உலக சினிமா சரித்திரத்தில் இடம்பெறும் கமல் திரைப்படங்கள்

Mersal-Vijay

பொதுவாக திரையுலகில் ஒரு நடிகர் மாஸ் நடிகராக, வெற்றி பெற்ற நடிகராக, சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டால், அவருக்கென்றும், அவருடைய படங்களுக்கு என்றும் ஒரு ஃபார்முலாவை அமைத்து கொள்வார். அதன்படியே அவரது பயணம் இருக்கும். அந்த பயணத்திலும் ஒருசில தோல்விகள் கிடைத்தாலும் பாதை மாறாமல் பயணிப்பார். புதிய முயற்சிகள் எடுத்து ரிஸ்க் எடுப்பதை விரும்ப மாட்டார்கள். ஆனால் இவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர் கமல். நாம் நடிக்கும் படம் வெற்றி பெறுமா? தோல்வி அடையுமா? என்பது குறித்து கவலைப்படாமல் நாம் சொல்ல நினைத்ததை சொல்லியே ஆகவேண்டும் என்று முடிவு செய்து கமல் நடித்த படங்கள் சில. பெரும்பாலும் கமலின் இந்த முயற்சிகளுக்கு வசூல் அளவில் தோல்விதான் கிடைத்துள்ளது. ஆனால் விமர்சனங்கள் அளவில் அவர் மிகப்பெரிய வெற்றியை பெற்ற காலத்தால் அழியாத கமலின் காவிய திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

வறுமையின் நிறம் சிவப்பு:

Mersal-Vijay

கம்யூனிசிய கருத்துக்களும், கமல்ஹாசனின் இயல்பான சொந்த கருத்துக்களும் அதிகம் உள்ள படம். ஒரு நேர்மையான, வேலை கிடைக்காத இளைஞனின் கோபம் இந்த படத்தின் ஒவ்வொரு வசனங்களிலும் இருக்கும். இந்த படத்தில் ஒரு காட்சி. விலை மதிப்புள்ள புத்தகங்களை வறுமையின் காரணமாக எடைக்கு போட பழைய பேப்பர் கடைக்கு கமல் போவார். அப்போது அந்த கடைக்காரர் பாரதியார் புத்தகங்களை மட்டும் ஒதுக்கிவிடுவார் . ஏன் என்று கமல் கேட்கும்போது அந்த கடைக்காரர் கூறும் பதில், 'சார் இது படிக்க நல்லா இருக்கும் ஆனா மடிக்க வராது என்பார். பாரதியாரின் கொள்கைகள் மட்டுமின்றி அவருடைய புத்தகங்களும் மடங்காது என்பதை குறிக்கும் இந்த காட்சி எத்தனை பேருக்கு புரிந்ததோ தெரியாது.

ராஜபார்வை:

Mersal-Vijay

ஒரு நடிகருக்கு 100வது படம் என்பது ஒரு மிகப்பெரிய மைல்கல். எப்படியாவது 100வது படம் வெற்றிப்படமாக இருக்க வேண்டும் என்றுதான் எந்த ஒரு நடிகரும் விரும்புவார்கள், ஆனால் 100வது படத்தை வெற்றிப்படமாக கொடுத்தவர்கள் எம்ஜிஆர், சிவாஜி, விஜயகாந்த் ஆகிய மூன்று நடிகர்கள் மட்டுமே. கமல்ஹாசனின் இந்த படம் 100வது படமாக இருந்தாலும், சினிமாவின் நிறத்தை மாற்றவேண்டும் என்ற ஆர்வத்தில் தெரிந்தே இந்த படத்தை சொந்த படமாக தயாரித்து நடித்தார். இந்த படத்தால் பொருளாதார ரீதியில் பலத்த நஷ்டம் அடைந்தாலும் இந்த படத்திற்காக அவர் விருது வாங்கியபோது கை 'ஜில்' என்று இருந்தததாக பேட்டி ஒன்'றில் கமல் குறிப்பிட்டார்.

உன்னால் முடியும் தம்பி:

Mersal-Vijay

இந்த படத்தில் கமலின் பாத்திரம் நான்கு நிலைகளில் இருக்கும். முதலில் எதைப்பற்றியும் கவலைப் படாத மேட்டுக்குடி இளைஞர். பின்னர் சமையல்கார கிழவரின் ஒரு செயலால் தாக்கம் அடைந்து, சமுதாய சீர்கேடுகள் மீது கோபம் கொண்ட இளைஞன். அடுத்து ஒரு சமுதாய நோக்கு கொண்ட ஒரு பெண்ணின் மீது காதல் வயப்படும் இளைஞன். கடைசியாக சமுதாயத்தை சீர்திருத்த முடியாத, அப்பாவின் மீது கோபம் கொண்ட கையாலாகாத இளைஞனிலிருந்து வீட்டை விட்டு வெளியேறி சமுதாயத்தை திருத்தும் இளைஞன். இப்படி நாலு நிலைகளில் அவருடைய பாத்திரம் படைக்கப்பட்டிருக்கும். ரிஸ்க்கும் எடுத்தும் வசூல் அளவில் வெற்றியும் பெற்ற கமல் படங்களில் ஒன்று

தேவர் மகன்:

Mersal-Vijay

ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரில் இந்த படம் இருந்ததால் மிகப்பெரிய பிரச்சனைகளையும் இந்த படம் சந்தித்தது. இதுகுறித்து கமல் ஒரு பேட்டியில் கூறியபோது நியாயமா, இரு சாதிகளுக்கு இடையிலான விஷயங்களை உரக்கப் பேசியிருக்கணும் இந்தப் படம். எல்லோரும் பார்க்கணும்கிற நோக்கத்துல உருவாக்கின படம் இது. `பாகப்பிரிவினை' படத்துக்கும் 'தேவர் மகன்' படத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை' என்று கூறினார். இருப்பினும் இந்த படம் குறித்து பல விமர்சகர்கள் கூறியது, 'இந்திய சினிமாவின் திரைக்கதை உதாரணத்துக்கான படங்களில் முக்கியமான படம் 'தேவர் மகன்'. இருப்பினும் இந்த படம் `நல்ல திரைக்கதைதான். ஆனால், மோசமான முன்னுதாரணம். கமல் இந்த படத்தில் நியாயம் பேசினாலும், `தேவர் மகன்' என்ற தலைப்பு இன்றைய பல சாதிய சினிமாக்களுக்கான முன்னோடியாக நிற்பது, மோசமான முன்னுதாரணம்தான்' என்று கூறினர்

நம்மவர்:

Mersal-Vijay

கமல்ஹாசனின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று. வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்களை யதார்ததமான வசனங்களில் கொடுத்திருந்தும் பலருக்கு புரியாத படம். ஒரு காட்சியில் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டு இருக்கும் போது சட்டென அனுமதி இல்லாமல் கரண் உள்ளே நுழைவார். அப்போது பாடம் நடத்த ஆரம்பித்து பத்து நிமிடம் ஆகிவிட்டது என்று கமல் கூற, அதற்கு கரண், 'அப்படி பத்து நிமிடத்தில் அப்படி என்ன நடத்தி கிழித்து விட்டாய்? என கரண் கேட்க.. அதற்கு கமல் அசால்ட்டாக 'அட அரட்டையாகவே இருக்கட்டுமே நடுவுல வந்தா எப்படி புரியும்' என்று சொல்லும் காட்சியில் பல அர்த்தங்கள் பொதிந்திருப்பதை இப்போது உணரலாம்

குணா:

Mersal-Vijay

அபிராமி என்ற கேரக்டர் யார்? என்று இன்று வரை பலருக்கும் புரியாத ஒரு படம். இந்த படம் சிலருக்கு ‘அபிராமி' எனும் காரணத்தால், சிலருக்கு 'கமல்' எனும் காரணத்தால், சிலருக்கு ‘ரோஷினி' எனும் காரணத்தால், சிலருக்கு 'மனிதர்கள் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதலல்ல' எனும் காரணத்தால் பிடித்த படம். இந்த படத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தால் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் எத்தனை முறை எழுதினாலும், அது குறைப் பிரசவமாகவே இருக்கும். ஏனென்றால், இந்தப் படத்தில் கமல் சொல்வதுபோல, ‘அபிராமி உள்ள இருக்கு. எழுத்தெல்லாம் வெளிய இருக்கு!'

குருதிப்புனல்:

Mersal-Vijay

தீவிரவாதிகள் பக்கம் இருக்கும் நியாயத்தையும், அந்த நியாயத்தால் விளையும் அநியாயத்தையும் இதைவிட ஒரு அழுத்தமாக வேறு ஒரு திரைப்படம் கூறியிருக்குமா? என்று தெரியவில்லை. வேறொரு மொழியில் வெளிவந்த ஒரு படத்தின் சாயல் என்று இந்த படத்தை கூறினாலும், அந்த ஒரிஜினல் படத்தை இயக்கிய இயக்குனரே இந்த படத்தை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேராம்:

Mersal-Vijay


இந்த படம் உருவாகும் போது மத்தியில் ஆட்சியிலிருந்தது பாஜக. தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியான திமுக. ஒவ்வொரு ஷாட் வைக்கும் போதும்...ஹிந்து, முஸ்லீம், பாஜக, காங்கிரஸ், இத்தனைக்கும் மேலாக சென்சார்.... இவை எல்லாம் கமலின் மண்டைக்குள் ஓடியதாம். சினிமா மொழி தெரிந்த காரணத்தால், தான் சொல்ல வந்த கருத்தை குறியீடாக்கி...அற்புதமாக பதிவு செய்தார் கமல். இன்னும் சொல்லப்போனால்... மேல குறிப்பிட்ட அனைவரையும் 'கடந்து' விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சென்சாருக்கு மட்டும் ஒரு வேன் நிறைய ஆவணங்களை எடுத்துப்போய் வாதிட்டு சென்சார் வாங்கியதாகவும் கூறப்படுவதுண்டு

அன்பே சிவம்:

Mersal-Vijay

இந்த படத்தில் கமலும், மாதவனும் பேசுவார்கள்..பேசுவார்கள் ..பேசிக்கொண்டே இருப்பார்கள். அதிலும் கமல் பேசும் வசனங்கள் எல்லாம் பயங்கர புத்திசாலித்தனமாக இருக்கும். இந்த பேச்சுக்கள் கடைகோடி ரசிகனுக்கு மட்டுமின்றி மேல்தட்டு மக்களுக்கும் கொஞ்சம் கூட புரியவில்லை என்பதே யதார்த்தம். ஒரு தொழிற்சங்க சகாவிற்கும், ஒரு புதுப் பொருளாதாரம் சார்ந்த இளைஞனுக்கும் இடையே மோதலோடு உருவாகும் பழக்கம் எப்படி ஒரு பிரயாணத்தின் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி பெறுகிறது என்ற கதையில் ஒன்றிரண்டு விபத்துக்கள், கொஞ்சம் வெள்ளம், ஒரு வீதி நாடகம், சில கோஷங்கள், கிரண், ஒரு சண்டை, ஒரு டூயட் ஆகிய காட்சிகளுடன் கூறிய படம்

விருமாண்டி:

Mersal-Vijay

தூக்குத் தண்டனை குறித்த சிந்தனை, சிறைச்சாலைகளில் நடக்கும் சட்ட மீறல்கள் குறித்த கேள்விகள், கிராம விவசாயம் மற்றும் தண்ணீர்ப் பிரச்சினை பற்றிய பார்வைகள் என்று பல களங்களை பேசிய படம். கிராமத்து மண்ணின் வெள்ளந்தி மணம் கமழும் காட்சிகள், அப்பத்தா மடிந்து விடும் காட்சியில் விருமாண்டி பேசும் வசனங்கள் இந்த படத்தின் ஹைலைட். வன்முறை காட்சிகள் கொஞ்சம் அதிகம் என்றாலும் தமிழ் சினிமா அதுவரை கண்டிராத தத்ரூப காட்சிகள் இந்த படத்தில் இருந்தன. குறிப்பாக ஜல்லிக்கட்டு காட்சி இந்த படத்தை போல் தத்ரூபமாக இதுவரை எடுக்கப்படவில்லை என்பதே உண்மை

உன்னை போல் ஒருவன்:

Mersal-Vijay

வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்' என்ற காமன்மேனின் கருத்தை தாங்கிய படம். வீட்டுக்கு காய்கறி வாங்கிப் போகும் பையிலிருந்து விழுந்த தக்காளியை கூட விடாமல் பொறுக்கிக் கொண்டு போகும் ஒரு சாதாரண காமன்மேன் சென்னையின் ஐந்து, ஆறு இடங்களில் குண்டு வைத்துவிட்டு, கமிஷனருக்கு போன் செய்கிறான், நான்கு தீவிரவாதிகளை விடுவிக்காவிட்டால், அமைதி பூங்காவான தமிழ்நாடே பற்றி எரியும் என்று. அந்த நிமிடத்தில் இருந்து சூடு பிடிக்கும் கதை, படம் முடியும் வரை குறையவேயில்லை என்பதே இந்த படத்தின் ஸ்பெஷல்.

Mersal-Vijay

கமல்ஹாசனின் பத்து ஜனரஞ்சகமான, கமர்ஷியலான படங்களுக்கு ஒன்றாக இதுபோன்ற காலத்தால் அழியாத காவிய படங்களும் வெளிவந்துள்ளது. இந்த படங்களில் சில வசூல் அளவில் வெற்றி பெறாமல் போகலாம். ஆனால் உலக சினிமா சரித்திரத்தில் இடம்பெறும் படங்களில் இவைகளும் ஒன்றாக இருக்கும் என்பதே இந்த படங்களுக்கு கிடைத்த தனிச்சிறப்பு

பொதுவாக திரையுலகில் ஒரு நடிகர் மாஸ் நடிகராக, வெற்றி பெற்ற நடிகராக, சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டால், அவருக்கென்றும், அவருடைய படங்களுக்கு என்றும் ஒரு ஃபார்முலாவை அமைத்து கொள்வார். அதன்படியே அவரது பயணம் இருக்கும்.