நான் என்ன அஜித், விஜய் படத்தையா இயக்கியுள்ளேன்: சிம்பு படத்தயாரிப்பாளர் ஆதங்கம்
சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ என்ற படத்தை தயாரிக்கவிருக்கும் இயக்குனர் சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் சமீபத்தில் ‘மிக மிக அவசரம்’ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஊடகங்கள் நல்ல விமர்சனங்களை கொடுத்த போதிலும் போதிய திரையரங்கம் மற்றும் மாலை, இரவு காட்சிகள் கிடைக்காததால் எதிர்பார்த்த வசூல் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் சுரேஷ் காமாட்சி கூறியபோது, ‘கடந்த நவம்பர் 8ம் தேதி ’மிக மிக அவசரம்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும் திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் தான் தரப்படுகிறது. காலை மற்றும் மதியம் காட்சிகளில் யார் திரையரங்கிற்கு வருவார்கள்? நான் என்ன விஜய், அஜித் படத்தையா எடுத்திருக்கிறேன்? என ஆதங்கத்துடன் கூறியுள்ளார். மேலும் சின்ன பட்ஜெட் படங்கள் சாவடிக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மிக மிக அவசரம் படத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் புதுவை முதல்வர் நாராயணசாமி உள்பட பல முக்கிய தலைவர்கள் இந்த படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.