close
Choose your channels

தீபாவளி, தசரா, கிறிஸ்துமஸ் எல்லாம் இனி இப்படித்தான்… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!!!

Wednesday, October 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தீபாவளி, தசரா, கிறிஸ்துமஸ் எல்லாம் இனி இப்படித்தான்… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!!!

 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. பின்பு பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கைப் போன்ற காரணங்களுக்காக மத்திய அரசு தொடர்ந்து விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகளைக் கொண்டுவந்தது. இப்படி பெரும்பாலான விதிமுறைகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டாலும் தற்போது வரை தியேட்டர்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள், பண்டிகைகள், பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர்ந்து தடைகள் நீடிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை தீபாவளி, தசரா, துர்கா பூஜை, விஜயதசமி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் வரவிருக்கிறது. இந்தியக் கலாச்சாரத்தில் பண்டிகைகள் என்றாலே விமர்சையாக கொண்டாடப் படுவதோடு அதற்கு தனி உற்சாகத்தையும் மக்கள் அளிப்பது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காலத்தில் எப்போதும் போல பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கும், கூட்டம் கூடுவதற்கும் அனுமதி வழங்க முடியாத நிலையில் மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.

அதில், “பண்டிகை கொண்டாட்டங்கள், கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே மட்டும் அனுமதிக்கப் படுகின்றன. கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளுக்குள் மட்டுமே கொண்டாட்டங்களை வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர வெளியே வரக்கூடாது. மேலும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், நாள்பட்ட வியாதிகள் உடையவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே தங்க அறிவுறுத்தப் படுகிறார்கள்.

பண்டிகை காலத்தில் பதிவு செய்யப்பட்ட பக்தி இசையும், பாடல்களும் இசைக்கப் படலாம். ஆனால் பாடகர்கள் அல்லது பாடகர் குழுக்களுக்கு அனுமதி இல்லை. தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டி இருப்பதைக் கருத்தில் கொண்டு கொண்டாட்ட இடங்கள், பொதுமக்கள் பார்வையிடக் கூடிய அனைத்து இடங்களிலும் போதுமான தரை பரப்பையும் சரியான அடையாளங்களையும் கொண்டிருக்க வேண்டும். தொற்று அறிகுறியற்ற பார்வையாளர்கள் ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப் படுவார்கள்.

பார்வையாளர்களும், பணியாளர்களும் முக கவசம், முக ஷீல்டு அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளியை பராமரிக்க வேண்டும். அதற்கான அடையாளங்கள் வரைந்திருக்க வேண்டும். பேரணிகள், ஊர்வலங்கள், சிலை கரைப்பு போன்றவற்றுக்கான இடங்களை அடையாளம் காண வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில்தான் மக்கள் வரவேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். நீண்ட தூரங்களுக்கு பேரணி, ஊர்வலம் நடத்துகிறபோது, ஆம்புலன்ஸ் சேவை உடன் இருக்க வேண்டும்.

கண்காட்சிகள், பூஜை பந்தல்கள், ராம்லீலா போன்ற நிகழ்வுகள் நாள் கணக்கில், வாரக்கணக்கில் நீடிக்கும் நிகழ்வுகள் பந்தல்கள், இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களை கொண்டே நடத்த போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பந்தல்கள், உணவு பரிமாறும் கூடங்கள் போன்றவற்றில் இருக்கைகள் தனிமனித இடைவெளியை பின்பற்றி அமைக்க வேண்டும். கடைகள், ஸ்டால்கள், சிற்றுண்டி கூடங்கள் ஆகியவற்றில் எல்லா நேரங்களிலும் தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும்.

சமூக சமையலறைகள், அன்னதான நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் தனிமனித இடைவெளியை பராமரிக்க வேண்டும். நாடக மற்றும் சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள், மேடை கலைஞர்களுக்கும் பொருந்தும். கொண்டாட்ட நிகழ்விடங்களில் துப்புரவு பணியாளர்கள், வெப்ப பரிசோதனையாளர்களுக்கு ஏற்பாடு செய்வதுடன் தரையில் தனிமனித இடைவெளி அடையாளங்கள் வரைந்திருக்க வேண்டும். யாரும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர் எனக் கண்டறியப்பட்டால் அந்த வளாகத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

தனிமனித இடைவெளியை பின்பற்றுவதையும் முகக்கவசம் அணிவதையும் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வ்ணடும். யாரும் எச்சில் துப்பக்கூடாது. அனைத்துக் கொண்டாட்ட நிகழ்வுகளிலும் சுகாதார அவசர நிலைகளுக்கு செல்வதற்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உள்ளூர் நிலைமைக்கு ஏற்பவும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ள வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு ஏற்பவும் தகுதிவாய்ந்த உள்ளூர் நிர்வாகம் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.