close
Choose your channels

விவாத நிகழ்ச்சியில் ஆபாச வார்த்தை பேசிய ஊடகவியலாளர்....! வலுக்கும் கண்டனம்.....!

Thursday, August 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனியார் தொலைக்காட்சி ஒன்றில், விவாத நிகழ்ச்சியின் போது ஆபாச வார்த்தைகள் பேசிய ஊடகவியலாளருக்கு, சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

"பெகசஸ் போன் ஒட்டுகேட்பு விவகாரம்" குறித்து பிரபல தனியார் சேனல் நிகழ்ச்சியில், பத்திரிகையாளர் வெங்கடேஷ் பெண்களை குறித்து தவறாகவும், இழிவுபடுத்தும் வகையில் பேசியது சமூகவலைத்தளங்களில் அதுகுறித்த காணொளி வைரலாகி வருகிறது. நெறியாளர் கேட்ட கேள்விக்கு, நாக்கூசும் அளவிற்கு பத்திரிக்கையாளர் பதில் கூறியுள்ளார். இதை இடைமறித்த நெறியாளர் சபை நாகரீகமறிந்து பேசுங்கள் என்று எச்சரித்துள்ளார். இதன்பின் பத்திரிகையாளர் வெங்கடேஷ், பெகசஸ் குறித்து பேச துவங்கியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து டுவிட்டரில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் பத்திரிக்கையாளர் வெங்கடேஷ். "இத்தனை ஆண்டுகளாக தொலைக்காட்சி விவாதங்களில் நான் கட்டிக் காத்து வந்த மரபையும் கண்ணியத்தையும் இன்று மீறிவிட்டேன். என் நேயர்கள் என்னை மன்னிக்கவும்" என்ற டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இவர் மன்னிப்பு கேட்டிருந்தாலும், இவரின் பேச்சுக்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது.இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, 'பெண் பத்தினியா இல்லையா என்பதை தாண்டி சிந்திக்ககூடிய அளவு இவரைப்போன்றவர்களின் அறிவு எப்போது வளரும்" என்ற கோபமான கேள்வி ஒன்றை கேட்டுள்ளார்.

பத்திரிகையாளர் ஐயன் கார்த்திகேயன் "பத்திரிகையாளன் நிலைமையை பாரீர். ! இந்தக் கேவலங்களை அனுமதிக்கவே கூடாது" என்றும், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் "பதில் சொல்ல முடியாத பல கேள்விகளுக்கு' எப்போதும் அது தான் பதிலாக இருந்திருக்கிறது. ஒரு பொது ஊடகத்தில் கடும் கண்டனத்துக்குரிய இந்த நிகழ்வு, இனி தொடராமல் இருப்பது தொலைக்காட்சிகள் காக்க வேண்டிய அறம்" என்றும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.