close
Choose your channels

நரை கூடிய 106 வயது பெண்மணி… தடகளப் போட்டியில் 3 தங்கப் பதக்கத்தை வென்று சாதனை!

Wednesday, June 28, 2023 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வயது மூத்தோருக்கான தடகளப் போட்டியில் கலந்துகொண்டு 106 வயது பெண்மணி ஒருவர் 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார். இதனால் சாதனைக்கு வயது, ஒரு தடையே இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

டேராடூனில் யுவ்ராணி விளையாட்டு கமிட்டி சார்பாக வயது மூத்தோருக்கான 18 ஆவது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் ஹரியாணா மாநிலம் சார்க்கி தாத்ரி பகுதியைச் சேர்ந்த ராம்பாய் என்பவர் கலந்துகொண்டு 100 மீ ஸ்பிரிண்ட், 200 மீ ஸ்பிரிண்ட் மற்றும் குண்டு எறிதல் ஆகிய பிரிவுகளில் திறமையாக விளையாடி 3 பதக்கத்தை வென்றுள்ளார்.

1917 இல் பிறந்த ராம்பாய் 106 வயதான பிறகு ஒவ்வொரு போட்டியிலும் 5 அல்லது 6 வீரர்களை எதிர்கொண்டு திறமையாக விளையாடி தற்போது தங்கப்பதக்கத்தை வென்றிருப்பது பலரது மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வயதான நிலையில் விளையாட்டின் மீது தனக்கு ஆர்வம் ஏற்பட்டது குறித்துபேசிய ராம்பாய் எனது பேத்தி ஷர்மிளா மூலமாக வயது மூத்தோருக்கான தடகளப் போட்டியைப் பற்றித் தெரிந்து கொண்டேன். இதனால் 103 வயதில் இருந்து தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு தற்போது தங்கப்பதக்கம் வென்றுள்ளேன்.

இதற்கு முன்பு சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த மான் கவுர் என்பவர் 104 வயதில் 2020 இல் நடந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு 2 தங்கப் பதக்கங்களை வென்றார். அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பயிற்சியை மேற்கொண்டேன். இதனால் 2017 இல் 101 வயதில் 100 மீ தூரத்தை 74 நொடிகளில் கடக்க முடிந்தது. கடந்த ஆண்டு 100 மீ தூரத்தை 45.40 நொடிகளில் கடந்தேன். தற்போது அதே பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளேன் என உற்சாகத்தோடு கூறியுள்ளார்.

மேலும் கடந்த வருடம் வதோதராவில் நடைபெற்ற தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட ராம்பாய் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

நரை கூடிய கிழப் பருவத்திலும் தனது கனவிற்காக போராடி தங்கப்பதக்கம் வென்ற ராம்பாய் குறித்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.