கப்பாவை தொடர்ந்து செஞ்சூரியனில் சரித்திரம் படைத்த இந்திய அணி!


Send us your feedback to audioarticles@vaarta.com


இந்த ஆண்டின் துவக்கத்தில் கப்பா மைதானத்தில் விளையாடிய இந்திய அணி கடந்த 1988 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலியாவை சொந்த மைதானத்தில் வீழ்த்தி சாதனைப் படைத்தது. இதனால் இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களை கொண்டாடி தீர்த்தனர்.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணியை செஞ்சூரியனிலும் யாராலும் வீழ்த்த முடியாது என்றிருந்த கருத்தை உடைத்து தற்போது முதல் முறையாக இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கலந்துகொண்ட இந்திய அணி கடந்த 26 ஆம் தேதி முதல் செஞ்சூரியன் மைதானத்தில் விளையாடி வருகிறது.
செஞ்சூரியன் மைதானத்தில் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று இருக்கின்றன. இந்தப் போட்டிகளில் 21 வெற்றிகளைப் பெற்ற தென்னாப்பிரிக்கா கடந்த 2000இல் இங்கிலாந்து, கடந்த 2014இல் ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே தோற்றுப்போனது. மேலும் 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. மேலும் இதுவரை 9 நாடுகள் செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடியுள்ளன. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மட்டும் வெற்றிப்பெற தற்போது முதல் முறையாக இந்தியாவும் சாதனை பட்டியலில் இணைந்திருக்கிறது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்நது 10 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 327 ரன்களை குவித்த நிலையில் தென்னாப்பிரிக்கா 197 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதனால் 130 என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்தியா 174 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து 305 என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா வெறும் 191 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியிருக்கிறது.
இந்நிலையில் செஞ்சூரியன் வெற்றிக்கு கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தது மற்றும் திறமையான வேகப்பந்து வீச்சே காரணம் என்று கூறப்படுகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் 123 ரன்களை குவித்த கே.எல்.ராகுல் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஷமி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசாத்தியமாக விளையாடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments