தமிழகத்தில் மேலும் 17 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: முதல்வர் பழனிச்சாமி தகவல்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் சற்றுமுன் ஆலோசனை செய்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, இந்த ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா அறிகுறியுடன் 1,925 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடுமையான சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது மக்களின் நன்மைக்கு தான். சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவது மக்களை துன்புறுத்துவதற்காக அல்ல. இது போன்ற ஒரு சவாலான நிலையை தமிழக அரசு எதிர்கொண்டது இல்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும் ஒன்றரை கோடி முகக்கவசங்கள் வாங்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா அறிகுறி இருக்கும் நபர்களை மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்த முடியும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.