கோலிவுட் திரையுலகின் அம்மா-மகள் நடிகைகள்

கோலிவுட் திரையுலகின் அம்மா-மகள் நடிகைகள்

கோலிவுட் திரையுலகில் அரசியல் உள்பட அனைத்து துறைகளிலும் வாரிசுகள் களமிறக்கப்படுவது சர்வ சாதாரண நிகழ்வாகும். ஒரு நடிகரின் மகன் நடிகராவது என்பது பெரிய விஷயமில்லை, ஆனால் தமிழ் திரையுலகில் நடிகைகளின் மகள்களும் தங்களது தாயார்களை போலவே பிரபலம் அடைவது கொஞ்சம் சிரமம்தான் என்றாலும் அந்த நிகழ்வுகளும் தமிழ் திரையுலகில் நடந்தது உண்டு. அந்த வகையில் தமிழ் திரையுலகை கலக்கிய அம்மா-மகள் நடிகைகள் குறித்து தற்போது பார்ப்போம்

சந்தியா - ஜெயலலிதா:

சந்தியா - ஜெயலலிதா:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 60கள் 70கள் புகழ்பெற்ற நடிகை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவருடைய அம்மா சந்தியாவும் ஒரு நல்ல நடிகை என்பது ஒருசிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். என்.டி.ராமராவ் நடித்த 'மாயா பஜார்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் சந்தியா.

வசுந்தராதேவி - வைஜெயந்தியமாலா:

வசுந்தராதேவி - வைஜெயந்தியமாலா:

கடந்த 1950கள் மற்றும் 60களில் முன்னணி நடிகைகளில் ஒருவர் வைஜெயந்தியமாலா. சிவாஜி கணேசன் நடித்த 'இரும்புத்திரை', ஜெமினி கணேசன் நடித்த 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' உள்பட பல படங்களில் நடித்தவர். அதேபோல் இவரது தாயார் வசுந்தராதேவியும் 1940களில் ஒரு பிரபல நடிகைதான். எம்.கே.ராதாவுடன் இவர் நடித்த 'மங்கம்மா சபதம்' மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம். வசுந்ததாரதேவி, வைஜெயந்தியமாலா இருவருமே நடிகைகள் மட்டுமின்றி நல்ல பரதநாட்டிய கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவிகா - கனகா

தேவிகா - கனகா

கடந்த 1960கள் மற்றும் 70களில் முன்னணி நடிகையாக இருந்தவர் தேவிகா. குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு பொருத்தமான ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். ஆண்டவன் கட்டளை, பலே பாண்டியா, அன்னை இல்லம், குலமகள் ராதை, முரடன் முத்து, சாந்தி, போன்ற பல படங்களை கூறலாம். தேவிகாவின் மகள் கனகாவும், ராமராஜனின் 'கரகாட்டக்காரன்' படத்தில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அதிசயப்பிறவி' உள்பட பல படங்களில் நடித்தார்.

மஞ்சுளா - வனிதா, ஸ்ரீதேவி, ப்ரீதா

மஞ்சுளா - வனிதா, ஸ்ரீதேவி, ப்ரீதா

கடந்த 1969ஆம் ஆண்டு 'சாந்தி நிலையம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மஞ்சுளா, எம்ஜிஆரின் ராசியான ஜோடியாக கருதப்பட்டார். அவருடன் இதயவீணை, உலகம் சுற்றும் வாலிபன், நாளை நமதே, நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களிலும் சிவாஜி கணெசனுடன், டாக்டர் சிவா, அவன் தான் மனிதன், மன்னவன் வந்தானடி, உத்தமன், உள்பட பல படங்களிலும் நடித்தார். அதேபோல் மஞ்சுளாவின் மூன்று மகள்களான வனிதா, ப்ரித்தா, ஸ்ரீதேவி ஆகிய மூவரும் கோலிவுட்டில் ஒருசில படங்களில் நடித்த நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது

லட்சுமி - ஐஸ்வர்யா

லட்சுமி - ஐஸ்வர்யா

எம்ஜிஆர், சிவாஜி காலத்திய நடிகைகளில் ஒருவர் லட்சுமி. எம்ஜிஆருடன் மாட்டுக்கார வேலன், சங்கே முழங்கு, குமரிக்கோட்டம், இதயவீணை, தெய்வத்தாய், போன்ற படங்களிலும் சிவாஜி கணேசனுடன் தியாகம், உனக்காக நான், நெஞ்சங்கள், ஆனந்தக்கண்ணீர், போன்ற படங்களிலும் நடித்தவர். மேலும் இவர் கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் உள்பட பல முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மகள் ஐஸ்வர்யா, ரஜினியின் 'எஜமான், விக்ரமின் மீரா, பாக்யராஜின் 'ராசுக்குட்டி', பார்த்திபனின் 'உள்ளே வெளியே', உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மேனகா - கீர்த்திசுரேஷ்

மேனகா - கீர்த்திசுரேஷ்

பிரபல மலையாள நடிகையான மேனகா, தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'நெற்றிக்கண், சிவாஜி கணேசன் நடித்த 'கீழ்வானம் சிவக்கும் உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை ஆவார். இவருடைய மகள் கீர்த்தி சுரேஷ் குறித்து அறிமுகம் தேவையில்லை. இன்றைய முன்னணி நடிகைகளில் ஒருவராகிய கீர்த்திசுரேஷ், தமிழ்,தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் பிசியான நடிகையாக உள்ளார்

ராதா - கார்த்திகா, துளசி

ராதா - கார்த்திகா, துளசி

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர்களின் அதிர்ஷ்ட நாயகியாக பல படங்களில் நடித்தவர் ராதா. பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பாயும் புலி, எங்கேயோ கேட்ட குரல், ராஜாதிராஜா, காதல் பரிசு, தூங்காதே தம்பி தூங்காதே, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இதேபோல் ராதாவின் மகள் கார்த்திகா, கே.வி.ஆனந்த் நடித்த 'கோ' பாரதிராஜாவின் 'அன்னக்கொடி' போன்ற படங்களிலும், இளளயமகள் துளசி, மணிரத்னம் இயக்கிய 'கடல் உள்பட ஓரிரு படங்களிலும் நடித்துள்ளார்.

சுமித்ரா - உமா

சுமித்ரா - உமா

தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கடந்த 1986வரை நாயகியாக பல திரைப்படங்களில் நடித்த சுமித்ரா அதன் பின்னர் அக்கா, அம்மா வேடங்களில் நடித்தார். புவனா ஒரு கேள்விக்குறி, அண்ணன் ஒரு கோயில், நிழல் நிஜமாகிறது, ஜஸ்டிஸ் கோபிநாத், சங்கிலி, உள்பட பல படங்களில் நடித்தவர் சுமித்ரா. அதேபோல் சுமித்ராவின் மகள் உமா, 'தென்றல்', சொக்கத்தங்கம், கோவை பிரதர்ஸ் உள்பட சில படங்களில் நடித்துள்ளார்

சரிகா - ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன்

சரிகா - ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா, பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக கடந்த 80களில் இருந்தவர். கமல்ஹாசனுடன் இணைந்து ராஜ்திலக், கரிஷ்மா போன்ற படங்களில் இணணந்து நடித்துள்ளார். பாரதிராஜாவின் 'டிக் டிக் டிக்' படத்தில் ஒரு சிறு கேரக்டரிலும் சரிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற பழமொழிக்கேற்ப கமல்-சரிகாவின் மகள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சராஹாசன் ஆகிய இருவருமே தற்போது திரையுலகில் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

பூர்ணிமா- சரண்யா

பூர்ணிமா- சரண்யா

இயக்குனர் கே.பாக்யராஜின் மனைவியான பூர்ணிமா, திருமணத்திற்கு முன்னர் ரஜினியின் 'தங்க மகன்' உள்பட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்த மறக்க முடியாத படம் 'விதி'. பாக்யராஜூடன் இணைந்து இவர் நடித்த 'டார்லிங் டார்லிங் டார்லிங்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. அந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே இருவருக்கும் தோன்றிய காதல் பின்னர் திருமணத்தில் முடிந்தது. பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதிகளின் மகள் சரண்யா, கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'பாரிஜாதம்' என்ற படத்திலும் 'போட்டோகிராபர் என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார்.

அனுராதா - அனு

அனுராதா - அனு

தமிழ் திரையுலகில் சில்க் ஸ்மிதாவுக்கு இணையாக ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடிய நடிகை அனுராதா. கடந்த 80கள் மற்றும் 90களில் பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடனங்களிலும் தோன்றியுள்ளார். இவரது மகள் அபியஸ்ரீ, விஜய் நடித்த 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

 

மேலும் நடிகை மீனாவின் மகள் நைனிகா 'தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், நடிகை சீதாவின் மகள் கீர்த்தனா 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி விரைவில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கோலிவுட் திரையுலகில் அரசியல் உள்பட அனைத்து துறைகளிலும் வாரிசுகள் களமிறக்கப்படுவது சர்வ சாதாரண நிகழ்வாகும்.