close
Choose your channels

யார் கற்றப்பரம்பரை; யார் குற்றப்பரம்பரை? தமிழிசைக்கு கருணாஸ் கேள்வி

Thursday, March 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பாஜக தமிழக தலைவரும், தூத்துகுடி தொகுதி வேட்பாளருமான தமிழிசை செளந்திரராஜன், 'குற்றப்பரம்பரை' குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த தமிழிசை, 'தான் குற்றப்பரம்பரை என்று கூறியது தமிழகத்தை ஆண்ட தி.மு.க ஊழல் குடும்பத்தை தான் என்றும், ஊழல் பரம்பரை, ஊழல் விஞ்ஞானிகள் பற்றித்தான் என்றும், தேசியத்தையும் தெய்வீகத்தையும் இருகண்கள் என கொண்ட நான் என்றும் போற்றும் பரம்பரை பற்றியென வழக்கம்போல் திரித்துக்கூறும் தி.மு.கவினரை கண்டிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழிசையின் குற்றப்பரம்பரை கருத்துக்கு நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனின் வேட்பு மனுவினை ஏற்கக்கூடாது என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரின் மனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல் கனிமொழியின் வேட்பு மனுவில் படிவம்-2 சரியாக நிரப்பப்படாததால் அதுவும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை அவர்கள் வழக்கம் போல பா.ச.க. எஜமான விசுவாசத் திமிரில் எதை பேசவேண்டும் எதை பேசக் கூடாது என்ற அடிப்படை அறிவை மறந்து தனது டிவிட்டரில் ‘நாங்கள் கற்றப்பரம்பரை; குற்றப்பரம்பரை அல்ல’ என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவின் நோக்கம் என்ன?

குற்றம் பரம்பரை என்ற சொற்றொடரின் வரலாறு தமிழிசைக்குத் தெரியுமா? கி.பி. 1871 இல் ஆங்கிலேய இந்தியாவின் வட மேற்குப் பகுதிகளிலும் பஞ்சாப் மாகாணங்களிலும் நாடோடிக் கூட்டமாக இடம் விட்டு மாறி மாறி திருட்டு, கொள்ளை போன்ற செயல்களைப் பரம்பரையாகச் செய்து கொண்டிருந்த மக்களை அடக்குவதற்காக ஆங்கிலேயர்களால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்தியா முழுவதிலும் சுமார் 213 சாதிகளைக் குற்றப் பழங்குடியினர் பட்டியலில் பிரிட்டிஷ் அரசு இணைத்திருந்தது.

சில மாகாணங்களில் மட்டும் இருந்த இந்த சட்டம் 1911 இல் இந்தியா முழுமைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தக் கொடூரச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய குழுவின் பொறுப்பாளர் யார் தெரியுமா? தமிழ்நாட்டுப் பார்ப்பானான இராமானுஜ அய்யங்கார்.

தமிழகத்தில் மதுரை உசிலம்பட்டி கீழ்க்குயில்குடி பகுதியில் முதன் முதலில் இச்சட்டத்தை 1914-ம் ஆண்டு மே மாதம் 4-ம் தேதி ஆங்கிலேயே காவல்துறை அறிமுகப்படுத்தியது.தமிழ்நாட்டில் கள்ளர், பிரமலை கள்ளர், முத்தரைய அம்பலக்காரர், வலையர் என 89 சாதிகள் குற்றப் பரம்பரைச் சட்டப்படி இப்பட்டியலிலிருந்தன. சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர்.

அதில் குறவர், உப்புக் குறவர், ஆத்தூர் மேல்நாட்டுக் குறவர், சி.கே. குறவர், போன்ற சாதிகளும் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தன.

அதன்படி 12 வயதை எட்டிய ஆண்கள் தினமும், காலையிலும் மாலையிலும் காவல் நிலையத்தில் கைரேகை பதிவு செய்ய வேண்டும். ஆனால் கீழ்க்குயில்குடியில் உள்ளிட்ட பகுதியிலிருந்த கள்ளர் உள்ளிட்டவர்கள் ஆங்கிலேயர்கள் குறிப்பிடும் நாடோடிகள் அல்ல.

நிரந்தரமாக அம்மண்ணில் குடியிருந்தோர் ஆவர், ஆடு மாடுகள் வளர்த்தும் வேளாண்மை செய்தும் தங்களுக்கென தனிக் கலாச்சார அடையாளத் துடன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்த மதுரை மாவட்ட பெருங்காம நல்லூர் மக்கள் மீது ஆங்கிலேயே அரசு 3.4.1920-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ம் தேதி துப்பாக்கிச்ச்சுடு நடத்தியது. அதில் மாயக்காள் உள்ளிட்ட 16 பேர் மரணமடைந்தனர்.

1927-ம் ஆண்டு மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் குற்ற பரம்பரைச் சட்டம் அமலில் இருந்தபோது அக்கால அரசியலில் கோலோச்சிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் இந்தச் சட்டத்தை நீக்குவதற்காக பெரும் போராட்டம் நடத்தினார்.

1929-ம் ஆண்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 19 கிராமங்களைச் சேர்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தினரை இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது ஆங்கிலேய அரசு. அதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினார் முத்துராமலிங்கதேவர்.

இந்தச் சட்டத்திற்கு முக்குலத்தோர் சமுதாயத்தினர் யாரும் அடிபணிய வேண்டாம் என கோரிக்கையும் விடுத்தார். இதையடுத்து பெரும் போராட்டம் வெடிக்க அந்தச் சட்டத்தைப் பகுதியாக விலக்கிக் கொண்டது அப்போதைய சென்னை மாகாண அரசு. தேவர் அவர்களின் தொடர் முயற்சிகளால் 2000 கிராம முக்குலத்தோர் இந்தச் சட்டத்தின் கீழ் இருந்த நிலை மாறி 341 ஆகக் குறைந்தது.

இப்படிச் சட்டத்தின் பெயரால் நடந்த இக்கொடுமைகளை எதிர்த்து, 1930களில் இருந்தே பல விவாதங்கள் நடந்தன. 1936-ல் பண்டித ஜவஹர்லால் நேரு, ‘சட்டப் புத்தகத்திலிருந்து இந்தச் சட்டம் நீக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ என்றார்.

இதே போல, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு சுப்பராவ், ஹரிஜன சேவா சங்கத் தலைவர் கி.சி. தக்கா, ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தினர். அதன் விளைவால், 1947-இல் காவல்துறை அமைச்சராக இருந்த பி. சுப்பாராவ், இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

பேகம் சுல்தான் அம்ருதீன் போன்றவர்களால் இதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டபோதும், தீர்மானம் நிறைவேறியது; இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தானாகவே அது காலாவதியானது.

இந்த வரலாற்றை தமிழிசை மறந்தது ஏன்? குற்றம்பரை சட்டத்தை எதிர்த்து அதற்காகவே போராடி உயிர் நீத்த எண்ணற்றவர்களின் மண்ணில் நின்று ஓட்டுக் கேட்கும் தமிழிசை, அவர்களின் ஈகத்தை - வரலாற்றை கொச்சைப்படுத்துவதின் நோக்கம் என்ன?

குற்றப்பரம்பரை என்பது அன்றைய ஆங்கிலேயே அரசு குறிப்பிட்ட மக்களை முடக்குவதற்காகப் பயன்படுத்திய ஒடுக்குமுறை சொல்லாடலே. அதை தன்னுடைய தொகுதியில் தேர்தலுக்காக, குறிப்பிட்ட சாதியினரை அவமானப்படுத்தும் விதமாக அச் சொல்லாடலை பயன்படுத்தியது ஏன்?

வேட்பு மனுவையே சரிவர நிரப்ப தெரியாத நீங்கள் கற்றப்பரம்பரையா? ஓட்டு வாங்குவதற்காகவே இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஊரெல்லாம் சுவரொட்டி வழியாக நான் நாடார் நாடார் என்று அறிவிப்பு செய்வது ஏன்? தேர்தல் தோல்வி பயத்தில் குற்ற பரம்பரை என தேவர் சமூகத்தை சீண்டி நாடார் தேவர் சமூகத்திற்குள் கலவரம் தூண்ட முயற்சி செய்கிறீர்களா?

மிஸ்ஸஸ் தமிழிசை அவர்களே! நாங்கள் குற்றப்பரம்பரை என்று சொற்றொடரை சுமந்து சமூகநீதி விடியலை திறக்கப் போடுகிறார்கள்! ஆனால் நீங்கள் சார்ந்துள்ள பா.ச.க. ஒட்டுமொத்த சமூகத்தையே விழுங்குகிற எதேச்சதிகார ஆரிய முதலை என்பதை நீங்கள் அறிந்தீர்களோ என்னவோ நாட்டு மக்கள் அறிவார்கள்!

நாங்கள் குற்றபரம்பரை இல்லை. இந்தியாவை கொள்ளையடிக்க வந்த ஆங்கிலேயே அரசை எதிர்த்து நின்று போரிட்டு வென்ற குற்றம் சாட்டப்பட்ட பரம்பரை.

ஒன்றைமட்டும் தமிழிசை புரிந்து கொள்ளவேண்டும், நாங்கள் குற்றப்பரம்பரை என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் நீங்கள் தமிழர் உரிமைகளை மட்டுமின்றி; ஒட்டு மொத்த இந்தியாவையே அந்நியர்களுக்கு விற்றபரம்பரை என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

இந்த நாடாளுமன்றத்தேர்தலில் தமிழிசையின் கற்றப்பரம் பரைக்கு தமிழர்களின் கற்பிதம் என்னவென்று தெரியும்; தெரியவைப்பார்கள் யார் கற்றப்பரம்பரை; யார் குற்றப்பரம்பரை

இவ்வாறு நடிகர் கருணாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.