close
Choose your channels

சுந்தர் பிச்சையின் காதல் மனைவி பற்றி தெரியுமா? வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ரகசியம்!

Thursday, July 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் செயல் தலைவர் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பற்றி அனைவருக்கும் தெரிந்து இருக்கும். ஆனால் இவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் டிவி, கார் கூட இல்லாத ஒரு ஏழை மாணவருக்குப் பின்னால் ஒரு பெண்ணின் அசாத்தியமான காதலும் துணை நின்றிருக்கிறது.

சென்னையில் பிறந்து வளர்ந்த சுந்தர் பிச்சை தனது உயர் கல்வியை காரக்பூரில் உள்ள ஐஐடியில் துவங்கினார். பி.டெக் உலோகப் பொறியியல் படிப்பை தேர்வுசெய்த இவருடைய வகுப்பு தோழியாக வந்தவர்தான் அஞ்சலி. இவர் அதே நிறுவனத்தில் பி.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டு இருந்தார். இருவரும் நண்பர்களானார்கள். இந்த நட்பு, இனம்புரியாத வேறொரு தளத்திற்குள் செல்வதை இருவருமே உணர்ந்து இருந்தனர்.

இதை உணர்ந்த உடனேயே சுந்தர் பிச்சை தனது காதலை அஞ்சலியிடம் வெளிப்படுத்தினாராம். டிவி, கார் என எந்த வசதியும் இல்லாத சுந்தர் பிச்சையை அப்போதே எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அஞ்சலி ஏற்றுக் கொண்டு இருக்கிறார். அதோடு கல்லூரி இறுதியாண்டு முடியும்போதே இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து இருக்கிறது.

இப்படியொரு புது பந்தத்திற்குள் அவர் சென்றுவிட்டாலும் பொருளாதாரத்தில் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்த அவர் தனது மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். உதவித்தொகையுடன் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் படிப்பையும் முடித்து இருக்கிறார். பின்னர் உலகப்புகழ் பெற்ற வாட்டர்ன் வணிகப் பள்ளியில் எம்.பி.ஏ படிப்பையும் முடித்துள்ளார்.

இப்படி தனது படிப்புக்காக அமெரிக்கா சென்றுவிட்ட அவர் தனது காதலியிடம் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே பேசியிருக்கிறார். அதுவும் சில மாதம் நடக்காமலேயே இருந்திருக்கிறது. ஆனால் உள்ளூற ஒன்றிவிட்ட காதலை மறக்காமல் இருந்த இருவரும் இந்திய முறைப்படி பின்னர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலி தனது படிப்பை முடிப்பதற்கு முன்பே ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்து விட்டார். அடுத்து புகழ்பெற்ற ஆக்செனச்சர் நிறுவனத்தில் பணியாற்றத் துவங்கிய இவர் தற்போது இண்டுயுட் பிஸ்னஸ் நிறுவனத்தில் ஆப்ரேஷன் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

சாதாரண மாணவரான சுந்தர் பிச்சையை கரம்பிடித்த இவர் தற்போது உலகப் புகழ்பெற்ற பணக்காரர் ஒருவரின் மனைவியாக உயர்ந்து இருக்கிறார். இந்த உயர்வுக்கு அஞ்சலியின் மென்மையான காதலும் ஒரு காரணமாக இருந்து இருக்கிறது. அதோடு தன்னுடைய கெரியரிலும் அவர் அசத்தி வருகிறார்.

இதைத்தவிர சுந்தர் பிச்சையின் உயர்வுக்கு மற்றொரு காரணமும் இருந்திருக்கிறது. படிப்பை முடித்தவுடன் அவருக்கு மைக்ரோசாஃப்ட், யாகூ, டிவிட்டர் எனப் பல நிறுவனங்களில் இருந்தும் அழைப்பு வந்ததாம். ஆனால் இந்த அழைப்புகளை எல்லாம் தட்டிக் கழிக்கச் சொன்னாராம் அஞ்சலி. பின்னர் கடந்த 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணி கிடைத்தவுடன் உடனே சேர்ந்து கொள்ள சொல்லி இருக்கிறார். அன்றைக்கு அஞ்சலி எடுத்த திறமையான முடிவுதான் உலகின் பெரிய நிறுவனத்திற்கு தற்போது அவரை சிஇஓவாக உயர்த்தி இருக்கிறது என்கின்றனர் சிலர்.

இந்த விஷயத்தை சுந்தர் பிச்சையும் பெருமையோடு கூறியுள்ளார். அதோடு அஞ்சலியை பார்ப்பதற்காக அவருடைய ஹாஸ்டலுக்கே சென்ற கதையை எல்லாம் அவர் மாணவர்கள் மத்தியில் நினைவு கூர்ந்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் பின்னர் 2015 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் செயல் தலைவராக உயர்ந்து இருக்கிறார். அதோடு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அல்ஃபாபெட்டின் செயல்தலைவராகவும் இருந்து வருகிறார்.

தற்போது கலிபோர்னியாவில் உள்ள லாஸ் அல்டோஸ் ஹில்ஸ் அருகில் ஒரு ஆடம்பரமான பங்களாவில் வசித்து வரும் சுந்தர் பிச்சை- அஞ்சலி தம்பதிகளுக்கு கிரண், காவ்யா என இரு குழந்தைகள் உள்ளனர். க்ரோம் செயலி, யுடியூப், கூகுள் மேப், ஆன்ட்ராய்ட் என கூகுளுக்கு வருமானத்தை எகிற வைக்கும் அனைத்து முன்னெடுப்பிற்கும் பின்னாலும் சுந்தர் பிச்சை இருந்து வருகிறார். தற்போது உலகின் அதிகச் சம்பளம் வாங்கும் பட்டியலிலும் இவருடைய பெயர் இடம்பெற்று இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.