பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐஐடி பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை- மாணவி குற்றச்சாட்டு!
சென்னை ஐஐடியில் பயின்று வரும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் தன்னிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர் மீது நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியுள்ளார். சிவில்துறையை சேர்ந்த பேராசிரியர் மாதவ்குமார் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டார் என ஆராயச்சி மாணவி ஒருவர் கடந்த ஆண்டு அந்நிறுவனத்தில் உள்ள பாலியல் புகார்களை விசாரிக்கும் CCASH கமிட்டியிடம் ஆதாரத்துடன் புகார் அளித்து இருந்தார்.
இந்த புகாரை விசாரித்த CCASH கமிட்டி பேராசிரியர் மீதான தவற்றை உறுதிச்செய்தது. இதனால் அவரை பேராசிரியர் நிலையில் இருந்து உதவிப் பேராசிரியர் நிலைக்கு பதவி இறக்கம் செய்வது, அதோடு 5 ஆண்டுகளுக்கு மாணவர்கள் மத்தியில் பாடம் எடுக்க தடை விதிப்பது உள்ளிட்ட நான்கு பரிந்துரைகளை ஐஐடி நிர்வாகத்திற்கு CCASH கமிட்டி அறிவுறுத்தியது. இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம் இதுவரை பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவி தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே மெட்ராஸ் ஐஐடி மீது இடஒதுக்கீட்டை பின்பற்றாதது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் மீண்டும் குற்றம் சுமத்தி இருக்கிறார். மேலும் கடந்த ஆண்டு நீருபிக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பேராசிரியர் மாதவ்குமார் மீதான புகாருக்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.