திரையரங்குகள் திறப்பது குறித்து அதிர்ச்சி கருத்தை தெரிவித்த அமைச்சர்!
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடந்த நான்கு மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு நடக்கவில்லை என்பதும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மத்திய அரசு சமீபத்தில் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததை அடுத்து திரையரங்குகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சற்று முன் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ’மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பதற்கு தற்போதைக்கு வாய்ப்பு இல்லை’ என்று கூறினார்.
’கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து, இயல்பு நிலை திரும்பியது பின்னரே தியேட்டர்களை திறக்க வாய்ப்பு’ என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ’ஓடிடியில் திரைப்படம் வெளியாவதை தடுக்க சட்டம் எதுவும் கிடையாது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களின் இந்த கருத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமைச்சரின் இந்த பேட்டியால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ஓடிடி ரிலீசுக்கு தயாரானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.