ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சசிகலா மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 கோடி அபராதம் விதிக்கப்பட்ட சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட இருக்கிறார். இவரது வருகை தமிழக அரசியலில் பல மாற்றங்களையும் அழுத்தங்களையும் கொண்டுவரக் கூடும் எனக் கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுதலைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் தருவாயில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதனால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் அவருக்கு முதற்கட்டமாக சிறை மருத்துவமனையில் சிகிக்கை வழங்கப்பட்டது. ஆனால் மூச்சுத் திணறல் அதிகரித்த நிலையில் நேற்று மாலை 5.45 மணிக்கு, மேல் சிகிச்சைக்காக பெங்களூரு பவுரிங்கு அரசு மருத்துவமனையில் தண்டனை கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப் பட்டார்.
அங்கு சசிகலாவிற்கு ஆன்டிஜென் கொரோனா பரிசோதனை செய்யப்படது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட உடல் பரிசோதனையில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் ரத்ததில் ஆக்சிஜன் அளவு 84% இருப்பதாகவும் இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் கூறி சசிகலாவிற்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் சசிகலாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் அதனால் சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டு மீண்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.