அரசு மருத்துவமனையில் குழந்தைப் பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர்… குவியும் பாராட்டு!
- IndiaGlitz, [Friday,August 20 2021]
கேரளாவில் பணியாற்றிவரும் சப்-கலெக்டர் ஒருவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். தான் ஒரு சப்-கலெக்டர் மற்றும் கணவர் ஒரு மருத்துவர் என்ற அந்தஸ்தை எல்லாம் விட்டுவிட்டு அரசு மருத்துவமனையைத் தேடிவந்த சம்பவம் பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள கரடிப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலா ஸ்ரீ. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற்று தற்போது கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் சப்-கலெக்டராக பணியாற்றி வருகிறார். தன்னுடைய பிரசவத்திற்காக சொந்த ஊருக்கு வந்த அவர், சொந்த பந்தங்கள் எவ்வளவோ கூறியும் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுகொள்ள வேண்டும் என விரும்பி இருக்கிறார்.
இதனால் கடந்த 11 ஆம் தேதி சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். சப்- கலெக்டராக இருந்துவரும் தர்மலா ஸ்ரீ செய்த இந்தக் காரியம் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
மேலும் அரசு அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை இது ஒருபடி மேலே உயர்த்தும் என்றும் பொதுமக்கள் கருத்துக் கூறிவருகின்றனர்.