close
Choose your channels

உலக அதிசயத்தில் ஒன்றாக இடம் பெற போகிறது தஞ்சை பெரிய கோவில்..! ஒருங்கிணைப்புக்குழு முழு முயற்சி.

Thursday, February 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்று முடிந்திருக்கிற வேளையில், பெரிய கோயிலை உலக அதிசயங்களின் பட்டியலில் சேர்ப்பதற்காக சமூக ஆர்வலர்கள் இணைந்து குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

தஞ்சாவூர் பெரியகோயில் உலகப் புகழ்பெற்று விளங்கி வருவதுடன், வானை முட்டி நிற்கும் 216 அடி கொண்ட விமானக் கோபுரத்துடன் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. கட்டுமான வசதிகள் எதுவும் இல்லாத காலத்திலேயே கற்களைக்கொண்டு மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள பெரியகோயிலை உலகக் கட்டடக் கலை வல்லுநர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டுள்ள பெரிய கோயில் தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்துள்ளது. மேலும், யுனெஸ்கோவால் உலகப் பரம்பர்யச் சின்னங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொல்லியல் துறை மற்றும் தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோயிலைக் காண தினமும் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் உலக அதிசயங்களின் ஒன்றாக இக்கோவிலையும் இடம்பெற வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த மணிவண்ணன் கூறியது, "தஞ்சைப் பெரிய கோயில் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல; உலகுக்கே சொந்தமானது. அத்துடன் உலகையும் உலக மக்களையும் இணைக்கும் பொக்கிஷமாகத் திகழ்ந்து வருகிறது. தமிழர்களின் மிகப்பெரிய அடையாளமாகவும் விளங்கி வருகிறது. இதை உலக அதிசயப் பட்டியலில் சேர்ப்பதற்கான குழுவை உருவாக்கியுள்ளோம்.

தொல்லியல்துறையின் கட்டுமான வல்லுநரும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுமான உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில், கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன், ஓய்வு பெற்ற தலைமைச் செயலர், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரைக்கொண்டு அக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.எங்களுடைய செயல்பாடு என்னவென்றால், விரைவிலேயே உலக அதிசயங்கள் ஏழுடன் சேர்த்து, எட்டாவது உலக அதிசயமாக பெரிய கோயிலைச் சேர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதுதான். கோயிலின் பெருமை இன்னும் பல மடங்கு உலகம் முழுக்க எடுத்துச் செல்லப்பட உள்ளது.

இதற்காக தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் மற்றும் உலக மக்கள் அனைவரிடையே ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. உலக அதிசயப் பட்டியலில் இணைப்பதற்காக கோடிக்கணக்கானவர்கள் வாக்களிக்க உள்ளனர். அதன் பின்னர் உலக அதிசயக் குழுவைக் கோயிலுக்கு அழைத்து வந்து பார்வையிட வைக்க உள்ளோம்." என்று கூறினார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.