செல்போனில் மூழ்கிய தாய், மாடியில் இருந்து விழுந்த ஒன்றரை வயது குழந்தை: சென்னையில் பயங்கரம்
பெற்றோர்களின் கவனக்குறைவால் குழந்தைகள் பலியாகி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலைக்குரியதாக உள்ளது. சமீபத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை முதல் பல குழந்தைகள் பெற்றோர்களின் கவனக்குறைவால்தான் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் செல்போனில் மூழ்கி இருந்த நேரத்தில் அவரது ஒன்றரை வயது குழந்தை இரண்டாவது மாடியின் பால்கனியிலிருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த சையத் மற்றும் மும்தாஜ் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இன்று சையது வேலைக்கு சென்று விட, அவரது மனைவி மும்தாஜ் தனது இரண்டாவது குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். இரண்டாவது மாடியின் பால்கனியில் நின்று கொண்டு அவர் தனது மகனுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த போது, வீட்டின் உள்ளே செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது. இதனால் குழந்தையை பால்கனி அருகிலேயே விட்டு விட்டு வீட்டினுள்ளே சென்று அவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மும்தாஜின் குழந்தை பால்கனியில் இருந்து கீழே விழுந்த சத்தம் கேட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மும்தாஜ் கீழே வந்து பார்த்த போது குழந்தை இரத்த வெள்ளத்தில் மிதந்தது. இதனையடுத்து உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துக்கொண்டு மும்தாஜ் ஓடினார். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதால் மும்தாஜ் கதறி அழுத காட்சி கல் நெஞ்சையும் கரைய வைக்கும் அளவுக்கு இருந்தது . இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.