக்காமல் தோல்வியை சந்தித்தவன் சலிப்படைகிறான். எல்லா செயலிலும் சலிப்பை மட்டுமே அனுபவித்து பழக்கப் பட்டவன் என்று சிலர் தன்னைப் பற்றி கூறிக் கொள்கின்றனர்.  சலிப்படைகிற ஒருவனால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்ற மந்திரத்தை நிறைய பேர் தெரிந்து வைத்திருப்பதில்லை. சலிப்பை அனுபவமாக மாற்றிக் கொள்ளும் திறமைசாலிகள் மட்டுமே வெற்றிப் பெறுகின்றனர்.   

தோல்வி என்பது ஒரு கற்றல்

தோல்வி என்ற சொல்லை நாம் அனைவரும் சந்திக்கவே கூடாது என நினைக்கிறோம். சிலர் இதற்காக எந்தச் செயலையும் செய்யாமலே விட்டு விடுகின்றனர். சிலர் தோல்வியைச் சந்தித்து விடுவோம் எனத் தொடர்ந்து சிந்தனையிலே மூழ்கி இருந்து கடைசி வரை எதையும் செய்யாமல் வெறுமனே இருந்து விடுகின்றனர். வெற்றி அடைய விரும்பும் ஒருவன் தோல்வியைக் கண்டு பயப்படக் கூடாது என்பதே வெற்றியின் தாரக மந்திரம். வெற்றி தன்னுடன் எப்போதும் தோல்வி என்ற அனுபவத்தையும் சேர்த்தே வைத்திருக்கிறது.

ஒரு குழந்தை தான் வளரும்போது பல முறை விழுந்து, விழுந்து தொடர்ந்து முயற்சித்துத்தான் நடக்க கற்றுக் கொள்கிறது. குழந்தையாக இருந்தபோது ஒரு குழந்தை தான் விழுவதற்காக வெட்கப்படுவதில்லை. ஏனென்றால் குழந்தையாக இருக்கும்போது வெட்கம் என்ற உணர்வு குழந்தைக்குத் தெரியாது. ஆனால் அதே குழந்தை வளர்ந்து, இந்தச் சமூகம் கொடுக்கிற அங்கீகாரத்திற்கும் அடையாளத்திற்கும் உரியவனாகத் தன்னை நினைத்துக் கொள்கிறது. எது சரி, எது தவறு எனப் பல கட்டுப்பாடுகளையும் சமூகத்தில் இருந்து கற்றுக் கொள்கிறது. இந்தச் சமூகத்தில் எப்போதும் தன்னை வெற்றியாளனாக வெளிப்படுத்திக் கொள்ளவும் முயற்சிக்கிறது. வெற்றியாளனாகத் தன்னைக் காட்டிக் கொள்ள நினைப்பதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் எல்லா நேரங்களிலும் தன்னை வெற்றிப் பெற்றவன் மட்டுமே. தேல்வி என்பதே எனக்கு வரக்கூடாது என நினைப்பது தான் இங்கு தவறான விஷயம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

டு தோல்வியைச் சந்தித்தவர்கள்

உலகில் பல பிரபலங்கள், சாதனையாளர்கள் தனது ஆரம்ப நிலையில் படு தோல்வியைச் சந்தித்துள்ளனர். அந்த தோல்வி தருகின்ற பாடங்கள் தான் அவர்கள் வெற்றியைப் பெறுவதற்கான சாத்தியத்தை உண்டாக்கி இருக்கிறது. தோல்வியைத் தழுவி பின்னர் வெற்றி பெற்றவர்கள் ஒருபோதும் தாங்கள் கடந்து வந்த பாதையை மறந்து விடுவதில்லை. அதோடு தங்களின் தோல்வியைக் கொண்டாடு வதாகவும் தெரிவிக்கின்றனர். தோல்வி ஒரு அருமையான வழிகாட்டி என்றும் தோல்வியைத் தழுவுவதற்குப் பயப்படாதீர்கள் என்றும் வழிகாட்டுகின்றனர்.

வெற்றியைக் குறித்து அமெரிக்க எழுத்தாளர் எல்பர்ட் ஹப்பார்ட் கருத்துக் கூம்போது “இனி முயற்சி செய்வதைத் தவிர எந்த தோல்வியும் இல்லை” என்கிறார். எப்படி வெற்றிக்குத் தோல்வி ஒரு வழிகாட்டியாக இருக்கிறதோ அதே போல முயற்சியும் வெற்றிக்கு மற்றொரு முக்கியமான காரணி எனலாம். எனவே வெற்றிப் பெறுவதற்காக தொடர்ந்து முயற்சிப்பதே ஒருவன் செய்ய வேண்டிய முக்கியமான செயலாகும்.

உலகில் சில பிரபலங்கள் காவியத் தோல்விகளைத் தழுவியே வெற்றிப் பெற்றள்ளனர். அப்படி தோல்வியைச் சந்தித்தவர்கள் தங்களது தோல்வி அனுபவங்களைக் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளனர். வெற்றிப் பெற்றவர்களின் தோல்வி அனுபவங்கள் இந்த உலகத்தின் மாற்றங்களுக்கான விதைகளாகவும் மாறலாம். அந்த வகையில் சில பிரபலங்களின் கருத்துக்கள் இங்கே எடுத்துக் காட்டப்படுகின்றன.

1.சர் ஜேம்ஸ் டைசன்  (Sir James Dyson)

1990 களின் வாக்கில் வீடு சுத்தம் செய்யும் கருவியான வாக்யூம் கிளினரைக்  (Vacuum) கண்டுபிடித்த டைசன் அதற்கு முன்னர் பல முறை தோல்வியைத் தழுவியவர் என்பது தான் சுட்டிக் காட்ட வேண்டிய விஷயம்.

அவரது வெற்றிகரமான G-Force Vacuum கிளினர் அதற்கு முன்பு அது 5126 முறை தோல்வியைத் தழுவிய ஒரு கருவி என்பதனை யாராலும் ஒத்துக் கொள்ள முடியாது. டைசன் தனது 15 வருட கால கடும் உழைப்பில் 5126 முறை புதிய வடிவங்களில் Vacuum கிளினரை முயற்சித்துப் பின்னர் தான் வெற்றிகரமான வடிவத்தை உருவாக்கினார். 5126 முறை தோல்வியைச் சந்தித்தவர் என்பதனை ஒத்துக் கொள்வதில் டைசன் எப்போதும் பெருமை கொள்கிறார்.  20 வருடங்களுக்கு முன்னர் எனது தயாரிப்பினை சந்தையில் விற்க முயற்சித்து இருந்தால் ஒரு விளையாட்டு பையனாகத்தான் என்னை மதித்திருப்பார்கள் என்று தனது தோல்வியைக் குறித்து ஒப்புக்கொள்கிறார். தற்போது  இவரது சொத்து மதிப்பு 4.6 பில்லியனையும் தாண்டுகிறது.

2. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg)

சினிமா இயக்குநர், தயாரிப்பாளர், ஆவணப்பட இயக்குநர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டிருக்கிற ஸ்டீவன் ஸ்பீல் பெர்க்கிற்கு அவ்வளவு எளிதாக வெற்றி கிடைத்து விடவில்லை. தான் பயின்ற கலிபோன்ரினியா பல்கலைக் கழகத்தின் சினிமா பள்ளியில் இவரது படைப்பு இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது.  தான் பயின்ற கல்லூரியிலே தோல்வியைத் தழுவியவர் தான் பின்னாட்களில்  3 ஆஸ்கர் விருதுகளைக் குவித்துள்ளார்.

இவர் இயக்கிய படங்கள் 9 பில்லியனுக்கும் அதிகமாக வசூலைப் பெற்றுத் தந்திருக்கிறது. இவரது திறமையை உணர்ந்து கொள்ள தவறிய கலிபோர்னிய பல்கலைக்கழகம் அவரது நினைவாக ஒரு கலை பள்ளியை உருவாக்கியுள்ளது என்பதும் வெற்றிப் படிகளில் குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.

3. தாமஸ் எடிசன் (Thomas Edison)

எல்லா நேரங்களிலும் ஊக்கத்தையும் பயிற்சியையும் கொடுத்து நம்மை சிறந்தவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள்தான். ஆனால் தாமஸ் எடிசனுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அவருக்கு ஊக்கத்தை அளிக்காதது மட்டுமல்ல “இவரால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. ஒரு மிகச் சிறந்த முட்டாள்”  என்ற பட்டத்தையும் வழங்கியிருந்தனர்.

தனது பள்ளி பருவத்திலேயே முட்டாள் என்ற பட்டத்தை வாங்கியிருந்தவர் பின்னாட்களில் ஃபோனோகிராஃப் (Phonograph) மின்சார விளக்கு (Electric Lamp) என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களுக்கான காப்புரிமைகளை வைத்திருந்தார். ஆசிரியர்களின் தவறான மதிப்பீட்டினை உடைத்து மிகச் சிறந்த அறிவியல் விஞ்ஞானி என உலகிற்கு அவரை எடுத்துக் காட்டியது அவரது அயராது உழைப்பு மட்டுமே.

4. வால்ட் டிஸ்னி (Walt Disney)

டிஸ்னி வோல்ட் குழந்தைகளின் உலகில் ஒரு வரமாகவே இருக்கிறது. அதன் கதாபாத்திரங்களுக்காகவும் பின்னணி குரலுக்காகவும் குழந்தைகள் ஈர்க்கப்படுகின்றனர் என்றால் அது மிகையாகாது.  22 ஆஸ்கர் விருதுகளை வென்று குவித்த வால்ட் டிஸ்னி ஆரம்பத்தில் தான் வேலைப் பார்த்த செய்தித்தாள் நிறுவனத்தில் புறக்கணிக்கப்பட்ட மனிதர் என்பதனை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். வால்ட் டிஸ்னி “ஒரு கற்பனை வளமே இல்லாதவர். அவரிடம் நல்ல திறமைகள் இல்லை” என்று விமர்சிக்கப் பட்டார்.

மேலாளரின் வார்த்தைகளுக்கு செவி சாய்த்து, தோல்வியில் உடைந்திருந்தால் உலகம் ஒரு மிகச் சிறந்த கலைஞனை கண்டிப்பாக இழந்திருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்பது தான் முக்கியமானது. வால்ட் டிஸ்னி இன்றைக்கு முக்கியமான ஒரு அடையாளமாக மாறியிருப்பதற்கு அவரின் சுய சிந்தனையே காரணம் என்பதோடு அவர் தன்னை நம்பினார் என்பதும் மிகவும் முக்கியமானது.

5. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)

நாம் ஐன்ஸ்டீன் என்றாலே புத்திச்சாலித் தனத்துக்கு இந்தப் பெயரை அடையாளமாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் இயற்பியல் அறிஞர், சிறந்த தத்துவவியலாளர் என அறியப்படுகின்ற ஐன்ஸ்டீனின் இளமைப் பருவம் அத்தனை சிறப்பு வாய்ந்ததாக இருக்கவில்லை. காரணம் தனது நான்கு வயது வரை அவரால் பேச முடியவில்லை. ஏழாம் வயதில் தான் முதன் முதலாக வாசிக்கத் தொடங்கினார். சிறிய வயதில் காணப்பட்ட குறைபாடுகளால் மனநலம் பாதிக்கப் பட்டவராகவே கருதப்பட்டார்.

இப்படியிருந்த ஐன்ஸ்டீன் ஐத்தான் “ இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்” என்று அழைத்துப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றதோடு இயற்பியல் துறையில் உலகின் அணுகுமுறையையே இவரால் மாற்ற முடிந்தது. தோல்வி ஒரு போதும் இவருக்கு முட்டுக் கட்டையாக இல்லை என்பதனை இவரின் ஆய்வுகளே சான்றாக அமைகிறது.

6. ஜே.கே. ரவுலிங் (J.K. Rowling)

தோல்வியும் சில நேரங்களில் மிக சிறந்த வெற்றியைப் பெற்றுத் தரும் என்பதற்கு ஜே.கே. ரவுலிங் ஒரு மிகச் சிறந்த உதாரணம். விவாகரத்துப் பெற்று ஒரு குழந்தைக்கு தாயாக மிகுந்த மனச்சோர்வில் வாழ்ந்து வந்த இவர் தொடர்ந்த வாசிப்பு பழக்கத்தைக் கொண்டிருந்தவர். திடீரென்று ஒரு நாவலை எழுதி பிரபலமானார்.

இத்தகைய திடீர் எழுத்து என்பது சாதாரணமாக வந்துவிடவில்லை. பல தோல்விகளின் அனுபவம் மட்டுமே அதற்கு முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது. தற்போது உலகளவில் மிகுந்த பணக்காரராக இருக்கிற ஜே.கே. ரவுலிங் “எனது தோல்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளவே கற்பனையான உலகினைத் தேடிச் சென்றேன் ” என்று தனது படைப்பினைக் குறித்து தெரிவித்துள்ளார். மாயா ஜால உலகத்தைக் குறித்த அவரின் தொடர் எழுத்துக்கள் உலகின் முன்னணி படைப்பாளி என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்திருக்கிறது எனலாம்.

தோல்வி குறித்து ஜே.கே. ரவுலிங் “வாழ்க்கையில் தோல்வி அடையாமல் எதையும் சாதிக்க முடியாது. அப்படி தோல்வி அடையாமல் நீங்கள் வாழ்கிறீர்கள் என்றால் நீங்கள் உங்களது வாழ்வை வாழவே இல்லை என்று அர்த்தம்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

7ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincon)

உலகின் மிகச் சிறந்த அரசியல் வாதி எனக் கருதப்படும் ஆபிரகாம் லிங்கன் தனது வாழ்நாள் முழுவதும் தோற்று கொண்டே இருந்தார் என்பது தான் இங்கு குறிப்பிட வேண்டிய முக்கியமான விசயம். ஆரம்பத்தில் வணிகத் தொழில் செய்த போது பல தோல்விகளைத் தழுவினார். பின்னர் அரசியலில் பங்கு பெற்று மிக சிறந்த முறையில் ஆட்சி நடத்தினார் என்றாலும் ஆரம்ப அரசியல் காலத்தில் பல தோல்விகளைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்த இவரின் இளமைப் பருவமும் அவ்வளவு சிறப்புடையதாக அமைந்திருக்க வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

8. ஜெர்ரி சீன்ஃபீல்ட் (Jerry Seinfeld)

சிறந்த காமெடியன், நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் எனப் பல அடையாளங்களைக் கொண்டிருக்கிற ஜெர்ரி தனது பயணத்தை வெற்றியில் இருந்து ஆரம்பிக்கவில்லை. தனது இளம் வயதில் மேடை நகைச்சுவை நடிகராகப் பணியாற்றினார். தனது முதல் நாடக மேடைக்குச் செல்லாமல் பார்வையாளர்களை பார்த்து பயந்து மேடைக்குச் செல்லாமலே நின்றுவிட்டார். பின்னர் கடுமையான பயிற்சி எடுத்துக் கொண்டு அதே மேடையில் இரவு தொடங்கி அடுத்த நாள் காலை வரை பார்வையாளர்களை மகிழ்வித்து சிறந்த கலைஞர் என்ற பெயரையும் எடுத்தார். அவரது பயிற்சி, விடாமுயற்சி, தன்னம்பிக்கை மட்டுமே ஒரு சிறந்த கலைஞனை உருவாக்கி இருக்கிறது.

9. மைக்கேல் ஜோர்டன் (Michael Jordan)

மிகச்சிறந்த கூடை பந்து ஆட்டக்காரரான மைக்கேல் ஜோர்டனை உண்மையில் அவரது உயர்நிலை பள்ளி பயிற்சியாளர் பெயர் பட்டியலில் இருந்து எடுத்திருக்க வேண்டும். ஆனால் அன்றைக்கு அவர் கொடுத்த வாய்ப்பினால் மிகச் சிறந்த கூடை பந்தாட்ட வீரராக மாற முடிந்தது. காரணம் மைக்கேல் ஜோர்டன் தொடர் வெற்றி ஆட்டக்காரர் இல்லை என்பதை அவரே ஒத்துக் கொள்கிறார்.

“நான் எனது விளையாட்டில் 9000 க்கும் அதிகமான Shot களைத் தவற விட்டிருக்கிறேன். 300 க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் பங்கு கொள்வதற்கான வாய்ப்புக்களை இழந்துள்ளேன். மேலும் 26 போட்டிகளில் எனது அணி நான் தவற விட்ட Shot களினால் வெற்றி வாய்ப்பை இழந்தது. நான் தொடர்ந்து எனது விளையாட்டில் தோல்வியைத் தழுவிக்கொண்டே இருந்தேன். அதனால் தான் நான் வெற்றியடைய முடிந்தது” என்கிறார். தோல்வி ஒரு போதும் தடையாக இருப்பதில்லை என்பதனை இவரது முயற்சியே தெளிவு படுத்தும்.

10. எல்விஸ் பிரெஸ்லி (Elvis Presley)

ஓட்டுநராகப் பணியாற்றிய எல்விஸ் பிரெஸ்லி அதுவரை ஒரு சாதாரண தோல்வி வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வந்தார். அவரது தோற்றத்திற்கும் நடிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் Grand Ole Opry ஓட்டலில் தனது நடிப்பை வெளிப்படுத்தியதற்கு பின்புதான் “நீ எங்கேயும் செல்ல வேண்டாம் மகனே, உனது வாகனத்தின் சாவியைக் கொடுத்து விட்டு வா” என்ற வார்த்தைகள் தான் அவரை மிக சிறந்த நடிகராக உருவாக்கியது. எளிமையான தோற்றம் கூட கடும் முயற்சியினால் சினிமா துறையில் மிகச் சிறந்த வெற்றியைத் தேடித் தரும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.