ஐபிஎல் திருவிழா ஸ்பெஷல் டிரைலர் சைலண்ட் சுனாமி சன் ரைசர்ஸ்.... பேட்டிங், பவுலிங் மாஸ்டர்ஸ்!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளில் பேட்டிங், பவுலிங் என சமபலம் கொண்ட அணியாகத் திகழ்வது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இதுவரையிலான ஹைதராபாத் அணியின் பயணம் குறித்துப் பார்க்கலாம். 2012இல் டெக்கான் சார்ஜர்ஸ் அணி விலகியதும் 2013இல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் முறையாக உருவாக்கப்பட்டது. இந்த ஏழு ஆண்டு காலப் பயணத்தில் ஹைதராபாத் அணி 5 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. அதில் இரண்டு முறை ஃபைனலுக்குத் தகுதி பெற்றுள்ளது.
வாயடைத்துப் போன பெங்களூரு
கடந்த 2016இல் பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஃபைனலில் விராட் கோலி, ஏபி டிவிலியர்ஸ், கிறிஸ் கெயில் ஆகியோரை மீறி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பை வென்றது. அந்த சீசனில் ஹைதராபாத் அணியின் வெற்றிப் பயணத்தில் அனைவருக்கும் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது அந்த அணியின் பவுலிங்தான். அந்த சீசனில் ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வெறும் 6 விக்கெட் மட்டுமே வீழ்த்தினர். வெற்றிப் பயணத்தில் முடித்த அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் குறைந்தபட்சமாக விக்கெட் வீழ்த்தியது இதுவேயாகும். வேகப்பந்து வீச்சாளர்களின் பொறி பறக்கும் பந்து வீச்சால் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது.
புது வரலாறு
அதே போல 2019இல் நடந்த தொடரில், 14 லீக் போட்டிகளில் வெறும் 6 போட்டிகளில் மற்றும் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது ஹைதராபாத் அணி. இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் 6 அல்லது அதற்கு குறைவான வெற்றிகளைப் பதிவு செய்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணி என்ற புது வரலாறு படைத்தது.
இரண்டாவது அதிகம்
சொந்த மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்ததாக அதிக வெற்றி சதவீதம் கொண்ட அணியாக ஹைதராபாத் அணி திகழ்கிறது. ஹைதராபாத் மைதானத்தில் அந்த அணியின் வெற்றி சதவீதம் 68.18 ஆகும். அதேபோல ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் பார்ட்னர்ஷிப் அசரவைக்கிறது. 10 முறைக்கு மேல் 100 ரன்கள் சேர்த்து அசத்தலான துவக்கம் அளிக்கும் அணியாகத் திகழ்கிறது. வேறு எந்த அணியிலும் தொடக்க ஜோடி இந்த அளவுக்கு ஜொலிக்கவில்லை.
ஹைதராபாத் ஆரஞ்சு தொப்பி
இதற்கு முக்கியக் காரணமாக் திகழ்வது அந்த அணியின் அதிரடி துவக்க வீரர் டேவிட் வார்னர்தான். இவர் இதுவரை 3271 ரன்கள் அடித்து அந்த அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரராகத் திகழ்கிறார். இவர் 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளார்.ஆரஞ்சு தொப்பியை ஹைதராபாத் அணி வீரர்கள் குத்தகைக்கு எடுத்துவிட்டார்கள் என்றே சொல்லும் அளவுக்கு அந்த அணி வீரர்கள் கடந்த 5 ஆண்டுகளில் 4 முறை வென்றுள்ளனர். இதற்குக் கொஞ்சமும் சளைக்காமல் பவுலிங்கில் அந்த அணியின் புவனேஷ்வர் குமார் 2016, 2017 ஆண்டுகளில் அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலருக்கு வழங்கப்படும் பர்ப்பிள் தொப்பி விருதை வென்றுள்ளார்.
சிறந்த போட்டியாளர்கள்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் பொருத்தவரையில் மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் கோப்பைக்கான வாய்ப்பு குறைவாகவே இருந்தாலும், இது கோப்பையை வெல்லும் தகுதி படைத்த அணி என்பதை அந்த அணியின் திறமையான வீரர்கள் ஒவ்வொரு முறையும் நிரூபித்து மற்ற அணிகளுக்கு சவால் அளித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
சன் ரைசர்ஸ் போட்டிகள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kishore Sabarinathan
Contact at support@indiaglitz.com
Comments