ஜெயலலிதா பிறந்த நாள், ஸ்ரீதேவி மறைந்த நாள்: இருவரும் இணைந்த புகைப்படம் வைரல்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழக அரசு விழாவாக இதனை கொண்டாடி வருகிறது என்பதும் அதிமுகவினர் ஜெயலலிதாவின் சிலைகளுக்கும் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெயலலிதா என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் இன்று காலை முதல் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 24ஆம் தேதி தான் பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தார். அவர் மறைந்து 5 ஆண்டுகள் ஆனதை அடுத்து ஸ்ரீதேவி குறித்த ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் வைரல ஆகி வருகின்றன.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளும் ஸ்ரீதேவியின் மறைந்த நாளும் ஒரே நாளில் வருவதை அடுத்து ஒரு சில ரசிகர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ஒன்றின் புகைப்படத்தை பதிவு செய்து வைரலாக்கி வருகின்றனர்.
கடந்த 1971ஆம் ஆண்டு வெளியான ‘ஆதிபராசக்தி’ என்ற படத்தில் ஜெயலலிதா பார்வதியாகவும் குழந்தை நட்சத்திரமான ஸ்ரீதேவி முருகனாகவும் நடித்திருந்தனர். அந்த வகையில் ஜெயலலிதா மடியில் ஸ்ரீதேவி உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து இருவரும் இன்று நம்மிடம் இல்லையே என்று ரசிகர்கள் வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.