close
Choose your channels

'என் செருப்பை கழட்டிவிடு'.. பழங்குடியின சிறுவர்களை அவமதித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

Thursday, February 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யானைகளுக்கான சிறப்பு புத்துணர்வு முகாம் ஒவ்வோர் ஆண்டும் 48 நாள்கள் நடைபெறும். இந்தப் புத்துணர்வு முகாமில் தமிழகத்தில் வனத்துறை மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகள் பங்கேற்கும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி முகாமில் நடைபெற்று நிறைவடைந்தது.

இந்த நிலையில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு அந்தந்த முகாம்களில் இன்று தொடங்கியது. முதுமலை தெப்பக்காட்டில் துவங்கவிருந்த முகாமை துவக்கி வைக்க வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வந்திருந்தார். தொடக்க விழா இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் யானைகள் அனைத்தும் வரிசையில் நிற்கவைக்கப்பட்டிருந்தன. வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காத்திருந்தனர்.

காலை 9.40-க்கு வந்த வனத்துறை அமைச்சரை வரவேற்று முகாமில் உள்ள கோயிலுக்கு அழைத்து வந்தனர். கோயில் அருகில் வந்த அமைச்சர் ஓரமாக நின்றுகொண்டிருந்த இரண்டு சிறுவர்களை `வாங்கடா இங்க' என அழைத்தார். பயத்தில் சிறுவர்கள் தயங்க அருகில் இருந்த வனத்துறையினர், அமைச்சர் அருகில் செல்லவைத்தனர். அங்கு இருந்த அதிகாரிகள், அமைச்சர் சிறுவர்களிடம் கல்வி தொடர்பாக கேள்விகள் கேட்பார் எனத் தயங்கிய சிறுவர்களை அமைச்சரிடம் வரச் செய்தனர்.

ஆனால் சிறுவர்களிடம் அமைச்சர், `செருப்பு பக்கிளை கழற்றிவிடு' என்றார். அதில் பயந்துபோன ஒரு சிறுவன் கீழே அமர்ந்து காலணிகளைக் கழற்றினார்.

இதைச் சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் மிரண்டுபோயினர். உடனே சுதாரித்த குன்னூர் எம்.எல்.ஏ சாந்திராமு பத்திரிகையாளர்களை படம் எடுக்கவிடாமல் தடுத்தார். `யாரும் போட்டோ எடுக்காதிங்க' என போலீஸார் எச்சரித்தனர். சிறுவர்கள் செருப்பை கழற்றியப் பின்னர் அமைச்சர் அருகில் இருந்த உதவியாளர் காலணிகளை எடுத்து ஓரமாக வைத்தார்.

இந்த இரண்டு சிறுவர்களும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் பெற்றோர் பாகன்களாக உள்ளனர். பழங்குடி சிறுவர்களை அழைத்து காலணியைக் கழற்றச்செய்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.