பொங்கல் இனிப்பு சாப்பிட்ட 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு… சோகச் சம்பவம்!!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் இனிப்பு சாப்பிட்ட 2 குழந்தைகள் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நரசிங்கநல்லூர் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளி பழனி (29). இவருக்கு பாஞ்சாலை (25) என்ற மனைவியும் ஆஷானி (4), ஹரி (3) என இரு குழந்தைகளும் உள்ளனர்.
பழனி பொங்கல் பண்டிகையை ஒட்டி கடைவீதியில் விற்ற இனிப்பை வாங்கி வந்து தனது குழந்தைகளுக்கு கொடுத்து இருக்கிறார். அதைச் சாப்பிட்ட அக்கா, தம்பி என இரு குழந்தைகளுக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருக்கிறது. கூடவே மயக்கமும் வர இதனால் பதறிப்போன பெற்றோர் ஆம்புலன்ஸை வரவழைத்து செங்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஆஷானி உயிரிழந்து உள்ளார்.
இந்நிலையில் ஹரியை அழைத்துக் கொண்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அந்த ஆம்புலன்ஸ் சென்று இருக்கிறது. ஆனால் அங்கு குழந்தை ஹரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஒரே நாளில் தன்னுடைய இரு குழந்தைகளும் உயிரிழந்தைப் பார்த்து அந்த பெற்றோர் கதறி அழுதனர். இந்நிலையில் தரமற்ற இனிப்புகளைச் சாப்பிட்டதால் அந்தக் குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.