close
Choose your channels

சோ இடம் எப்போதும் வெற்றிடமாகவே இருக்கும். சிவகுமார் புகழாஞ்சலி

Wednesday, December 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமர்சகர் சோ ராமசாமி இன்று காலை மரணம் அடைந்ததை அடுத்து அரசியல் தலைவர்களும், திரையுலகினர்களும் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகுமார் மற்றும் அவருடைய மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் சோ அவர்களின் இல்லத்திற்கு சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், 'அரசியலிலோ, ஆட்சி அதிகாரத்திலோ எந்தவித பதவியும் வகிக்காமல் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பையும் பெற்றவர் சோ அவர்கள். பாராட்டு, புகழுரை, பொன்னாடை என்றால் ஓடி ஒளிந்து கொள்வார். ஒருமுறை ஆட்டோக்காரர் ஒருவர் சோ அவர்களை எதிர்பாராமல் பார்த்து 'சார் நீங்களா? என்று காலில் விழுந்தார். உடனே சோ அவர்களும் 'சார் நீங்களா? என்று கூறி ஆட்டோக்காரரின் காலில் விழுந்தார். இவ்வாறு பாராட்டு, புகழுரையை விரும்பாவிட்டாலும் தனக்கு சரியென்று தோன்றிய கருத்தை எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் துணிந்து சொல்ல கூடிய மனிதர்

சோ யார் யாரையெல்லாம் கடுமையாக விமர்சித்தாரோ அவர்கள் அனைவரும் கடைசி மூச்சு வரை அவரிடம் நண்பராக இருந்துள்ளனர். மொரார்ஜி தேசாயும், இந்திராகாந்தியும் பலமுறை சோ அவர்கள் தமிழக முதல்வராக வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். படித்த, நேர்மையான, அறிவாளி ஒருவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று கெஞ்சினார்கள். ஆனால் முடியவே முடியாது என்று கூறி மறுத்தவர் சோ.

துக்ளக் பத்திரிகையின் 46வது ஆண்டுவிழா கடந்த ஜனவரியில் நடைபெற்ற போது உடல்நலம் சரியில்லாத போதிலும் அரை மணி நேரம் பேசியவர். உண்மையான பிராமணன் என்றால் யார் என்பது அவர் எழுதிய 'எங்கே பிராமணன்' என்ற நூலை படித்து பார்த்தால் தெரியும். அதுமட்டுமின்றி அவர் எழுதிய 'ராமாயணம்', 'மகாபாரதம்' காலம் உள்ளவரை அவரது பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும். நமது முன்னே தற்போது பெரிய மனிதர்கள் மறைந்து கொண்டே இருக்கின்றார். அவருடைய இடம் எப்போதும் வெற்றிடமாகவே இருக்கும். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.