close
Choose your channels

உலகம்; ஊரடங்கு உத்தரவில் நசுக்கப்பட்ட பலரது மனிதஉரிமைகள்!!!

Friday, April 10, 2020 • தமிழ் Comments

உலகம்; ஊரடங்கு உத்தரவில் நசுக்கப்பட்ட பலரது மனிதஉரிமைகள்!!!

 

கொரோனா பரவல் தடுப்புக்காக உலகிலுள்ள அனைத்து அரசாங்கங்களும் தங்களது மக்களை ஊரடங்கில் இருக்குமாறு அறிவுறுத்துகிறது. இந்த அறிவுறுத்தல் முறையானது நாட்டுக்கு நாடு மாறுபடவும் செய்கிறது. உலகில் அதிகம் பாதிப்புள்ள அமெரிக்கா தன் நாட்டு மக்களை 144 ஊரடங்கு தடை உத்தரவு போட்டு மக்களை கட்டுப்படுத்தவில்லை. அதிபர் ட்ரம்ப் நாட்டு மக்களை சமூக விலகலில் இருக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கான காலைவரையறையும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதிபரின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்த அறிவிப்பு ஒரு தனிமனிதச் சுதந்திரத்துடனான அணுகல் போக்கைக் கொண்டிருப்பதாக உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஆனால், மற்ற நாடுகளில் இதே போன்ற தனிமனித சுதந்திரம், கருணை போன்ற நிலைமைகளை எதிர்ப்பார்க்க முடியுமா என்றால் அது கடினம். ஏனெனில் உலகில் பல நாடுகள் சுகாதாரக் கட்டமைப்பு, மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றில் போதுமான இருப்புகளை வைத்திருக்காத நிலையில் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நெருக்கடியைச் சமாளிக்க சில நேரங்களில் மக்கள் மீது அரசுகள் தீவிரத்தன்மையையும் காட்டி வருகின்றன. இப்படி உலகம் முழுவதும் அரசாங்கங்கள் காட்டிவரும் தீவிரத்தன்மை அனைத்தும் விளிம்புநிலை மக்களின் தலையின்தான் விடிகிறது. அடித்தட்டு மக்களிடம் கருணையோடு நடந்துகொள்ள வேண்டிய நேரத்தில் தேவையில்லாமல் காட்டப்படும் நெருக்கடிகளுக்கு தற்போது உலகம் முழுவதும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுகின்றன.

உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் தற்போது ஊரடங்கு உத்தரவை கடைபித்துவருகின்றனர். காவல் துறையினருக்கு இந்நேரத்தில் சர்வாதிகார போல நடந்துகொள்வதற்கு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தன்மையினால் சில நேரங்களில் மக்களுக்கு பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

கென்யா- நைரோபியில் ஊரடங்கு உத்தரவின்போது விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை எனக் காவல் துறையினர், பால்கனியில் நின்றிருந்த 13 வயது சிறுவன் யாசினைச் சுட்டுக்கொன்றுள்ளனர். சம்பவத்திற்கு பின்பு தங்களது நடத்தைக்காக அந்த ஊர் காவல் துறை சிறுவனின் தந்தை ஹீசைன் மேயாவிடம் மன்னிப்பும் கோரினர். இதையடுத்து கென்யா மக்கள் தங்களை காவல் துறையினர் அடக்கியொடுக்குவதாகவும் துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொசாம்பியில் வருமானத்திற்காகப் பணியாற்றிய படகுப் பணியாளர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் வெடிகுண்டுகளை வீசி கலைத்து இருக்கின்றனர். தொழிலாளர்கள்மீது கண்ணீர் புகை வெடிகுண்டுகளை வீசியதற்காக மக்கள் காவல் துறையினரை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில் காவல்துறை மீண்டும் அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்திருக்கிறது. இந்தச் சம்பவத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கென்யாவில் காவல்துறையினர் அச்சுறுத்தல் அதிகமாகி வருவதாக மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

இந்தியா - இந்தியா முழுவதும் 12 கோடி அமைப்புச் சாராத் தொழிலாளிகள் தினக்கூலிகளாகவும், வாரக்கூலிகளாகவும் மற்ற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்கள் மார்ச் 21 இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டிவந்தது. போக்குவரத்து, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்ததால் சாலைகளின் வழியே பல 100 கிலோமீட்டர்கள் நடந்தே செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. அப்படி டெல்லியில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வந்தவர்களை பஞ்சாப் மாநகராட்சி தடுத்து நிறுத்தி அவர்களை நடு சாலைகளில் அமர வைத்தது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இருக்கிறதா எனப் பரிசோதனை மேற்கொள்வது ஒவ்வொரு மாநரகராட்சியின் கடமை. ஆனால் இங்கு நிலைமையே வேறாக இருந்தது. தொழிலாளர்களை நடுசாலைகளில் அமரவைத்து சோடியம் ஹைட்ரோகுளோரைட் கலந்த கிருமிநாசினைகளை அவர்களின்மீது பீய்ச்சி அடித்தனர்.

இந்த கொடுமையான செயலைக்குறித்து பலத்தரப்புகளிலும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. சோடியம் ஹைட்டோகுளைரைடு கண், நுரையீரல் போன்றவற்றிற்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதே நேரத்தில் கிருமிநாசினி பொருட்களைக்கொண்டு உடல் முழுக்கத் தெளிப்பதால் ஒவ்வாமை ஏற்பட்டு பாதிக்கப்பட நேரிடும் என உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய நிலையிலும் இந்த கொடூரச்சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து, சமூகவலைத்தளங்களில் விமானத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு இப்படித்தான் செய்யப்பட்டதா எனவும் கேள்வியெழுப்பப்பட்டது. சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் ஏழை தொழிலாளர்களின் மீது மட்டுமே இப்படியான அதிகாரங்கள் அவிழ்த்து விடப்படுவதாகவும் விமர்சிக்கப்பட்டது.

பாராகுவே- பாராகுவே காவலர்கள் தங்களது குடிமக்கள் மீது எல்லையில்லா அதிகாரத்தைச் செலுத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. Asuncion நகரை அடுத்த Tacumbu பகுதியைச் சார்ந்த மக்கள் ஊரடங்கு காலங்களில் வெளியே வந்ததாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொழிலாளிகள் தினக்கூலிகளாக இருந்துகொண்டு தங்களது உணவுத்தேவைகளை பூர்த்திச் செய்துகொள்ள முடியாத நிலைமை இருக்கிறது என அழுது புலம்பினர். ஆனால் காவல் துறையினர் அவர்களை மண்டியிடிச் சொல்லியும், தரையில் படுக்கவைத்தும் அவமானப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் அந்நகரக் காவல்துறையினர் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனக் கடுமையாக எச்சரித்து வீடியோக்கள் வெளியிட்டதாகவும் அதை அந்நாட்டு உள்துறை அமைச்சர் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் – தலைநகர் Luzon இல் ஊரடங்கு உத்தரவு இந்த மாதம் இறுதிவரை நீடிக்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவை மீறி வெளியே வருபவர்களை காவல் துறையினர் நாய்க் கூண்டுகளுக்குள் அடைத்துவிடுவதாகச் செய்திகள் வெயாளி இருக்கின்றன. மேலும், அரை நாள் வரை அந்தக்கூண்டிற்குள் இருக்கவேண்டிய நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். மணிலா நகரில் அதிகளவு வெப்பநிலை ஏற்பட்டு இருப்பதால் மக்கள் வீட்டிற்குள்ளே அடங்கி கிடக்கமுடியாத சூழலும் நிலவிவருகிறது. மணிலாவில் மட்டும் ஊரடங்கு காலங்களில் வீட்டைவிட்டு வெளியே வந்ததாகக்கூறி 17,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல நாடுகள் சிறு சிறு குற்றங்களுக்காகச் சிறையில் உள்ளவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்துவரும் நிலையில் பிலிப்பைன்ஸ், தன் மக்களை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்து வருகிறது. இந்தச் செயலை எதிர்த்து மனித உரிமைகள் ஆணையம் கருத்துத் தெரிவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட தேதிவரையை வரையறுத்துக்கொண்டே பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து வருகின்றனர். இதற்குமாறாக, ஹங்கேரி பிரதமர் Viktor Orban தனது நாட்டில் அவசரகால நிலைமையை காலவரையறையின்றி பிறப்பித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்நாட்டு மக்கள் காலவரையறையின்றி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நிலைமையால் பொருளாதாரத்தை இழந்து பீதியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகள் அவசரகால நிலைமையை அறிவித்து இருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலம் வரையில் காவல் துறையினருக்கு எல்லையில்லாத அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. இப்படி எல்லையில்லாமல் வழங்கப்படும் அதிகாரத்தால் அதிகாரிகள் மக்களின்மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்கும் எனச் சிலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா என்ற வைரஸ் மக்களின் உயிர்களை காவு வாங்கிவருகிறது. இந்நோரத்தில் தனது அதிகாரத்தின்கீழ் இருக்கும் மக்களை காப்பாற்றுவது ஒரு அரசாங்கத்தின் கடமையாக இருந்தாலும் அவர்களை கருணையோடு பார்க்க வேண்டியது ஒவ்வொரு அரசாங்கத்தின் கடமையாக இருக்கிறது. இதற்குமாறாக, கருத்துச் சுதந்திரத்தைப் பறித்தும், கொடுமையான தண்டனைகளை வழங்கியும், அடித்தட்டு மக்களின்மீது அதிகாரங்களை கட்டவிழ்த்துவிட்டும் நடந்துகொள்வது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். தனிமனிதர்களின் உரிமைகளைப் பறித்து அச்சுறுத்தாமல் குறைந்த பட்சம் கருணையோடு அணுகுவது நல்ல பலனைத் தரும் எனப் பலரும் ஊரடங்கு காலத்தைக்குறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

 

Get Breaking News Alerts From IndiaGlitz