close
Choose your channels

இசைஞானி இளையராஜா குறித்து நம்பவே முடியாத சில சுவாரசியத் தகவல்கள்!

Wednesday, June 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு கலைஞனும் தேசிய விருதுக்காக ஆண்டுக் கணக்கில் தவம் கிடக்கும்போது இசைஞானி இரண்டுமுறை வெவ்வேறு காரணங்களுக்காக தனக்கு வழங்கப்பட இருந்த தேசிய விருதை மறுத்து இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், சிம்பொனி சாம்ராஜ்ஜியத்தில் இந்த உண்மையும் மறைந்து கிடக்கிறது.

லண்டனில் நடைபெற்ற ராயல் ஃபில் ஆர்கெஸ்டிரா எனும் நிகழ்ச்சியில், ஹார்மோனிய வாத்தியத்தைக் கொண்டு சிம்பொனி ஒன்றை இசையமைத்தார். இந்தச் சாதனையை நிகழ்த்திய ஒரே ஆசியக் கண்டத்தைச் சார்ந்தவர் என்ற பெருமையோடு “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

பஞ்சமுகி என்றொரு கர்நாடக செவ்வியல் ராகத்தினை இவரே சொந்தமாக உருவாக்கி தந்துள்ளார்.

இந்திய அரசு இவரது இசை திறமையைப் பாராட்டி கடந்த 2010 ஆம் அண்டு “பத்மபூஷன்“ விருது வழங்கி கவுரவித்து இருக்கிறது. கடந்த 2012 ஆம் அண்டு “சங்கீத நாடக அகாடமி“ விருது பெற்றுள்ளார்.

இந்திய அரசின் தேசிய விருதினை 1985-சாகர சங்கமம் (தெலுங்கு), 1987- சிந்து பைரவி (தமிழ்), 1989- ருத்ர வீணை (தெலுங்கு), 2009- பழஸிராஜா (மலையாளம்), 2016- தாரை தப்பட்டை (தமிழ்) போன்ற படங்களுக்காக 5 முறை பெற்றுள்ளார்.

இசைஞானியின் இசையை மெச்சி கடந்த 1994 இல் அண்ணாமலை பல்கலைக்கழகமும் 1996 இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகமும் சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து உள்ளது.

கதையைப் பார்த்தவுடன் இளையராஜா முதலில் எழுத்தில்தான் டியூனை எழுதுவாராம். பின்பு நேரடியாக ஒலிப்பதிவிற்கு சென்று விடுவார் என்றொரு கருத்து பொதுவாகவே நம்பப்படுகிறது. அந்த வகையில் எந்த ஒரு வாத்தியத்தையும் தொடாமல் கற்பனையிலே டியூனை போட்டுவிடும் திறமை இந்த வள்ளலுக்கு மட்டும்தான் உண்டு.

இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 1,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து உள்ளார். அதுவும் ஒரே ஆண்டில் 56 திரைப்படங்களுக்கு இசையமைத்து இருப்பது உலக அளவில் வியந்து பார்க்கப்படுகிறது. மேலும் 450 க்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ளார்.

இசையைத் தவிர கவிதை, கதை, கட்டுரை மற்றும் பென்சில் ஓவியத்திலும் இவருக்கு ஆர்வம் உண்டு. தான் வரைந்த பென்சில் ஓவியங்களை இவர் ஆசையாக ப்ரேம் போட்டு வீட்டில் மாட்டி வைப்பாராம். அதோடு புகைப்படக் கலையிலும் இவருக்கு திறமை உண்டு.

இளையராஜா ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் 2.6.1943 இல் பிறந்தவர். அப்போது அவருடைய பெயர் டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன் என்றுதான் இருந்தது. பின்னர் இயக்குநர் பஞ்சுஅருணாச்சலம் இவரை இளைஞராஜா என்ற பெயருடன் அறிமுகப்படுத்துகிறார். அடுத்து இவரது அற்புதமான இசையற்றலால் வியந்துபோன மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி இவருக்கு “இசைஞானி“ என்ற பட்டத்தை வழங்கினார். அந்தப் பெயரே நிலைத்தும் போயிற்று.

பிறப்பில் கிறிஸ்துவராக இருந்தாலும் பின்னர் இந்து மதத்திற்கு மாறினார். அதேபோல இவருடைய இரண்டாவது மகன் யுவன் சங்கர் ராஜா தற்போது முஸ்லீம் மதத்தைப் பின்பற்றி வருகிறார்.

சிம்பொனி இசைக் கலைஞர், மேஸ்ட்ரோ, இசைஞானி, காட்டாற்று வெள்ளம் எனப் பல பெயர்களால் இவர் புகழப்பட்டாலும் பண்ணபுரத்துகாரர் என்பதைத்தான் இளையராஜா அதிகமாக விரும்புவாராம். காரணம் தேனி மாவட்டம் பண்ணப்புரத்தில் பிறந்த இவர் இன்றுவரை அந்த மண்ணை மறக்காமலே வாழ்ந்து வருகிறார்.

இளையராஜாவைவிட அவரது அண்ணன் பாவலர் வரதராஜன் ஒரு புரட்சி இசைக் கலைஞராக வாழ்ந்தவர் என்பது நமக்கு தெரியுமா? ஆம் அந்த காலத்திலேயே ஹார்மோனியப் பெட்டியை தூக்கிக் கொண்டு ஊர் ஊராகச் சென்று இசைக் கச்சேரிகளை நடத்தியவர் தான் பாவலர் வரதராஜன். கம்யூனிஸ்ட் கட்சி வளர்ப்பிலும் இவரது பங்கு அளப்பரியது. இதற்காக மாதக்கணக்கில் பயணித்து கேரளா வரை சென்று பாடுவாராம்.

பாவலர் வரதராஜன் எனும் ஜாம்பவானிடம் இசை படித்த இளையராஜா கடந்த 1958 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற ஒரு கச்சேரிக்கு அண்ணனுக்கு ஒத்தாசையாக செல்கிறார். அப்போது வரதராஜனுக்கு உடம்பு சரியில்லாததால் அவருடைய தாய் சின்னத்தாய் இளையராஜாவை அனுப்பி வைக்கிறார். இப்படி ஆரம்பித்த அவரது இசைப்பயணம் இன்றுவரை ஓயாமல் அலையாய் பரவிக்கொண்டே இருக்கிறது.

அண்ணன் பாவலர் வரதராஜன் தனது சொத்துகளை எல்லாம் விற்று இசையை வளர்த்த நிலையில் இளையராஜா தான் பாட்டுக் கேட்பதற்காக வாங்கி வைத்து இருந்த ரேடியாவை விற்று தனது தம்பிகளோடு சென்னைக்கு வந்ததாக அவரே பலமுறை கூறியிருக்கிறார்.

சென்னைக்கு வந்த இளையராஜா தன்ராஜ் மாஸ்டரிம் மேற்கத்திய இசையைக் கற்றுள்ளார். இவரது ஆர்வத்தை பார்த்து வியந்து போன தன்ராஜ் இளையராஜாவுக்கு ஹார்மோனியம், கிடார், கீபோர்ட், புல்லாங்குழல், பியானோ என அனைத்து இசை வாத்தியங்களையும் கற்றுக் கொடுத்துள்ளார்.

சென்னையில் கடந்த 1961 தொடங்கி பல மேடை நாடகங்களுக்கு இளையராஜா அவர்கள் இசையமைத்து இருக்கிறார். அதோடு தனது தம்பிகளுடன் இணைந்து பாவலர் பிரதர்ஸ் என இசை அமைப்பை ஏற்படுத்தி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை கச்சேரிகளையும் இவர் நடத்தியுள்ளார்.

இப்படி மேடையில் புடம்போட்டு வளர்த்த தனது இசை ஞானத்தை இளையராஜா அவர்கள் சினிமா பக்கம் திருப்ப நினைத்து இருக்கிறார். இதற்காக மெட்டு- கம்போசிங் எழுதுபவராக, இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி அவர்களிடம் பணியாற்றியுள்ளார். அதோடு கன்னட இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் 200 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

இந்நிலையில் இளையராஜாவின் 33 ஆவது வயதில் “அன்னக்கிளி” திரைப்படத்திற்கு இசையமைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் இளையராஜாவைப் பார்த்த பலரும் அவரை சந்தேகத்தோடு பார்த்தார்களாம். இதனால் பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை கேள்வி கேட்க, தான் அமர்ந்து இருந்த மண்டபத்திலேயே “அன்னக்கிளி” படத்தின் அனைத்துப் பாடலுக்கும் ஒரே மூச்சில் இசையமைத்தாராம்.

ஹிந்தி மோகம் இருந்த காலக்கட்டத்தில் பட்டித் தொட்டி எல்லாம் தமிழ் பாடல்களை ஒலிக்கச் செய்த கலைஞன் இளையராஜா. இவரது பாடல்களை பணக்காரனும் ரசிக்க முடியும். ஏழை கூலியும் ரசிக்க முடியும் எனும் அளவிற்கு அனைத்து தர மக்களையும் இன்றுவரை கட்டிப்போட்டு மெய்சிலிர்க்க வைத்துக் கொண்டு இருக்கிறார்.

சினிமா இசையைத் தவிர வழிபாட்டுப் பாடல்கள், தமிழ் பாடல்களுக்கும் இளையராஜா இசையமைத்து இருக்கிறார். அதோடு 12 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இதனால் கவிஞர் வைரமுத்து சொல்வது போல ஒரு காட்டாற்று வெள்ளம் இன்று வரை ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது எனலாம். அந்த வெள்ளம் தரும் இசை களஞ்சியத்தை ரசிகன் என்ற முறையில் அவருடைய பிறந்தநாளில் (இன்று) கொண்டாடி மகிழலாம். வாழத்துக்கள் இசைஞானியே…

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos