close
Choose your channels

தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்: முதல் நாளே லாபம்..!

Wednesday, March 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் இன்று பட்டியலிடப்பட்டிருகிறது.

இதற்கான பிரத்யேக தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது தேசிய பங்கு சந்தையின் தென் மண்டல வணிக பிரிவின் தலைவரான கௌரி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு சந்தை வர்த்தகத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக உதவி புரியும் கம்பட்டா செக்யூரிட்டிஸ் லிமிடெட் நிறுவனத்தினை சார்ந்த விபின் அகர்வால், இந்நிறுவனத்தின் நிதி தணிக்கையாளரான சுந்தர்ராஜன், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் ஐசரி கே கணேஷ், முதன்மை நிர்வாக நிர்வாக அதிகாரியான அஸ்வின், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரான ப்ரீத்தா கணேஷ் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

மேலும் இவ்விழாவில் தேசிய பங்கு சந்தையில் முதன்முதலாக பட்டியலிடப்பட்டிருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் நிறுவனத்தின் முயற்சிகளை பாராட்ட தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜீவா, Hiphop ஆதி, ஆரி அர்ஜுனன், ஆரவ், பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களும், இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி, பேரரசு, ஆர்வி உதயகுமார், ஆர். கே. செல்வமணி, கௌரவ் நாராயணன், நடிகை சங்கீதா கிரிஷ், இயக்குநர்கள் கோகுல், ஏ. எல். விஜய், தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளில் ஒருவரான திருப்பூர் சுப்பிரமணியம் என திரையுலகின் முன்னணி பிரபலங்கள் வருகை தந்தனர். நிகழ்விற்கு வருகை தந்திருந்த அனைவரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் முன்னுதாரண முயற்சியை அங்கு அமைக்கப்பட்டிருந்த மணி ஓசையை எழுப்பி தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன தலைவரான ஐசரி கே கணேஷ் பேசுகையில், '' இங்கு வருகை தந்திருக்கும் தொழில்துறை, கல்வித்துறை, திரைத்துறையைச் சேர்ந்த அனைவருக்கும் வணக்கம். எங்களது நிறுவனத்தின் பங்கு சந்தை வர்த்தகத்தின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதற்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

வேல்ஸ் குழுமம் தொடக்கத்தில் வேல்ஸ் கல்வி அறக்கட்டளை எனும் பெயரில் நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தொடங்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டில் செவிலியர் பயிற்சி கல்லூரியாக 39 மாணவர்களுடனும், 10 ஊழியர்களுடனும் தொடங்கப்பட்டது. தற்போது 43 நிறுவனங்களும், ஏறத்தாழ 40 ஆயிரம் மாணவர்களும் கல்வி பயில்கிறார்கள். முப்பது ஆண்டுகளில் இந்த முன்னேற்றமும் வளர்ச்சியும் நடைபெற்றிருக்கிறது.

நான் சிறிய வயதிலேயே என் தந்தையும், நடிகருமான ஐசரி வேலனுடன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த "ரிக்க்ஷகாரன்" எனும் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று பார்வையிட்டிருக்கிறேன். அப்போதிருந்து தற்போது வரை.. கிட்டத்தட்ட 45 ஆண்டு காலமாக எனக்கு தமிழ் திரையுலகத்துடன் தொடர்பிருக்கிறது.

நான் பச்சையப்பன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, ‘வாக்குமூலம்’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்திருக்கிறேன்.

தயாரிப்பு மட்டுமல்ல 25 முதல் 30 திரைப்படங்கள் வரை நான் நடித்திருக்கிறேன். 25 படங்களை தயாரித்திருக்கிறேன். எனவே திரை துறையில் நல்ல அனுபவத்தையும், திரை துறையினரிடத்தில் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறேன். இதன் காரணமாக தற்போது பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட உள்ளோம்.

2019 ஆம் ஆண்டில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் நிறுவனத்தை தொடங்கினேன். தற்போது தேசிய பங்கு சந்தை வர்த்தகத்தில் எங்களுடைய நிறுவனம் பட்டியலிடப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக எங்களுடைய முயற்சி ஓராண்டு காலம் தாமதமானது. எங்களுடைய திட்டம், மூன்றாண்டுகளுக்கு பிறகு நிறைவேறியிருக்கிறது.

பங்கு சந்தை வர்த்தகத்தில் நுழைந்த முதல் நாளே பலர் எங்களுடைய நிறுவன பங்குகளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். எங்கள் பங்குகளின் தொடக்க விலை 99/- ரூபாய் என்று நிர்ணயித்தோம், தற்போது 106 ரூபாய்க்கு வர்த்தகமாகி இருக்கிறது. பங்கு சந்தை வர்த்தகம் தொடர்பான நுட்பமான விபரங்களை தற்போது நேரடியாக கற்கத் தொடங்கி இருக்கிறேன். விரைவில் இதில் நிபுணத்துவம் பெறுவோம் என நம்பிக்கை உள்ளது.

பொழுதுபோக்கு துறையில் எங்களுடைய நிறுவனம் தரமான படைப்புகளை வழங்கி சிறப்பாக செயல்படும். எங்களுடைய பங்குகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதலீட்டாளர்களுக்கு விரைவில் டிவிடெண்ட் எனப்படும் ஊக்கத் தொகையை வழங்குவதற்கு முயற்சிப்பேன் என கூறினார்.

எங்களுடைய நிறுவனத்தின் பங்கு சந்தை வர்த்தக முயற்சிக்கு உறுதுணையாக இருந்த மதன் லால், வெங்கடேஷ், சச்சின் பிள்ளை, குணா உள்ளிட்ட ஏராளமானவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களது நிறுவனம், திரைப்படத் தயாரிப்புகளில் மட்டுமல்லாமல் திரைப்படத்தின் விநியோகம் மற்றும் திரையிரங்க திரையிடல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

எங்கள் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரூவில் படப்பிடிப்பு வளாகம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடனான உள்ளரங்கத்துடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவினை உருவாக்கி இருக்கிறோம் ஜூன் மாதம் இதனை பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருக்கிறது. இந்த ஜாலிவுட் எனப்படும் பொழுதுபோக்கு சாகச பூங்காவின் 77 சதவீத பங்குகளை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் பெற்றிருக்கிறது. இது இந்தியாவிலேயே தலைசிறந்த தீம் பார்க்காக திகழும்.

முதலீட்டாளர்களுக்கு ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். எங்களது நிறுவனம் ஐந்து திரைப்படங்களை வெளியிட தயார் நிலையில் வைத்திருக்கிறது. ஐந்து திரைப்படங்களை தயாரித்து வருகிறது மேலும் ஐந்து திரைப்பட தயாரிப்பிற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி இருக்கிறது.

ஜெயம் ரவி - ஏ ஆர் ரகுமான் ஆகியோர் கூட்டணியில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் திரைப்படம் ஒன்று தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் பான் இந்திய திரைப்படம் ஒன்றும் தயாராகிறது. இதனை இயக்குனர் பா விஜய் இயக்குகிறார். தொடர்ந்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்காகவும், அவர்களின் முதலீடு லாபத்துடன் உயர்வதற்கான முயற்சிகளிலும் முழுமூச்சாக ஈடுபடுவோம்.'' என்றார்.

முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த விருந்தினர்களையும், பார்வையாளர்களையும், முதலீட்டாளர்களையும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியான அஸ்வின் வரவேற்றார். நிகழ்ச்சியின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரான ப்ரீத்தா கணேஷ் நன்றி தெரிவித்தார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.