close
Choose your channels

வெற்றிமாறன் சார்பில் நான் வருத்தம் தெரிவிக்கின்றேன்: பாரதிராஜா

Tuesday, October 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வழக்கம்போல் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இந்த படத்தில் இருக்கும் ஒரு வசனத்தை நீக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் வேண்டுகோள் விடுக்க, அதனை ஏற்றுக்கொண்டு வெற்றிமாறனும் அந்த வசனத்டை மியூட் செய்துவிட்டார். இந்த நிலையில் இந்த படம் குறித்தும், இந்த படம் கூறும் செய்தி குறித்தும் இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது:

நமக்குள் சாதி சமய வேற்றுமைகள் இல்லை. இந்தக் கருத்தைத்தான் திரைப்படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். சாதி, சமயம், மொழி, இனம், நாடு போன்ற தற்சார்புப் பற்றுகளிலிருந்து (Self regarding sentiments) நீங்கியவர் வெற்றிமாறன். அதனால்தான் ஒடுக்கப்பட்டவர்களின் துயரத்தை, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, அவர்களது எழுச்சியை - அவர்களது வலியையும், அவமானத்தையும் உள்வாங்கி - திரைப்படமாக எடுத்திருக்கிறார்.

ஒடுக்கப்பட்டோரின் திரைப்படத்தை ஒடுக்கப்பட்டோர் தான் எடுக்க முடியும் என்பது பழங்கதை என்ற உண்மையை, நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் கரிசல் காட்டுச் சூறைக் காற்றின் வேகத்தில் உணர்ச்சிப் பெருக்குடன் ஒரு கதையாகச் சொல்லியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த கலைஞர்கள் வெற்றிமாறனைக் காட்டிலும் சிறந்த படத்தினைக் கொடுக்கமுடியும், தங்களது நேரடி அனுபவங்களைக் கதையாகச் சொல்வதால். அப்படியான படங்கள் – அசுரனையும் மிஞ்சிய அப்படியான படங்கள் – தமிழில் ஓடட்டும். அப்படிப் படங்கள் வரும்போது அந்தப் படங்களை வரவேற்கிற முதல் தமிழனாக இந்த பாரதிராஜா ஓடோடி வந்து அங்கே நிற்பேன். ஆனால், என்னை முந்திக்கொண்டு வந்து நிற்கிற ஆள் வெற்றிமாறன்.

அதற்கு முன்னர், தமிழக மக்களாகிய நாம், அசுரனை வரவேற்போம். இந்தப் படத்தில் வருகிற ஒரு வசனம் குறிப்பிட்ட வகுப்பினரை - உயர் வகுப்பினராகத் தம்மை அறிவித்துக்கொள்கிற குறிப்பிட்ட வகுப்பினரைக் காயப்படுத்தியிருப்பதாகக் கருத்துகள் வெளிவந்தன. பின்னர், அந்த வசனமும் நீக்கப்பட்டுவிட்டது. அசுரனின் நோக்கம், தமிழக மக்களில் எவரையும் புண்படுத்துவது அல்ல.

தமிழக மக்களை, ‘நாம்’ என்ற ஓருணர்ச்சிக்குப் பண்படுத்துவதாகும். இருந்தபோதிலும், எவராவது புண்பட்டிருந்தால் வெற்றிமாறனின் சார்பாக, ‘தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை’ தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இப்படியொரு நல்ல திரைப்படத்தைக் கொடுத்தமைக்காக, வகுப்பு வேற்றுமைகள் ஒழிந்ததொரு தமிழ் நிலத்தைக் கனவு கண்டமைக்காக, வெற்றிமாறனின் பெருமையானது பாரதிராஜாவாகிய எனது பெருமையுமாகும்.

அதனாலேயே வெற்றிமாறனின் சார்பாக நான் கேட்டுக்கொள்வதெல்லாம், உங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து அந்த வசனம் நீக்கப்பட்டு விட்டது. கசப்பை மறந்துவிட்டுப் படம் பாருங்கள். உங்களுக்கும் பிடித்த படம்தான் என்று உணர்வீர்கள். ஒரு முறை பார்த்தால் பிறரையும் பார்க்கச்சொல்லி நீங்களே பரிந்துரை செய்வீர்கள்.

இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.