மீண்டும் தேசிய விருதை பெறுவாரா பிரகாஷ்ராஜ்?
கடந்த 2008ஆம் ஆண்டு பிரபல மலையாள மற்றும் தமிழ்ப்பட இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய காஞ்சிவரம் என்ற படத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது என்ற மிகப்பெரிய அந்தஸ்து கிடைத்தது. காஞ்சிபுரம் பட்டு நூல் நெசவு மக்களின் கதையில் மிக அற்புதமாக நடித்திருந்த பிரகாஷ்ராஜுக்கு அதன்பின்னர் அதுபோன்ற ஒரு வேடம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் அந்த குறையை போக்கும் வண்ணம் பிரகாஷ்ராஜ் மீண்டும் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, 'பிரியதர்ஷனின் மிக அற்புதமான திரைக்கதை ஒன்றை நேற்றிரவு கேட்டேன். மீண்டும் காஞ்சிவரம் குழுவினர் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கமல்ஹாசனின் தூங்காவனம், ரஜினி -ரஞ்சித் படம் மற்றும் ஜாலி எல்.எல்.பி படத்தின் தமிழ் ரீமேக் என பிசியான ஷெட்யூலில் இருக்கும் பிரகாஷ்ராஜ், தனது விருப்பத்துக்குரிய இயக்குனர் பிரியதர்ஷனுக்காக அட்ஜெட்ஸ்ட் செய்து கால்ஷீட் கொடுக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. காஞ்சிவரம் படத்தில் பெற்ற தேசிய விருதை மீண்டும் இந்த புதிய படத்தின் மூலம் பிரகாஷ்ராஜ் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.