close
Choose your channels

வடசென்னை - விடுபட்டுவிடக்கூடாத பதிவு

Thursday, October 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வடசென்னை - விடுபட்டுவிடக்கூடாத பதிவு

மலையாளத் திரைப்படங்களில் ஏதேனும் அரசியல் சார்ந்த காட்சிகள் தேவைப்பட்டால் கேரளத்தின் அரசியல் களங்களை அப்படியே அப்பட்டமாகப் பயன்படுத்துவார்கள். உதாரணமாக த்ரிஷ்யம் படம். கதைக்களத்தில் சம்பந்தமில்லாத மோகன்லாலின் மச்சினன் கதாப்பாத்திரம்  ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காரராகவே போராட்டக்களங்களில் சித்தரிக்கப்பட்டிருப்பார். ஆனால், தமிழ் சினிமாவில் மட்டும் புதிது புதிதாக கட்சிப்பெயர்களில் கலர்கொடிகளில் அரசியல்வாதிகள் சொல்லப்படுவார்கள். அபூர்வமாக சில படங்களில் ஆங்கொன்றும் ஈங்கொன்றும் அரசியல் தட்டுப்படும். என் நினைவு சரியாக இருந்தால் பாலச்சந்தர் தனது இருகோடுகள் திரைப்படத்தின் ஒரு காட்சியில் முதலமைச்சராக கலைஞரையே பயன்படுத்தியிருந்தார். அந்த வகையில் நேற்று வடசென்னை பார்த்ததும் சினிமாவில் சொல்லப்படும் அரசியல் பின்னணிகளுக்கு ஒரு புதிய வழி திறக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றியது. திமுக அதிமுக என்று பதினைந்தாண்டு கால தமிழக அரசியலின் வாடையிலிருந்து கதையின் திரைக்கதை பின்னப்பட்டிருந்தது ஆச்சர்யம்.
 
பொதுவாக அரசியல் பேசும் படங்கள், அரசியல் படங்கள் என்று கருத்துக்களால் படங்களின் தோற்றத்தை வரையறுப்பார்கள். வடசென்னை ஒரு சமரசமில்லாத மற்றுமொரு அரசியல் படம்.
 
'ஒருத்தன் செத்தா முடியிற சண்டையாக்கா இது. ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்ட செய்யணும். திருப்பி அடிக்கலன்னா இவுனுங்க நம்மள அடிச்சி ஓடவிட்டுனே இருப்பானுங்கோ. குடிசையோ குப்பமேடோ நம்ம ஊருக்கா; நாம தான் இத பாத்துக்கணும்;  நாம தான் சண்ட செய்யணும்' - ட்ரைலர் சொன்ன முன்கதை இது. படத்தின் முழுக்கதையும் இது தான். இனிவரப்போகும் பாகங்களுக்கும் சேர்த்து.
 
'நம்ம ஊருக்கா நாம தான் இத பாத்துக்கணும்' என்ற கருத்து தான் நாம் திரைப்படங்களில் கண்டு கொண்டாடிய விவாதித்த அரசியல். இந்த கொண்டாட்டத்தை விவாதத்தை வடசென்னை மீண்டும் வெளிச்சத்தில் நிறுத்துகிறது. வாழ்க்கையின் ஓட்டமாக அரசியலைக் காட்சிப்படுத்தும்பொழுது சம்பந்தப்பட்ட நிலப்பரப்பின் கதைமாந்தர்கள் அவர்கள் வாழ்வியலோடு ஒன்றுபட்டிருக்க வேண்டும். அந்த ஒன்றுதல் வேற்று நிலத்துக்காரர்களுக்கு அந்நியமாகத் தெரியலாம். 'நாம பேசுறதே இவுனுங்களுக்குப் புரில. நம்ம கஷ்டம் எங்க புரியப்போவுது' என்ற வசனம் கூட இதை பிரதிபலிக்கிறது. தவறான சித்தரிப்புகள் என்ற குற்றச்சாட்டுகளை சட்டைசெய்யாது வாழக்கையைத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் பதிவுசெய்திருக்கிறார் வெற்றிமாறன். அதற்கான களமாக சென்னையின் வடக்கு நிலத்தைத் தேர்தெடுத்ததற்குக் கொண்டாடலாம். புதுப்பேட்டை மெட்ராஸ் போன்ற திரைப்படங்கள் இதற்குமுன்னர் இதை பதிவு செய்திருந்தாலும் வடசென்னை தனித்துத்தெரியும்.
 
ராஜன், செந்தில், குணா, வேலு, பழனி, தம்பி, அன்பு,சந்திரா, பத்மா, கண்ணா, முத்து - இந்த மனிதர்களின் நாற்குழி சதுரங்கம் தான் படத்தின் திரைக்கதை.  "இங்க யார் நல்லவன் யார் கெட்டவன்னே தெரில" என்பது போல இதில் யார் கருப்பு, யார் வெள்ளை என்பதை யாருமே புரிந்துகொள்ள முடியாது. striker யார் என்பதை மட்டுமே காலம் முடிவு செய்யும். காலத்தின் சந்தர்ப்பங்கள் தேர்வு செய்யும். அந்த சந்தர்ப்பங்களை அவர்களை வதைக்கும் வழிப்படுத்தும் அரசியலே  முடிவு செய்யும். அப்படி சொல்லும் அரசியலே வடசென்னை. 
 
எப்பொழுதுமே வெற்றிமாறன் திரைப்படங்கள் திரைப்படங்களை மீறிய உணர்வைத்தரக்கூடியவை. குரோதமாயினும் சரி குருதியாயினும் சரி அதை சொல்லும்விதத்தில் ஒரு தீர்க்கம் இருக்கும். எனக்கு வெற்றிமாறனின் பிடித்த விஷயம் அவரின் கதாப்பாத்திரங்களும் கதைசொல்லும் களமும். 'ஆடுகளம்' படம். பேட்டைக்காரனுக்கும் அவரது மனைவுக்குமான ஒரு உறவை அத்தனை கச்சிதமாய் சொல்லியிருப்பார். அதே போல இந்த படத்திலும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் அவர் செய்திருக்கும் detailing அத்தனை பிரம்மிப்பு. கதைசொல்லும் வெற்றிமாறன்,  படம் பார்க்கும் எண்ணவோட்டத்திலேயே பயணம் செய்யவேண்டிய கட்டாயம். காரணம், யார் எந்த கதாப்பாத்திரம், இவர்களின் பின்புலம் என்ன என்று சொல்வதற்கே முதல் பாதியை எடுத்துக்கொண்டார். முதல் பாதி தொய்வு போல தெரிந்தாலும் கதைக்கான நுழைவாயில் அது. 
 
'அடுத்து ஜெயலலிதா தான்னு சொல்லிக்கிறாங்க. அதனால ஒரு இருபத்தஞ்சு வருஷத்துக்கு நாம தான் இங்க' என்று கொலையாளிகள் ரத்தம் சொட்ட சொட்ட கத்தியோடு பேசிக்கொள்ளும் வசனம். ராஜிவ் காந்தி மறைவு என்று அது சார்ந்த கலவரம், முத்துவை அதிமுக அமைச்சர் என்று காட்ட அவர் வீட்டு வாசலில் அதிமுக கொடி, மக்களை வெளியேற்றத்துடிக்கும் அரசியல் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எம்ஜியார் படம் என்று ஒவ்வொரு புள்ளியிலும் அதகளம். 1987 தொடங்கி 2003 வரையிலான வடசென்னையின் முதல் பாகம் ஒவ்வொரு ஆண்டுக்குறிப்பையும் தெள்ளத்தெளிவாக எடுத்துவைக்கிறது. படத்தின் படத்தொகுப்பாளர் இதற்காகவே பாராட்டப்பட வேண்டும். பெரும்பாலான காட்சிகள் இருள்சூழ்ந்த சூழலிலேயே படமாக்கப்பட்டிருந்தாலும் எந்தவொரு உறுத்தலும் இல்லாமல் வடசென்னையின் கடல்காற்றையும், குடிசை வீடுகளையும் அழகாக காட்டியிருக்கிறார் வேல்ராஜ்.
 
படத்தின் முக்கியமான கதாப்பாத்திரங்களான தனுஷ், அமீர், கிஷோர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா என ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். கதை நகரும் ஆண்டுகளின் அடிப்படையில் தனுஷ் தோற்றதிலும், உடல்மொழியிலும், பேச்சிலும் காட்டும் variation தனுஷ் மிகச்சிறந்த நடிகன் என்று நிரூபிக்கிறது. இந்த படத்தின் டீசெர் வெளியான சமயத்தில் கிஷோருக்காக காத்திருப்பதாக சொல்லியிருந்தேன். அந்த காத்திருப்பு வீண்போகவில்லை. ஒவ்வொரு பார்வையிலும் நெருப்பு. 'அவன் பொருள எடுத்து அவனையே செய்யணும்' என்று சொல்லும்பொழுது அவரே கதாநாயகன். கனி அண்ணன் அசலான  தேர்வு. குறிப்பிட்டு சொல்லவேண்டிய கதாபாத்திரமாக ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாக நடித்திருக்கும் கண்ணன் கதாபாத்திரம். (கடல்  படத்தில் நடித்தவர்). மிகப்பெரிய அங்கீகாரம் இந்த படத்தில் கிடைத்திருக்கிறது. அமீர் - தி ரியல் கிங் ஆஃப் சீ. கெத்து. ராஜன் ராஜாவாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் வெற்றிமாறனுக்கு மிகப்பெரிய பக்கபலம். குறிப்பாக இரண்டாம் பாதியில் சந்தோஷ் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஆனால் இந்த நேரத்தில் ஜிவி.பிரகாஷை மிஸ் செய்யாமல் இருக்க முடியவில்லை. வெற்றிமாறனின் வசனங்களுக்காகவும் அதை திரையில் செலுத்திய தைர்யத்திற்கும் நன்றி.
 
ஒரு படம் பல பாகங்களாக எடுக்க வேண்டுமென்று முடிவு செய்துவிட்டால் அந்த படத்தின் அடுத்த பாகதில் என்ன நடக்கப்போகிறது என்ற ஆவலைத்தூண்ட வேண்டும். "why kattappaa killed bahubali" என்பது தான் பாகுபலி இரண்டாம் பாகத்திற்கான முதல் படி.
ஆனால் வடசென்னை படத்திற்கு அப்படி ஏதும் அவசியமாகத் தெரியவில்லை.
ஏனென்றால் வடசென்னை ஒரு பயணம். அன்பு அத்தியாயம்.  'திருப்பி அடிக்கலன்னா இவுனுங்க நம்மள அடிச்சி ஓடவிட்டுனே இருப்பானுங்க' - இதுவே இனிவரும் பாகங்களுக்கான லீட். 
 
அடுத்த பாகங்களுக்காக இப்பொழுதே எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டேன்.
 
சுப்ரமணியபுரம், கம்மட்டிப்பாடம், Gangs of  Wasseypur, city of god என்று ஆளாளுக்கு வடசென்னையை ஒப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நண்பர்களே, இது 'வடசென்னை'. எத்தனை கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் படம்பார்த்த பிறகு மனதெல்லாம் நிறைந்த கதாபாத்திரம் 'வெற்றிமாறன்'
 
'எது தேவையோ அதுவே தர்மம்' என்பது ஆரண்யகாண்டம் சொன்ன சாணக்கியர் வாக்கு.
வடசென்னை சொல்வதெல்லாம் "எது வாழ்க்கையோ அதுவே அரசியல்"
 
ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். இது gangster படம் என்ற கருத்தை ஏற்கவில்லை.இது முழுக்க முழுக்க தனிமனிதர்களின்  ஆசை, கனவு, குரூரம், விஸ்வாசம், துரோகம், பழிவாங்கல் சம்பந்தப்பட்டது.
 
- இளம்பரிதி கல்யாணகுமார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.