close
Choose your channels

"உலகத் தாய்மொழி தினம்" பிப்ரவரி 21

Friday, February 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

"கருவோடு உருகொடுத்து

உருவோடு உயிர்கொடுத்து

உயிரோடு உணர்வாக

உயிர் மெய்யை

மொழியென சேர்த்தூட்டி

உயிருக்கும் உறவுக்கும்

அடையாளப்படுத்திய "தாய்மொழி தினம்" இன்று.

மொழி ஒரு அழகான ஊடகம். எழுத்துக்களைச் சேர்த்து, வார்த்தைகளைக் கோர்த்து, வாக்கியமாக்கி அது மற்றவருக்குப் போய் சேரும் போது ஒரு மொழி முழுமை பெற்று விடுகிறது. எந்த மொழியாக இருந்தாலும் இதே சுவையோடு தான் இருக்கும்.

எல்லா மொழிகளும் சுவையுடையது என்றால், எதற்கு தாய்மொழிக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம்? என்று கேட்கலாம். ஒரு குழந்தை பிறந்தது முதல் வளரும் வரை எந்த ஒரு மொழியில் உரையாடுகிறதோ? எந்த மொழியில் எல்லா அறிவையும் பெறுகிறதோ? அந்த மொழிதான் ஒருவரின் மூளையில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் என்று உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தாய்மொழி வழியாக எந்த நாடு கல்வியைப் போதிக்கிறதோ அதுதான் நல்ல பலனையும் பெற்றிருக்கிறது. இந்தக் காரணங்களே தாய்மொழியைக் கொண்டாடுவதற்கு அடிப்படையாக இருக்கிறது.

கிழக்குப் பாகிஸ்தான் வங்கதேசமாக மாறுவதற்கு முன்பு வங்காள மொழியை ஆங்கீகரிக்க வேண்டி கடும் போராட்டங்கள் வெடித்தன. இம்மொழி போராட்டத்தில் டாக்காவை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் சலாம், பர்கட், ரபீக், ஜபார் மற்றும் ஷபியூர் தங்களது இன்னுயிரை நீத்தனர். இவர்களின் நினைவாக தாய்மொழி நாள் கொண்டாடப் பட வேண்டும் என்று வங்கதேச அரசாங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகள் கோரிக்கை வைத்தன. இந்தக் கோரிக்கையை ஏற்ற ஐக்கிய நாடுகளின் யுனஸ்கோ அமைப்பு 1999 இல் "பிப்ரவரி 21" ஐ சர்வதேச தாய்மொழி தினமாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 21 உலகம் முழுவதும்”தாய்மொழி” தினமாகக் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

மொழி என்பதை வெறுமனே எழுத்துக்களால் ஆன ஒரு கருவூலம் என்று நினைத்து விட முடியாது. ஒரு மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம், பண்பாடு, இன வரலாறு, சிந்தனை எல்லாவற்றையும் தன்னுள் தேக்கி வைத்திருக்கும் புதையல் என்றே சொல்லலாம். ஒரு மொழி வழங்கப்படும் அந்த இனத்தின் அனைத்து வளங்களையும் ஒரு மொழி பிரதிபலித்து காட்டுகிறது.

ஒரு மொழியை அறிவது என்பது அதன் பண்பாட்டினை முழுமையாக உணர்ந்து கொள்வதற்கு வழிவகுக்கும் என்பதை ஆய்வாளர்கள் எப்போதும் ஒப்புக் கொண்டுள்ளனர். மொழி எப்போதும் அதன் சூழல் அமைவினை (Context of situation) பொறுத்தே வழங்கப் படுகின்றது என மானிடவியலாளர் (Anthropology) மாலினோவஸ்கி குறிப்பிடுகிறார்.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு உலகளவில் 7 ஆயிரம் மொழிகள் இருந்த நிலைமை மாறி இன்றைக்கு 3 ஆயிரமாக குறைந்து காணப்படுகிறது. அறிவியல், இனவரைவியல் (Ethnography), மானிடவியல் (Anthropology) எல்லாம் வளர்ந்து விட்ட காலத்திலும் உலகில் 1000 மொழிகளுக்கும் மேலாக எழுத்து வடிவம் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதும் பெரும் வேதனைக்குரிய விஷயமாகவே இருக்கிறது.

உலகளவில் பல மொழிகள் வளம் பெற்றவையாக இருந்தும் கல்வி மொழியாக அறிவிக்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. உலகமயமாக்கத்தின் விளையாக தாய் மொழியைத் தவிர்த்து உலகளாவிய மொழிக்கே அனைவரும் முக்கியத்துவம் தந்து வருகின்றனர். இதனால் தாய்மொழிகளின் நிலைமை கேள்விக்குறியாக மாறிப்போகிறது.

அதே நேரத்தில் ஒரு மொழி இன்னொரு மொழி மீது ஆதிக்கம் செலுத்துவதை ஒரு போதும் நல்ல விஷயமாகக் கருத முடியாது. உலகில் வழங்கப் படும் ஒவ்வொரு மொழிக்கும் உரிய மரியாதையும் முக்கியத்துவமும் வழங்கப் படவேண்டியது அவசியமான ஒன்று. இதனை வலியுறுத்தும் விதமாகவே உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப் படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.