close
Choose your channels

சீயான் விக்ரம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Sunday, April 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு கேரக்டருக்காக தன்னையே அர்ப்பணித்து கொள்ளும் ஒரு நடிகர் சீயான் விக்ரம் என்றால் அது மிகையாகாது. எந்தவித திரையுலக பின்புலமும் இல்லாமல் தன்னுடைய உழைப்பால் படிப்படியாக முன்னேறிய விக்ரம் இன்று அரைசதம் அடித்துள்ளார். ஆம் இன்றுதான் விக்ரமின் 50வது பிறந்தநாள். இந்த இனிய பிறந்த நாளில் Indiaglitz சார்பில் அவருக்கு எங்களது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
கடந்த 1990ஆம் ஆண்டு 'என் காதல் கண்மணி' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான விக்ரம், அதன்பின்னர் பி.சி.ஸ்ரீராமின் 'மீரா' உள்பட ஒருசில குறிப்பிடப்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் அவரை தமிழ் சினிமா சிறந்த நடிகராக ஏற்றுக்கொண்டது 'சேது' படம் மூலமாகத்தான். இயக்குனர் பாலாவின் முதல் படமான 'சேது' படம்தான் பாலாவிற்கு, விக்ரமிற்கும் ஒரு அடையாளம் தந்தது. இந்த படத்தில் அவர் நடித்த 'சீயான்' என்ற கேரக்டர்தான் இன்றளவும் அவர் பெயருக்கு முன்னால் ஒட்டிக்கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து தரணி இயக்கிய 'தில்', சரண் இயக்கிய 'ஜெமினி', மீண்டும் தரணி இயக்கிய 'தூள்', ஹரி இயக்கிய 'சாமி' போன்ற படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெற்றதுடன் விக்ரமை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு சென்றது.
விக்ரம் அதிகளவு சிரமம் எடுத்து நடித்த 'காசி' மற்றும் சாமுராய் ஆகிய படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை எனினும் அவருடைய நடிப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்தது. பின்னர் பாலாவின் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் நடித்த 'பிதாமகன்' அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றதோடு தேசிய விருது என்ற அந்தஸ்தும் கிடைத்தது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அம்பி, அந்நியன், ரெமோ ஆகிய மூன்று வித்தியாசமான வேடங்களை ஏற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். சிபிஐ அதிகாரியாக விக்ரம் நடித்த 'கந்தசாமி', வீரைய்யா என்ற கேரக்டரில் நடித்த மணிரத்னம் அவர்களின் ராவணன்' ஆகிய படங்களும் விக்ரமின் கேரியரில் மிகச்சிறந்த படங்களில் இடம் பெற்றுள்ளவை.

இவற்றிற்கெல்லாம் மகுடம் சேர்ப்பதுபோல் 6 வயது சிறுவனின் பெர்சனாலிட்டில் விக்ரம் நடித்த 'தெய்வத்திருமகள்' திரைப்படத்தில் அவருடைய நடிப்பை பாராட்டாதவர்கள் இருக்க முடியாது. மகளின் பாசத்திற்காக ஏங்கும் ஒரு இன்னோசென்ஸ் கேரக்டர் அவரை தவிர வேறு யாருக்கும் பொருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு வெளியான ஷங்கரின் 'ஐ' படத்திற்காக அவர் எடுத்த ரிஸ்க்குகள் வேறு எந்த நடிகராலும் முடியாத ஒன்று. குறிப்பாக கூனன் கேரக்டருக்காக பலமணி நேரம் மேக்கப்பிற்காக மட்டும் பொறுமையுடன் இருந்தது, ஒருசில காட்சிகள் மட்டுமே வரும் ஒரு கேரக்டருக்காக எடையை குறைத்தது ஆகியவை அவருடைய தொழில்பக்தியை வெளிக்காட்டும் அம்சங்கள் ஆகும்,
விக்ரம் ஒரு சிறந்த நடிகராக மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். பல முன்னணி நாயகர்களுக்கு குறிப்பாக அமராவதி, பாசமலர்கள் போன்ற படங்களில் அஜித்துக்கும், காதலன், மின்சார கனவு போன்ற படங்களில் பிரபுதேவாவுக்கும், விஐபி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் அப்பாஸூக்கும் குரல் கொடுத்துள்ளார். மேலும் 'ஜெமினி' படத்தில் இடம்பெற்ற 'ஓபோடு', தெய்வத்திருமகள் படத்தில் 'கதை சொல்ல போறேன்' போன்ற பல பாடல்களையும் அவர் பாடியுள்ளார்.
விக்ரம் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இரண்டு வித்தியாசமான வேடங்களில் 'இருமுகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் முதன்முதலாக நயன்தாரா இணணந்துள்ளதால் இந்த படம் பெரும் எதிர்பாரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படமும் அவருக்கு ஒரு மறக்க முடியாத படமாக அமைய அவருடைய 50வது பிறந்த நாளில் வாழ்த்துவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.