தியேட்டர்கள் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி தகவல்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அன்லாக் ஒன்று முதல் மூன்று வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்தக் தளர்வுகள் மூலம் கிட்டத்தட்ட நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி விட்டதாகவே கருதப்படுகிறது.
வழிபாட்டு தலங்கள் திறப்பது, ஜிம்கள், முடிதிருத்தும் நிலையங்கள் திறப்பது உட்பட கிட்டத்தட்ட அனைத்துமே திறப்பதற்கு அனுமதி கிடைத்துவிட்டது. இருப்பினும் திரையரங்குகள் திறப்பதற்கு மட்டும் இன்னும் அரசு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திரை அரங்குகளை திறந்து நிபந்தனைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் அவ்வப்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகளை தமிழக அரசும், மத்திய அரசும் பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில் அன்லாக் 3 வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைவதால் அதன் பின்னர் மத்திய அரசு வழிகாட்டுதல்படி திரையரங்குகள் திறக்கப்படும் என செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் தியேட்டர்களை திறப்பது குறித்து மத்திய அரசு செப்டம்பர் 1ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே அன்லாக் 3 முடிந்தவுடன் கண்டிப்பாக தியேட்டர்கள் திறக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பரில் தியேட்டர் திறக்கப்பட்டால் அதன் பின்னர் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.