close
Choose your channels

நேர்மைக்காகப் புகழப்பட்ட சகாயம் ஐஏஎஸ் பணியில் இருந்து ஓய்வா???

Wednesday, January 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மதுரைப் பகுதியில் நடைபெற்று வந்த மணல் மாஃபியாக்களை வெளி உலகிற்கு தெரியப்படுத்தியதன் மூலம் மக்கள் மனதில் பெரும் மதிப்பை பெற்றவர் சகாயம் ஐஏஎஸ். இவர் இதற்கு முன்பும் பல இடங்களில் கலெக்டராகப் பணியாற்றி தனது நேர்மையால் புகழப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் இளைஞர் மத்தியிலும் பெரும் எழுச்சி அலையை ஏற்படுத்தியவர். மேலும் இவரது அரசியல் வருகையைக் குறித்து ஊடகங்கள் எப்போதும் ஆர்வம் காட்டி வருகின்றன.

இவரது ஓய்விற்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து உள்ளார் என்ற தகவல் வெளியானது. ஆனால் இவரது விண்ணப்பம் குறித்து உடனடியாக முடிவெடுக்காத அரசு நிர்வாகம் இன்று சகாயம் ஐஏஎஸை பணியில் இருந்து விடுவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சகாயத்தின் விருப்ப ஓய்வுக்கு என்ன காரணம் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தருமபுரி மாவட்ட பயிற்சி அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய இவர் பல துறைகளில் நேர்மையான அதிகாரி என்ற பெயரை எடுத்து இருக்கிறார். நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருக்கும்போது தனது சொத்து விவரத்தை வெளியிட்டு ஊடகங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து மதுரை மாவட்ட கலெக்டராக பணியாற்றிபோது அங்கு நடைபெறும் மணல் கொள்ளை ஊழலை கண்டுபிடித்து பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தார். இதனால் பல முக்கியப் புள்ளிகளின் எதிர்ப்பையும் மறைமுகமாக சம்பாதித்துக் கொண்டார்.

இந்தக் கட்டத்தில்தான் சகாயம் கோ ஆப் டெக்ஸ்ஸின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார். ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியை உயர் பதவிக்கு பயன்படுத்திக் கொள்ளாமல் இப்படி ஒதுக்கப்படுகிறாரே என்ற கேள்வி அப்போதே எழுப்பப்பட்டது. ஆனால் அந்தத் துறையிலும் சகாயம் சிறப்பாக செயல்பட்டு கைத்தறி துணிகள் விற்பனையில் சாதனை செய்து காட்டினார். அதோடு தமிழக இளைஞர்கள் மத்தியில் வேட்டி தினத்தைக் கொண்டாட வைத்தார்.

தமிழகத்தில் பேரிடர் காலங்களின்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பணி ஒதுக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைகள் கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்று சகாயம் ஐஏஎஸை தமிழக தலைமைச் செயலகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு முடிவு எடுத்ததாக அவரது தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சயின்ஸ் சிட்டி எனும் தமிழ்நாடு அறிவியல் நகரத் துணை தலைவராக பணியாற்றி வந்த இவரது ஓய்வுக்கு இன்னும் 3 ஆண்டுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விருப்ப ஓய்வு பெறுகிறார். இதனால், அடுத்து இவரின் வேலைத் திட்டம் என்னவாக இருக்கும் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பெரும்பாலும் இவரது தேர்வு அரசியலாகத்தான் இருக்கும் எனப் பல இளைஞர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றர். ஏற்கனவே இளைஞர்கள் மத்தியில் ஊழலுக்கு எதிரான தனது முழக்கத்தால் மதிக்கப்பட்டவர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.