இயக்குனர் மகேந்திரனின் திரை பொக்கிஷங்கள்

நூறு வருட தமிழ் சினிமா குறித்து ஒரு வரலாற்று புத்தகம் எழுதினால் அதில் மகேந்திரன் பெயர் இடம்பெறவில்லை என்றால் அந்த புத்தகம் முழுமை அடையாது. அவர் இயக்கிய படங்கள் குறைவு என்றாலும், அந்த படங்கள் பேசப்பட்டது அதிகம். 'உதிரிப்பூக்கள்' குறித்து பேசாத திரையுலகினர்களே இருக்க முடியாது. அவர் இயக்கிய ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு பொக்கிஷம், உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, பூட்டாத பூட்டுக்கள், மெட்டி, நண்டு இவற்றில் எந்த படம், எந்த படத்தை விட சிறந்தது என்று ஒரு பட்டிமன்றம் வைத்தால் அதற்கு தீர்ப்பு சொல்ல யாராலும் முடியாது. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையில் சிறந்த படம்

முள்ளும் மலரும்: அண்ணன் தங்கை பாசப்படம் என்றாலே அனைவருக்கும் 'பாசமலர்' படம் தான் ஞாபகத்திற்கு வரும். அந்த படத்தை அடுத்து அண்ணன் தங்கை உறவை மிக அருமையாக சொன்ன படம் தான் முள்ளும் மலரும். இந்த படத்தின் நாயகன் காளி கதாபாத்திரம் தமிழில் இதுவரை வேறு எந்த இயக்குனரும் உருவாக்காத கதாபாத்திரம். சரத்பாபு தன்னை அவமானப்படுத்தி வேலையை விட்டு நீக்கிவிட்டதாக தவறாக எண்ணி துயரம் கொள்ளும் காளிக்கு, அதே என்ஜினியர் தன் தங்கையை காதலிப்பது தெரிந்ததும், பழிதீர்த்து கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பமாக கருதுகிறான். எஞ்சினியருக்கு தனது தங்கையை கொடுக்க மாட்டேன் என்று கூறும் காளியின் முட்டாள்தனமான முடிவை ஊரே எதிர்க்க, அதனை பொருட்படுத்தாமல் காளி ஊரையே எதிர்த்து நிற்கின்றாரன். ஒரு கை இழந்த போதிலும் தன் தங்கை தன்னைவிட்டு செல்ல மாட்டாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவனுக்கு இருக்கின்றது. ஆனால் அதையும் மீறி தங்கை எஞ்சினியருடன் செல்வதாக தகவல் வந்ததும் காளி அதிர்ச்சியுற, அவள் காதலனை தவிர்த்து அவனிடம் ஒடி வந்து மார்பில் சாய்ந்து அழுகிறாள். அப்போதுதான் காளியின் உள்ளே இருக்கும் முள் மலராகிறது. கர்வம், பழிவாங்கும் எண்ணம் அனைத்தும் உதிர்கிறது. தன் தங்கை தன்னை மீறி செல்ல மாட்டாள் என்ற கர்வத்தில் தன் தங்கையை அந்த என்ஜியிருக்கு திருமணம் செய்துவைக்க சம்மதம் தெரிவிக்கிறான். இப்படி ஒரு கேரக்டரை இனிமேலும் ஒரு இயக்குனர் உருவாக்க முடியுமா? என்பது சந்தேகமே!

உதிரிப்பூக்கள்: கடந்த 70கள், 80களில் தமிழ் சினிமாவின் கதாநாயகன் என்றால் நல்லவன், ஒழுக்கமானவன் என்றே காண்பிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதனை உடைத்து முதல்முறையாக கதாநாயகன் கெட்டவன் என்று தைரியத்துடன் ஒரு கேரக்டரை அமைத்திருந்தார் மகேந்திரன். புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தின் திரைக்கதையை மிகச் சிறப்பாக அமைத்திருந்தார் இயக்குநர் மகேந்திரன். கதையின் நாயகன் விஜயனை கொடூர வில்லனாக மட்டும் காட்டாமல், ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதுக்குள்ளும் இருக்கும், இன்னொரு பக்கத்தைக் காட்டியிருப்பார். மகேந்திரன். விஜயன், அஸ்வினி ஆகிய இருவரும் போட்டி போட்டு இந்த படத்தில் நடித்திருந்தனர். விஜயனை இயக்குனர் பாரதிராஜா அறிமுகம் செய்திருந்தாலும், இந்த படம் தான் விஜயனை ஒரு சிறந்த நடிகர் என்று அடையாளம் காட்டியது. மனைவி அஸ்வினியின் தங்கையை திருமணம் செய்ய முயல்வது, அதற்காக அஸ்வினியை சரத்பாபுவுடன் தொடர்பு வைத்து கதை கட்டிவிடுவது, இறுதியில் அஸ்வினியின் தங்கையை பலாத்காரம் செய்ததால் ஊரே எதிர்க்கும் நிலையில் தற்கொலை செய்து கொள்வது என இந்த கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த படத்தில் அஸ்வினியின் அப்பாவாக சாருஹாசன் அறிமுகமாகியிருந்தார். அஸ்வினியின் தங்கையாக வரும் மதுமாலினி, சுகாதார அதிகாரியாக சரத்பாபு, விஜயனின் தம்பியாக மனோரமாவின் மகன் பூபதி, விஜயன், அஸ்வினி குழந்தைகளாக அஞ்சு மற்றும், 'மாஸ்டர்' காஜா ஷெரிப் ஆகியோர் நடித்திருந்தனர்

மெட்டி: மகேந்திரன் செதுக்கிய இன்னொரு திரைச்சிற்பம் தான் இந்த மெட்டி. திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களில் ஒருவள், வீட்டை விட்டு ஓடி ஒருவனை திருமணம் செய்து கொள்வார். அதன்பின்னர் கணவனின் சித்ரவதை தாங்க முடியாமல் வீடு திரும்பும் அந்த பெண்ணுக்கு வாதம் தாக்கியதால் ஊனமுற்றவர் ஆகிறார். அந்த சமயத்தில் அடுத்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கும் அண்ணன் திருமணத்தன்று மெட்டி வாங்க செல்லும்போது எதிர்பாராத வகையில் லாரியில் அடிப்பட்டு மரணம் அடைந்து போகிறான். கடைசிவரை அந்த வீட்டில் மெட்டி ஒலி கேட்காது. திருமணத்திற்கு தயாராக இருக்கும் அந்த பெண் முதல்முறையாக இறந்துபோன தன் அண்ணனை அண்ணா என்று அழைக்கிறாள். இந்த கதையை இளையராஜாவின் உதவியோடு ஒரு காவியமாக உருவாக்கியிருப்பார் மகேந்திரன். மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட என்ற பாடல் இன்றும் அனைவரது மனதில் ஒலித்து கொண்டே இருக்கும்,

கை கொடுக்கும் கை: ரஜினிகாந்த், ரேவதி, மகேந்திரன், இளையராஜா என பல பிரபலங்கள் இந்த படத்தில் இருந்தும் இந்த படம் தோல்வி அடைந்தது. ரஜினிகாந்த் மனைவியான பார்வையற்ற பெண்ணாக ரேவதி நடித்திருப்பார். ரேவதியை ஏமாற்றி அவளோடு வில்லன் வல்லுறவு கொள்கிறான். தன் மனைவியிடம் தவறாக நடந்து கொண்டவனை கொலை செய்ய செல்லும் நாயகன் தவறிழைத்தவனின் மனைவியின் கெஞ்சலுக்கு இரக்கப்பட்டு கொலை செய்யாமல் விட்டுவிடுகிறான். பின்னர் தன் மனைவியை அழைத்துக்கொண்டு அந்த ஊரை விட்டே சென்றுவிடுவான். வில்லனை ஹீரோ பழிவாங்கியே பழக்கப்பட்ட கதையை பார்த்த ரசிகர்கள், வில்லனை ஹீரோ மன்னித்துவிடுவதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாததால் இந்த படம் தோல்வி அடைந்ததாக கூறப்படுவதுண்டு

நெஞ்சத்தை கிள்ளாதே: சுஹாசினியை மகேந்திரன் அறிமுகம் செய்த படம் இது. மோகன் சுஹாசினியை காதலிப்பார். ஆனால் மோகனின் தவறான வார்த்தைகளால் மனமுடைந்த சுஹாசினி, மோகனை பிரிந்து பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொள்வார். ஆனால் அவரால் பிரதாப் போத்தனோடு வாழ இயலாது. மீண்டும் மோகனை தேடி வருவார். ஆனால் மோகன் அப்போது ஒரு ஊனமுற்ற பெண்னை திருமணம் செய்திருப்பார். சுஹாசினிக்கு செய்த துரோகத்திற்கு பரிகாரமாக ஊனமுற்ற பெண்ணுக்கு வாழ்வு கொடுத்ததாக கூறுவார். இந்த படத்திற்கும் வழக்கம்போல் இளையராஜா தனது பின்னணி இசையாலும் பாடலாலும் உயிர் கொடுத்திருப்பார்.

மேலும் இயக்குனர் மகேந்திரன் சிவாஜி கணேசன் நடித்த 'தங்கப்பதக்கம், 'ரிஷிமூலம், 'நிறைகுடம், 'ஹிட்லர் உமர்நாத்' போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். எம்ஜிஆர் படங்களில் அவர் பணிபுரியவில்லை என்றாலும் எம்ஜிஆருக்காக பொன்னியின் செல்வன் நாவலை திரைக்கதை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அந்த பணியை அவரால் முடிக்க முடியவில்லை.

இயக்குனர் மகேந்திரன் நம்மை விட்டு மறைந்தாலும் அவரது திரைப்பொக்கிஷங்கள் தமிழ் சினிமா உள்ளவரை வாழும். அவருடைய திரைப்படங்களுக்கு அழிவே இல்லை என்பதுதான் அவரது மிகப்பெரிய வெற்றி

More News

ரஃபேல் புத்தகம் - மோடி திரைப்படம்: ஒப்பிடும் நடிகர் பிரகாஷ்ராஜ்

எழுத்தாளர் எஸ்.விஜயன் எழுதிய ரஃபேல் ஊழல் குறித்த புத்தகம் இன்று சென்னையில் இந்து என்.ராம் அவர்களால் வெளியிட இருந்த நிலையில் திடீரென இந்த புத்தகத்திற்கு தமிழக தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

மேலும் 2 நிர்வாகிகள் ராஜினாமா? என்ன நடக்கின்றது கமல் கட்சியில்?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கருத்துவேறுபாடு காரணமாக சமீபத்தில் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான குமரவேல் விலகினார்.

நான் கர்ப்பம் என்று எனக்கே தெரியாது: எமி ஜாக்சன்

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய '2.0' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நடிகை எமிஜாக்சன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.

சென்னை திரும்பிய 'நேர்கொண்ட பார்வை' டீம்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராம் பிலிம் சிட்டியில் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

ராஜு முருகனின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான ராஜூமுருகன் இயக்கிய 'ஜோக்கர்', 'ஜிப்ஸி' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் கதை வசனம் எழுதிய திரைப்படம் 'மெஹந்தி சர்க்கஸ்'.