close
Choose your channels

கமல்ஹாசனின் 'தூங்காவனம்'. ஒரு முன்னோட்டம்

Monday, November 9, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடிப்பில் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள 'தூங்காவனம்' படம் குறித்த முன்னோட்டத்தை பார்ப்போம்.

'மன்மதன் அம்பு' படத்திற்கு பின்னர் த்ரிஷா மீண்டும் கமலுடன் இணைந்த படம். அதுமட்டுமின்றி முதன்முதலாக த்ரிஷா போலீஸ் கேரக்டரில் நடித்துள்ள படம். மேலும் இந்த படம் த்ரிஷாவுக்கு 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படம் கமலுக்கு முக்கியமான படமோ இல்லையோ, கண்டிப்பாக த்ரிஷாவுக்கு இது ஒரு மறக்க முடியாத படமாகத்தான் இருக்கும்.


விஸ்வரூபம் 2, உத்தமவில்லன், பாபநாசம் படங்களை அடுத்து மீண்டும் ஜிப்ரான் இசையமைக்கும் கமல் படம். ஆனாலும் இந்த படத்தில் ஒரே ஒரு பாடல்தான் இடம்பெற்றுள்ளது. அந்த ஒரு பாடலை வைரமுத்து எழுத கமல்ஹாசன் பாடியுள்ளார்.

இந்த படம் பிரெஞ்ச் மொழியில் வெளியான 'ஸ்லீப்லெஸ் நைட்' என்ற படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் படம் என்றாலும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆடியன்ஸ்களுக்காக சில மாற்றங்கள் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மகனை கடத்திய போதைக்கும்பல் தலைவனிடம் இருந்து மகனை மீட்க ஒரு போலீஸ் தந்தை தனியாக போராடும் போராட்டமே கதையின் கரு.

இந்த படத்தை தமிழ், மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் 60 நாட்களில் படத்தை முடித்துள்ளனர். டப்பிங் போன்று இல்லாமல் இரண்டு மொழிகளுக்காகவும் இரண்டு முறை படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்னர் படத்தின் அனைத்து நடிகர்களும் பயிற்சி எடுத்ததால்தான் குறுகிய நாட்களில் படத்தை எடுக்க முடிந்திருக்கின்றது.

கோலிவுட் திரையுலகில் முதல்முறையாக இந்த படம் படப்பிடிப்பு ஸ்பாட்டிலேயே எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது. எடிட்டிங்கிற்கு என தனியாக நேரம் எடுத்துக்கொள்ளாமல் படப்பிடிப்பு முடிந்தவுடன் உடனே எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது.

படப்பிடிப்பின் இடையே ஒரு நாள் மேக்கப்மேன் வராததால் பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா ஆகிய இருவருக்கும் கமல் தனது கையாலேயே மேக்கப் போட்டுள்ளார். இதுகுறித்து இருவருமே தங்களது ஆச்சரியங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தனர்.

சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு ஸ்டுடியோ மற்றும் பூந்தமல்லி அருகில் உள்ள ஒரு தீம் பார்க் ஆகியவற்றிலும் ஐதராபாத்திலும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

கமல், த்ரிஷா, கிஷோர் ஆகிய மூவரும் சமையல் செய்யும் சண்டைக்காட்சி த்ரில்லிங்காக படமாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சண்டைக்காட்சி தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

த்ரிஷாவுக்கு இந்த படத்தில் போலீஸ் வேடம் என்பதால் அதீத மேக்கப் கிடையாது. ஒருசில காட்சிகளில் மேக்கப்பே இல்லாமல் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கமலின் முந்தைய படமான 'பாபநாசம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஆஷா சரத்தின் அபாரமான நடிப்பை பார்த்து அசந்துபோன கமல், இந்த படத்தில் தனது மனைவியாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார்.

இந்த படத்தின் சிறப்பு ஒலி அமைப்புகளை அமெரிக்காவில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் அமைத்துள்ளனர். ஏற்கனவே விஸ்வரூபம், உத்தம வில்லன் ஆகிய படங்களுக்கும் அமெரிக்காவில்தான் ஒலி அமைப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் இந்த படத்திற்காக முதன்முதலில் தெலுங்கிலும் தனது சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார்.

அஜீத் படத்துடன் மோதும் நான்காவது கமல் படம் தூங்காவனம். இதற்கு முன்னர் பவித்ரா-நம்மவர், ஹேராம்-முகவரி, பம்மல் கே.சம்மந்தம் - ரெட் ஆகிய படங்கள் மோதியுள்ளது.

அதிகளவிலான வன்முறை காட்சிகள் மற்றும் பார் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ/ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர்.

தமிழில் நவம்பர் 10ஆம் தேதி வெளிவரும் இந்த படம் தெலுங்கில் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. நாகார்ஜுனன் மகன் அகில் நடிக்கும் முதல் படம் தெலுங்கில் ரிலீஸ் ஆவதே பத்து நாள் தாமதத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

தூங்காவனம்' படம் பாடல்கள், காமெடி டிராக் என இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருப்பதால் ரசிகர்களை எந்த அளவுக்கு கவரும் என்பதை வரும் 10ஆம் தேதி இந்த படத்தின் விமர்சனத்தில் பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.