close
Choose your channels

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் பிறந்த தினம் இன்று

Monday, January 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் பிறந்த தினம் இன்று

இந்திய இசையில் புதுமைகளைப் புகுத்தி இந்திய திரையுலகை உலகளவில் அறிய செய்த, இந்தியாவின் ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிறந்த தினம் இன்று. இவரது இசைக்கு இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள்  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  வயது 52, இசைப்பயணத்தில் 27 ஆண்டுகள் எனக் காலம் கடந்துசென்றாலும் தன் முகத்திலும் இசையிலும் எப்போதும் இளமையுடன், புதுமையை அள்ளித் தெளிப்பவர்.

ஏ.ஆர். ரஹ்மான் 1966 ஜனவரி 6 அன்று சென்னையில் பிறந்தவர். அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பதே இவருடைய இயற்பெயராகும். இவரது தந்தை மலையாள திரைப்படத் துறையில் இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். சிறுவயதிலேயே தந்தையை இழந்து வறுமைக்குத் தள்ளப்பட்ட இவரது குடும்பம் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில்தான் வாழ்க்கை நடத்தினர்  என்பது குறிப்பிடத்தக்கது.  அடிப்படையில் இசை ஆர்வமுடைய இவர் வறுமையிலும் பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொண்டிருந்தார். பின்னர் ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசையையும் கற்றுக் கொள்ள தொடங்கினார்.

ஏ.ஆர். ரஹ்மான் தனது 11 ஆவது வயதில் இசைஞானி இளையராஜாவின் இசைக்குழுவில் கீபோர்டு வாசிக்கத் தொடங்கி, எம்.எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியுள்ளார். 1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரேஜா படத்தின்  ‘சின்ன சின்ன ஆசை’ ‘புது வெள்ளை மழை’ ‘தமிழா தமிழா’ என்ற புதுமையான இசைக்கீற்றுக்கள்  மூலம் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே யார் இந்த இந்த இசையமைப்பாளர் என்று மக்களைத் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். ரோஜா படத்திலேயே திரை இசையில் புதுமையைப் புகுத்தித் தனது முத்திரையை நங்கூரமாகப் பதித்துக் கொண்டார்.  தனது முதல் படத்திலேயே (ரோஜா) தேசிய விருதினையும் பெற்றார் என்பது மேலும் பலத்தினை ஏற்படுத்தியது.

தமிழ் படங்களைத் தொடர்ந்து இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிப்படங்களுக்கும் இசையமைக்கத் தொடங்கிய ஏ.ஆர். ரஹ்மான் தனது புதுமையான இசை வார்ப்பினால் இசைப்புயல் என்ற அடைமொழியினையும் பெற்று பாராட்டுக்குரியவராக மாறினார். 1997 இல் மின்சாரக் கனவு, 2002 இல் லகான், 2003 இல் கன்னத்தில் முத்தமிட்டால் என்று அடுக்கடுக்காக தேசிய விருதுகளையும் பெற்று திரையுலகில் நீங்காப் புகழையும் பெற்றார்.

கோல்டன் குளோப் விருது, கிராமிய விருது, தேசிய விருது எனப் பல விருதுகளைப் பெற்றுக்குவித்த நமது இசைநாயகன் 2009 ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார். ஆஸ்கரின் விருதின் மூலமாக நமது இந்திய இசையை உலகிற்கு எடுத்துச் சென்றார் என்பது பெருமைமிக்க அடையாளமாக மாறியது. ஆஸ்கர் விருதினைப் பெற்றுக்கொள்ளும்போது ஏ.ஆர். ரஹ்மான் தமிழில் பேசி தனது தாய்நாடு, தனது அடையாளம் குறித்து பெருமைக் கொள்வதாகப் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வுதான் இந்திய மக்களை கூடுதலாக மற்றுமொரு விருதினைப் பெற்றது போலவே உணரவைத்தது எனலாம்.

ஏ.ஆர். ரஹ்மான் தனது இசைப் பரிமாணத்தை எப்பொழுதும் இளமையாக வைத்திருப்பதுடன் தொடர்ந்து புதிய வார்ப்புகளையும் புதிய வடிவங்களையும் இசையில் புகுத்திக்கொண்டே இருப்பது அவரை புத்துணர்ச்சியுடன் அணுகுவதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது எனலம்.

தங்களது புத்துணர்ச்சிக் கொண்ட  இசையைப் போலவே தாங்களும் மகிழ்ச்சியுடன் இசை பயணம் செய்யுங்கள் இசைப்புயலே. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.