செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து 5000 கன அடி நீர்: 20 பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று நண்பகல் 12 மணி அளவில் வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் நிவர் புயல் காரணமாக தொடர்ச்சியாக சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு வினாடி அதிகரித்துக் கொண்டே வந்தது.
இதனை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடும் நீரின் அளவும் அதிகரித்தது. கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இதனை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லும் பகுதிகள் எல்லாம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது மேலும் கூடுதலாக அதாவது வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், வரதராஜபுரம், திருமுடிவாக்கம், ஆதனூர், மேற்கு தாம்பரம், பொழிச்சலூர், பம்மல், நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், அனகாபுத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் உடனே பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.