லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் டாப் 10 திரைப்படங்கள்

Nayanthara top 10 movies

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால் சின்னக்குழந்தை கூட ரஜினிகாந்த் என்று கூறிவிடும். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இதுவரை தமிழ் சினிமாவில் யாருமே வலம் வராத நிலையில் அந்த புதிய பட்டம் நயன்தாராவை தேடி வந்துள்ளது என்றால் அதற்கு காரணம் அவர் கொடுத்து வரும் தொடர் வெற்றிதான்.

பொதுவாக திரையுலகில் ஒரு நடிகையின் வாய்ப்பு நீர்க்குமிழி போல்தான். ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நாயகியாக நடித்துவிட்டு பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் அக்கா, அண்ணி ஏன் அம்மா வேடத்திற்கும், தொலைக்காட்சி சீரியல்களுக்கும் சென்றுவிடும் நடிகைகளின் மத்தியில் கடந்த 2005ஆம் ஆண்டு 'அய்யா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நயன்தாரா, 11 வருடங்களுக்கு பின்னும் சூப்பர் ஸ்டாரினியாக திகழ்ந்து வருகிறார் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை. இவருடன் நடித்த நடிகைகள் பலர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டனர், அல்லது சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகின்றனர். ஆனால் இன்னும் பிசியான நடிகைகளில் ஒருவராக, இளம் நடிகைகளுக்கு போட்டி கொடுத்து வரும் நயன்தாராவின் டாப் 10 திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

சந்திரமுகி:

chandramuki

சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா என ஒரு பெரிய பிரபல கூட்டங்கள் இருக்கும் படத்தில் நயன்தாராவும் அவர்களுடன் போட்டி போட்டு நடித்து பேரும் புகழும் வாங்கியதே பெரிய விஷயம்தான். அதுமட்டுமின்றி இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது அவருடைய அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். இந்த படத்தில் ஜோதிகாவுக்குத்தான் முக்கிய கேரக்டர் எனினும் தனக்கு வழங்கப்பட்ட காட்சிகளில் சிறப்பாக நடித்து தன்னுடைய திறமையை ஆரம்ப காலகட்டத்திலேயே அழுத்தமாக பதிவு செய்த படம்தான் சந்திரமுகி.

பில்லா:

billa nayanthara

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பில்லா' படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் ஒரிஜினல் படத்தில் ஸ்ரீப்ரியா நடித்த போல்டான கேரக்டர் நயன்தாராவுக்கு. பிகினியில் தோன்றி கவர்ச்சி காட்டியது மட்டுமின்றி அதிரடி சண்டைக்காட்சிகளிலும் நடித்தார். இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகளில் இறுக்கமான முகத்துடனும் நயன்தாரா நடித்த படம்தான் பில்லா.

யாரடி நீ மோகினி:

yaaradineemohini nayanthara

தனுஷுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்த படம். இந்த படத்தின் கதையே இவரது கேரக்டரை சுற்றித்தான் அமைக்கப்பட்டிருக்கும். முதல் பாதியில் ஐ.டி.அலுவலக மாடர்ன் பெண் வேடத்திலும் இரண்டாவது பாதியில் அதற்கு நேர்மாறான கிராமத்து பெண் வேடத்திலும் வித்தியாசப்படுத்தி நடித்திருப்பார். தனுஷின் காதலை வெளியே சொல்ல முடியாமல் குடும்ப கெளரவத்திற்காக மனதில் பூட்டி வைத்திருக்கும் அழுத்தமான இந்த கேரக்டர் நயன்தாராவுக்கு பெரும் புகழை தேடித்தந்தது.

பாஸ் என்கிற பாஸ்கரன்:

baasengirabaskaran nayanthara

நயன்தாரா நடித்த முதல் முழுநீள நகைச்சுவை படம். கொஞ்சம் கூட சீரியஸ் காட்சிகள் இல்லாத முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்த படத்திலும் நயன்தாரா தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். ஆர்யாவுக்கு ஈடுகொடுத்து ஒரு நகைச்சுவை படத்தில் நடிப்பது என்பதே ஒரு சவாலான பணி. அதை செவ்வனே செய்து முடித்து தனக்கு நகைச்சுவையும் சிறப்பாக வரும் என்பதை நயன்தாரா நிரூபித்த படம்தான் 'பாஸ் என்கிற பாஸ்கரன்.

ராஜா ராணி:

rajarani nayanthara

அட்லி இயக்கிய முதல் படம். இரண்டு நாயகி படம் என்றாலும் நயன்தாராவின் கேரக்டர்தான் கிளைமாக்ஸ் வரை பயணிக்கும் கதை. ஜெய்யை காதலித்துவிட்டு பின்னர் அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி தந்தையின் மன திருப்திக்காக ஆர்யாவை திருமணம் செய்து, பின்னர் ஜெய் மீண்டும் உயிருடன் இருக்கின்றார் என்பதை அறிந்து திகைத்து நிற்கும் கேரக்டர். இந்த கேரக்டரை நயன்தாராவை தவிர இவ்வளவு அழுத்தமாக வேறு யாராலும் நடிப்பை கொடுத்திருக்க முடியாது என்பதுதான் பலருடைய விமர்சனம். சத்யராஜின் மகளாக மிக இயல்பான நடிப்பை கொடுத்த படம்.


ஆரம்பம்:

aarambam nayanthara

அஜித்துடன் நயன்தாரா நடித்த மற்றொரு சூப்பர் ஹிட் படம். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்துக்கு இணையான கேரக்டராகவும், பில்லா போலவே அதிரடி காட்சிகளிலும் நயன்தாரா நடிப்பில் அசத்திய மற்றொரு படம்.

அனாமிகா:

anamika_nayanthara

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன 'கஹானி' படத்தின் ரீமேக் படம். தனது கணவன் ஒரு தீவிரவாதி என்று தெரிந்ததும் அவனை கொல்வதற்காக நயன்தாரா போடும் திட்டமும் அதை நிறைவேற்றும் முறைகளும் ஆடியன்ஸ் எதிர்பார்க்காத காட்சிகளும் அடங்கிய படம். இந்தி அளவுக்கு தமிழில் இந்த படம் வெற்றி பெறவில்லை எனினும் நயன்தாராவின் கேரியரில் மற்றொரு மறக்க முடியாத படம்.

தனி ஒருவன்:

thanioruvan nayanthara

நயன்தாரா நடித்த படங்களிலே பெஸ்ட் படம் எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு இந்த படத்தை கூறலாம். ஜெயம் ரவியிடம் காதலை புரபோஸ் செய்வதாகட்டும், அவருடைய கொள்கை நிறைவேற ஒத்துழைப்பது கொடுப்பது ஆகட்டும் ஓவர் ஆக்டிங் இல்லாத நயன்தாராவின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

மாயா:

maya, nayanthara

பேய்ப்படம் என்றாலே காமெடி படம் என்ற தவறான ஃபார்முலாவை கொண்டு வந்துவிட்ட கோலிவுட் திரையுலகில் முதன்முதலாக பயமுறுத்திய ஒரு பேய்ப்படம் என்றால் அது 'மாயா' படம்தான். சிறப்பான திரைக்கதை அமைந்த படம் என்றாலும் நடிகையாகவும், பேயாகவும் நயன்தாரா நடித்த கேரக்டரின் முக்கியத்துவம்தான் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நானும் ரெளடிதான்:

nanumrowdythan, nayanthara

இளையதலைமுறை நடிகரான விஜய்சேதுபதிக்கு ஜோடியாக முதல்முறையாக நயன்தாரா நடித்த படம். மாற்றுத்திறனாளியாகவும், தந்தையை கொலை செய்த வில்லனை கொலை செய்ய துடிக்கும் ஆக்ரோஷமான பெண்ணாகவும், அதே நேரத்தில் காமெடி ரெளடியுடன் சேர்ந்து அவர் அடிக்கும் கூத்தும் படத்தின் ப்ளஸ்கள்.

மேலும் நயன்தாரா தற்போது நடித்து கொண்டிருக்கும் அல்லது நடித்து முடித்திருக்கும் படங்களான 'இது நம்ம ஆளு', 'திருநாள்', 'காஷ்மோரா', இருமுகன் போன்ற படங்களிலும் அவருக்கு அழுத்தமான கேரக்டர்கள் தான் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முன்னணி ஹீரோவாக இருந்தாலும், புதுமுக ஹீரோவாக இருந்தாலும் தனது கேரக்டரின் முக்கியத்துவத்தை மட்டுமே கணக்கில் கொண்டு அவர் படங்களில் ஒப்புக்கொண்டு வருவதால்தான் இன்னும் கோலிவுட்டின் காஸ்ட்லியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். நயன்தாரா இன்னும் பல வெற்றிகளை குவிக்க இந்த நேரத்தில் அவரை மனமாற வாழ்த்துகிறோம்.

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால் சின்னக்குழந்தை கூட ரஜினிகாந்த் என்று கூறிவிடும். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இதுவரை தமிழ் சினிமாவில் யாருமே வலம் வராத நிலையில்...